திருப்புமுனை





‘‘எந்தப் பேருந்து நிலையத்தின் பொது கழிப்பிடத்திற்குள் நுழைந்தாலும், மூத்திரம் வருவதற்குப் பதிலாக நெஞ்சு பொறுக்காத ஆத்திரமே வருகிறது. இரண்டு ரூபாய் கட்டணம் கொடுத்து சிறுநீர் கழிக்கப் போனால், கால் வைக்க முடியாத அளவு அருவருப்பாக இருக்கிறது அந்த இடம். பேருந்தில் பயணம் செய்கிற மக்கள் கோடீஸ்வரர்கள் அல்ல. கைகளும் கால்களும் காப்புக் காய உழைத்து சம்பாதிப்பவர்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களை அலட்சியப்படுத்துகிற அந்த காண்ட்ராக்டர் ஓர் அரசியல்வாதியாகவே இருப்பார். அருவருப்பான அந்தக் கழிவறைக்குள் எந்த அமைச்சராவது போவாரா? அவருடைய பெண்டாட்டி, பிள்ளைகள் போவார்களா? அவர்கள் போக முடியாத ஒரு இடத்திற்கு பொதுமக்களைப் போகச் சொல்லுவது அக்கிரமம் இல்லையா?

இந்தக் கோபம் காழ்ப்புணர்ச்சியிலிருந்து வரவில்லை. இயலாமையிலிருந்து வருகிறது. ஒரு கழிப்பிடத்தில் நேர்மையாக இல்லாதவர்கள், எங்களை மற்ற விஷயங்களில் எப்படி ஏமாற்றுவார்கள் என்கிற ஆற்றாமையில் வருகிற கோபம் இது. இதை நான் எழுதினால், ‘ஓர் எழுத்தாளன் இப்படி எழுதலாமா?’ என்று கேட்கிறார்கள். பூக்கள் பூப்பதையும், நதியின் ஓட்டத்தையும், மழையின் சாரலையும் வர்ணிப்பது மட்டுமே எழுத்தாளனின் வேலை இல்லை. எம்முடைய மக்களின் நாசிகள் நுகரும் துர்நாற்றத்தை எழுத்தின் மூலம், அந்த இடத்திற்கு வராதவர்களின் மூக்கும் உணரும்படி எழுதுவதே எழுத்து. அதுவே படைப்பாளனின் முதன்மையான பணி!’’

- அறச்சீற்றத்தின் வெம்மையோடும், எளிய மக்களின் மீதான நலனில் தாய்மையோடும் பேசுகிறார் நாஞ்சில் நாடன். நாஞ்சில் நாட்டு வாழ்வையும், அந்த மண்ணையும், மக்களையும் எழுத்தால் வரையும் கலைஞன். இடைவிடாத இவரின் எழுத்து முயற்சிகள், தமிழர்களுக்குக் கதைகளாகவும் கட்டுரைகளாகவும் அச்சேறுகின்றன. நேர்மையும், உண்மையுமாக இருக்க விரும்பும் ஒருவரின் வாழ்வுக்கும் எழுத்துக்கும் வீச்சு அதிகம். ‘சாகித்ய அகாடமி’ விருதுபெற்ற நாஞ்சில் நாடனின் வீச்சு மிகுந்த எழுத்துகள், தமிழ்ச் சமூகத்தின் முக்கியமான படைப்புக் குரல்.

