கமலின் நான்கு நிமிட ஷாட்!





‘‘முதல் முத்தம், முதல் காதலைப் போலத்தான் ஒரு இயக்குனரின் முதல் நாள் ஷூட்டிங் அனுபவமும் மறக்க முடியாதது. இயக்குனராக நான் முதல் ஷாட் வைத்த நினைவு களை இந்தப் படம் கிளறுகிறது’’ என அன்றைய நிகழ்வுகளை அசைபோடத் தொடங்கினார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா. ‘‘எனது முதல் படமான ‘சத்யா’ தொடக்க விழாவில் எடுத்த படம் இது. வாழ்க்கையில் எல்லோருக்கும் ஒரு குருதான் இருப்பார்கள். அந்த விஷயத்தில் நான் கொடுத்து வைத்தவன். எல்.வி.பிரசாத், பாலசந்தர் என எனக்கு இரண்டு குருக்கள். ஸ்டூடியோ, லேப் என்று சினிமாவில் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த எல்.வி.பிரசாத்திடம்தான் ஆரம்பத்தில் உதவியாளராக வேலை செய்தேன். அப்போது மும்பையில் அலுவலகம் இருந்தது. பிரசாத் சார் தயாரிப்பில் பாலசந்தர் சார் ‘ஏக் தூஜே கே லியே’ படத்தை இயக்கியபோது, அவருக்கு உதவியாக தமிழ், இந்தி தெரிந்த உதவி இயக்குனர் தேவைப்பட்டது.

பாலசந்தரிடம் என்னை சேர்த்துவிட்டார் பிரசாத். படம் ரிலீஸாகி ஹிட்டானதும், ‘இவன் என்கூட இருக்கட்டும்’ என பிரசாத் சாரிடம் அனுமதி வாங்கி கே.பி. சார் என்னை அழைத்து வந்துவிட்டார். படிப்படியாக முன்னேறி அவரது இணை இயக்குனரானேன். ‘புன்னகை மன்னன்’ வரை அவருடன் பணிபுரிந்தேன். என்னுடைய வொர்க் பிடித்துப்போய்தான் கமல் சார் ‘சத்யா’ வாய்ப்பு கொடுத்தார்.
வீனஸ் ஸ்டுடியோவில் தோட்டாதரணி போட்ட வீடு செட்டில்தான் முதல் நாள் ஷூட்டிங். இயக்குனராக முதல் படம், முதல் ஷாட் என்ற பயமெல்லாம் எனக்குள் எட்டிப் பார்க்காமல் மைண்டை ஸ்டெடியா வச்சிக்கிட்டேன். கமல் சார் வீட்டுக்குள் வந்து, பெட்ரூமுக்கு போய்விட்டு வெளியே வந்து, டாய்லெட்டுக்கு போய்விட்டு ஹாலுக்குத் திரும்பி, சாப்பிட உட்கார்ந்து, வடிவுக்கரசி திட்டியதும் சாப்பிடாமல் கோபித்துக்கொண்டு வெளியே போவது வரை ஒரே ஷாட்டில் எடுக்க பிளான் பண்ணினேன். ரிகர்சல் பண்ணிவிட்டு ஷாட்டை ஷூட் பண்ணும்போது டிராலி இடிக்க ஆரம்பிச்சது.
எனக்கு உடனே ஒரு யோசனை தோன்றியது. டிராலியை முழு நீளத்துக்கும் போடாமல், பாதி தூரம் போனபிறகு அடுத்த பாதிக்கு டிராலியைப் போட்டு கேமரா மூவ் பண்ணிடச் சொன்னேன். கேமராமேன் அன்வர் என்னைத் தட்டிக்கொடுத்துப் பாராட்டி, அதன்படியே எடுக்க ஒத்துழைத்தார். டிராலியைப் போட கொஞ்சம் லேட் பண்ணினாலோ, சொதப்பினாலோ, ஷாட் நல்லா வராது. அப்படியொரு சூழ்நிலையில் துணிந்து ஒரே ஷாட்டில் எடுத்த அந்தக் காட்சி மட்டும் படத்தில் நாலு நிமிஷம் வரும்.’’
- அமலன்    படம் உதவி: ஞானம்