‘‘நாஞ்சில் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் வீரநாராயணமங்கலம் நான் பிறந்து வளர்ந்த கிராமம். அப்பா விவசாயி. ‘ஓரனேர் சம்சாரி’ என்று ஒரு சொல் வழக்கு நாஞ்சில் நாட்டில் உண்டு. ஒரு ஏர் கொண்டு உழுகிறவனுக்கு அந்த அடைமொழி. நிலம் உழுவதில் தொடங்கி, விதை போட்டு, உரமிட்டு, தண்ணீர் பாய்ச்சி, பயிர் வளர்த்து, களையெடுத்து, அறுவடை செய்வதுவரை உழவு பற்றிய சகல வேலைகளையும் அறிவேன். விடுமுறை நாளில் உரம் சுமக்கப் போனால் ‘நாலணா’ காசு கிடைக்கும். பள்ளிக்கூடம் போய் படித்தாலும், ஓய்வு நேரத்தில் அப்பாவுக்கு உதவியாக இருந்தாக வேண்டும். கடினமான முறையில் வாழ்க்கையைக் கற்றுக் கொண்டவன் நான். இந்த நாட்டில் விவசாயிகளாக உள்ள அனைவரும், கடினமான முறையில் மட்டுமே வாழ்வைக் கற்றுக்கொள்ள முடியும். ஒரு ரூபாய் முதலீடு போட்டு ஆயிரம் ரூபாய் லாபம் சம்பாதிக்கிற ரியல் எஸ்டேட் போன்ற தொழில் அல்ல விவசாயம். மாதக்கணக்கில் உழைத்து நெல் அறுவடையைச் செய்து தருகிற வீட்டில், உணவு இல்லாமல் பட்டினியாக படுத்திருக்கிறோம்.



சிறுவனாக இருந்தபோது, பசிக் கொடுமையில் ஒரு கல்யாண வீட்டில் சாப்பிடஉட்கார்ந்தவனை எழுப்பி அனுப்பிய வலியை இன்னும் மனசில் சுமந்து கொண்டு திரிகிறேன். சூடு வைத்தது போல ஆறாத ரணம் அந்த அவமானம். விருந்து உண்டு முடித்து தூக்கியெறிந்த இலையில் மிச்சமுள்ள உணவை பசியோடு எடுத்து சாப்பிடும் யாரையாவது கண்டுவிட்டால், இப்போதும் தொண்டையடைத்து கண்களில் நீர் கோர்த்துக் கொள்ளும். பசி என்னைத் துரத்தி இருக்கிறது; போட்டுப் புரட்டி எடுத்திருக்கிறது. நாளெல்லாம் நிலத்தில் உழைக்கிற வீட்டில், அடுப்பு எரியாத நாட்கள் அதிகம். எங்கள் வீட்டில் மட்டுமில்லை, ‘ஓரனேர் சம்சாரியாக’ வாழ்கிற யாருக்கும் இதுதான் பொது.

100 வீடுகள் மட்டும் இருக்கிற சின்ன கிராமத்தில், வசதி வாய்ப்புகள் பெரிய அளவில் இல்லாமல் இருந்தாலும், படிப்பதற்கு நூலகம் இருந்தது. அதை ‘படிப்பகம்’ என்று சொன்னால் பொருந்தும். ‘தமிழர் நூல் நிலையம்’ என்று பெயர். புத்தகம் படிப்பதன் ருசி அறிந்த இடம் அது. திராவிட இயக்கத்தின் தாக்கம் இல்லாமல் அறுபதுகளில் இருப்பது கடினம். விரும்பினாலும், வெறுத்தாலும் திராவிட இயக்கம் தவிர்க்க முடியாத சக்தி. சின்ன வயதில் அரசியல் கூட்டங்கள் கேட்கப்போனால், தமிழ் இலக்கியத்தின் முக்கியமான பாடல்கள்அறிமுகம் ஆகும். ‘கலிங்கத்துப் பரணி’யிலிருந்து பேச்சாளர் ஒரு பாடலைச் சொன்னால், நூல் நிலையம் வந்து அந்தப் பாடலை எடுத்துப் படித்து மனதில் பதிய வைத்துக் கொண்டிருக்கிறேன். பாடப்புத்தகங்கள் தாண்டிய உலகத்தை அங்கிருந்த புத்தகங்களே அறிமுகப்படுத்தின. பள்ளியில் நன்றாக படிக்கிற மாணவன். 2 மைல் தூரம் நடந்து பள்ளிக்கூடம் போகவேண்டும். ‘ஒரு சைக்கிள் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்கிற கனவு, வெறும் கனவாகவே முடிந்து போனது.

என் வீட்டில் முதல்முறையாக எழுத்து பழகியது நானாகத்தான் இருக்கும். அப்பா மாடு மேய்க்கப் போனால், திருக்குறள் புத்தகம் கொண்டு போவார். படிக்கிற ஆர்வம் அவரிடம் இருந்தது. அனுபவத்தால், வாழ்க்கை முறையால் வந்த பட்டறிவு அதிகம் இருந்தது. வயலில் பாடுபட்டு உழைத்து விளைவித்த நெல்மணிகள், அறுவடையின்போது சிந்தி சிதறும். ‘இப்படி சிந்தாமல் அறுவடை செய்ய முடியாதா?’ என்று அப்பாவிடம் கேட்டேன். ‘இந்த உலகத்துல மனுஷன் மட்டும் ஜீவராசி இல்லை. நாம் உழைக்கிறது நமக்குத் தேவையான அளவு கிடைச்சதுக்கு அப்புறம் பகிர்ந்து கொடுக்கணும். இப்படி சிந்துற நெல்மணி எல்லாம் வீணாகும்னு அர்த்தம் இல்லை. நம்மள சுத்தி இருக்கிற காக்கா, குருவி உள்ளிட்ட பறவைகளுக்கு இதுதான் உணவு. அதுங்களும் ஜீவிக்கணும் இல்லையா?’ என்று சர்வசாதாரணமாக, ஒரு வாழ்வியல் உண்மையை மனதில் ஆழமாகப் பதிய வைத்து விடுவார். ‘பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை’ என்ற திருக்குறளும் பரிசாகக் கிடைக்கும்.



திராவிட அனுதாபியாக இருந்தவன், படிப்பனுபவம் கிடைக்கக் கிடைக்க... கம்யூனிச சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டேன். ‘பையன் படித்து விட்டால், வீட்டுக் கஷ்டங்கள் தீர்ந்துவிடும்’ என்று சிரமப்பட்டு என்னை எம்.எஸ்சி படிக்க வைத்தார்கள். வீட்டில் மூத்த பையன். சித்தப்பாவின் உதவியில் கல்லூரி வரை படிக்க முடிந்தது. 1970ல் எம்.எஸ்சி. படிப்பை ‘நேஷனல் லோன் ஸ்காலர்ஷிப்’ கடன் வாங்கி படித்தேன். நல்ல மதிப்பெண்கள் இருந்தும், இரண்டு வருடங்கள் வேலை இல்லாமல் அலைந்து திரிந்தேன். நான் இருந்தது ஒருவகையில் மோசமான காலகட்டம். பணம் இருந்தால் அரசாங்க வேலை கிடைக்கும்; அல்லது பெரிய மனிதர்களின் சிபாரிசு இருக்க வேண்டும். எவ்வளவு முயற்சி செய்தாலும் வாழ்க்கை கசக்கி எறிகிறதே என்கிற பயத்தோடு வாழ்வை எதிர்கொண்ட கசப்புணர்வு மிகுந்த காலம் அது.

பசி ஒரு மனிதனை எந்த இழிவை நோக்கியும் இழுத்துப் போகும்; படித்த விஷயங்கள் சுயமரியாதை குறையாமல் வாழ்ந்துவிடச் சொல்லி வற்புறுத்தும். இந்த இரண்டுக்கும் நடுவில் நடக்கிற மனப்போராட்டம்தான் உலகத்தைப் புரியவைத்தது. ‘இனி தமிழ்நாட்டில் வேலை தேடிப் பயன் இல்லை’ என்று நினைத்த அப்பா, மும்பையில் இருந்த நடராஜ ஐயரிடம் உதவி கேட்டார். வடிவீஸ்வரம் அவரது சொந்த ஊர். மும்பையில் நல்ல வேலையில் இருந்தார். எம்.எஸ்சி. படித்தவன், இரண்டு வருடமாக வேலையில்லாமல் இருப்பதை அதிர்ச்சியாக நிமிர்ந்து பார்த்த ஐயர், ‘இந்த ஊர்ல படிச்சவனுக்கு எவன்டா மதிப்பு தர்றான்? பம்பாய்க்கு வந்துடு’ என்ற ஐயரின் வார்த்தைகள்தான் என் வாழ்வில் முதல் திருப்புமுனை.

தாகத்தோடு இருந்தவனுக்கு எங்கிருந்து தண்ணீர் கிடைத்தால் என்ன? 1972ல் புதிய நம்பிக்கையோடு பம்பாய் கிளம்பினேன். இந்தியாவில் மாநகரம் என்றால், அதன் முழு அர்த்தம் பொருந்தும் ஒரே நகரம். பிரமிப்பையும், அச்சத்தையும், நட்பையும், நம்பிக்கையையும் சேர்த்துத் தந்த மாநகரம். அங்கு போனதுமே வேலை கிடைக்கவில்லை. ஆனால் நாகர்கோவிலில் இருந்த பயம், அங்கு இல்லை. ஏதோ ஒரு வேலையைக் கொடுத்து வாழ்வைக் கரையேற்றிவிடும் என்ற நம்பிக்கை இருந்தது. மும்பையில் பிழைக்காதவன் உலகத்தில் எங்குமே பிழைக்க முடியாது. மாநகர வாழ்விற்கு மெதுவாக பழக்கப்பட்டேன். மகிழ்ச்சியோ, துக்கமோ எதுவாக இருந்தாலும் சீக்கிரம் கடந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட வேண்டும். கூட்ட நெரிசலோடு ரயில் கடந்து போகும் வெட்டவெளியில், குடையில் முகம் மறைத்து ஆண்களும் பெண்களும் காலைக்கடன் கழிக்கிற அதிர்ச்சியை சாதாரணமாகக் கடந்து பழக்கப்பட்டேன். மண்ணும் மணமும் உடைய நாஞ்சில் நாட்டு வாழ்க்கையில் பழகியவன், துன்பம், துரோகம், இயலாமை என எல்லாவற்றையும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு, கிடைக்கிற இடத்தில் வேர்பிடித்து வளர்கிற மாநகரத்து வாழ்வை எளிதில் எப்படி ஜீரணித்தேன் என்பது எனக்கே ஆச்சர்யம். அதுதான் அந்த மாநகரத்தின் குணம்.

மும்பையில் போய் இறங்கியதும், மும்பை தமிழ்ச் சங்கத்தில் உறுப்பினர் ஆனேன். என்னுடைய படிக்கும் ஆர்வத்திற்கு, அங்கிருந்த நூலகத்தில் அருமையான நூல்கள் இருந்தன. படிக்கிற பழக்கம் கைரேகையைப் போல என்னிடம் ஒட்டிக்கொண்டது. ‘பேச்சுலர் அமுதம்’ என்று சொல்லக்கூடிய ஒரு ‘வடாபாவ்’ சாப்பிட்டு, வயிறு முட்ட தண்ணீர் குடித்து, மகிழ்ச்சியாக 400 பக்கம் படித்துவிடுவேன். நடராஜ ஐயரின் பரிந்துரையில், ‘டபிள்யூ.ஹெச்.பிராடி அண்டு கம்பெனி லிமிடெட்’ என்கிற ஒரு தனியார் நிறுவனத்தில், ஒப்பந்த ஊழியராக கணக்கெழுதும் வேலையில் சேர்ந்தேன். வாழ்வில் முதல் பிடிப்பு கிடைத்தது. அதுவரை நான் புத்தகம் வாசிப்பவன் மட்டுமே. எழுத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை!
(திருப்பங்கள் தொடரும்...)
படங்கள்: புதூர் சரவணன்