வந்தாச்சு




புதுப்புனல்

விரிவான கட்டுரை, அழுத்தமான கவிதை, கவனிக்கத்தக்க மொழிபெயர்ப்பு என ஆக்கப்பூர்வமான படைப்புகளோடு வெளிவரும் கலை, இலக்கிய மாத இதழ். தமிழ்ச்சிறுகதை வடிவத்தின் கோட்பாட்டை வடிவமைத்தவர்களில் ஒருவரான கு.அழகிரிசாமியைப் பற்றிய நீண்ட கட்டுரை, தெளிவான புரிதலை உள்ளடக்கியுள்ளது. ஜப்பானிய படைப்பாளி ஜின் கெய்த்தாவின் சிறுகதையை எஸ்.சங்கரநாராயணனும், கேத்தரின் மௌரீஷ் எழுதிய ஆட்டிசத்தின் கோரத்தை விவரிக்கும் லெட் மீ ஹியர் யுவர் வாய்ஸ் நூலின் ஒரு பகுதியை க்ருஷாங்கினியும் மொழிபெயர்த்திருப்பது பலே ரகம். கோவை ஞானி எழுதியுள்ள ‘அகமும் புறமும்’ இதழின் முத்தாய்ப்பு. கவிதைத் தேர்வும் நேர்த்தி!  (ஆசிரியர்:ஆர்.ரவிச்சந்திரன், தனி இதழ்: ரூ.15/-, ஆண்டு சந்தா: ரூ.180/-,  முகவரி: 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, ரத்னா கபே எதிரில், (முதல்மாடி) திருவல்லிக்கேணி, சென்னை-5, பேச: 9962376282)

ஆதிபகவன்

மறுபடியும் அமீர், யுவன் கூட்டணி இணைந்த ‘ஆதிபகவனில்’ அறுசுவையாய் ஆறு பாடல்கள். ‘ஏய் சலாமே ஏய் சலாமே...’  கிளப் பாடலில் ‘ஆசைகள் அசைவம் தப்பேயில்லை... தப்பில்லா வாழ்க்கையில் உப்பே இல்லை...’   என   தத்துவம் பொழிந்திருக்கிறார் சினேகன். மனாசி ஸ்கோட், ராகுல் நம்பியார் குரலில் வழிகிறது ஒரு லார்ஜ் போதை. அறிவுமதி எழுதிய ‘காற்றிலே நடந்தேனே...’ பாடலில் உதித் நாராயணன் ‘பர்ர்வாயில்ல’ மாதிரி தப்புப் பண்ணியிருக்கிறாரா என்று கவனித்துக் கேட்டோம். ‘பரவாயில்லை’! ‘யாவும் பொய்தானா...’ பாடலில் தபேலா இசை ஈர்க்கிறது. ஷரீப், ஸ்ரேயா கோஷல் பாடியுள்ள ‘ஒரு துளி விஷமாய்...’ பாடல், ஸ்லோ பாய்ஸனாய் கேட்கக் கேட்க வசீகரித்து
விடுகிறது.

oyechotu


இனி, இட்லிக் கடைகூட இணையத்தில் வந்துவிடும் என்பதற்கு ஒரு முன்னோட்டம்  www.oyechotu.com. மும்பையைச் சேர்ந்த ராக் ஃபுட்ஸ் என்ற நிறுவனத்தால் நடத்தப்படும் இந்தத் தளத்தில் உள்ள இனிப்பு, கார வகைகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொடும் போலிருக்கிறது. ஒவ்வொன்றையும் குறைந்தபட்சம் 200 கிராம் முதற்கொண்டு வாங்கலாம். உலகின் 15 நாடுகளுக்கு தனது தின்பண்டங்களை டெலிவரி செய்யும் இந்தத் தளம், புலம் பெயர்ந்த தமிழர்களிடம் ரீச் ஆன அளவுக்கு உள்ளூர் தமிழர்களிடம் ரீச் ஆகவில்லை. காரணம், இந்தியாவில் அகமதாபாத்தைத் தவிர வேறெங்கும் இதன் சேவை இல்லை!

தொட்டதெல்லாம் பணமாகும் - பாபி ஸ்ரீனிவாசன்


‘குங்குமம்’ இதழில் வெளிவந்து பெரும் வரவேற்பைப் பெற்ற முதலீட்டுத் தொடர், இப்போது நூலாக வெளிவந்துள்ளது. பாதுகாப்பான சேமிப்பு, லாபம் தரும் முதலீடு, குடும்ப பட்ஜெட்டில் கவனிக்க வேண்டிய விஷயங்கள், மோசடி நிறுவனங்களிலிருந்து தப்பிக்கும் வழிமுறைகள் என பணத்தைப் பாதுகாக்கவும், சேமிக்கவும், பெருக்கவும் வழிகாட்டுகிறது இந்நூல். பணவீக்கம், வட்டி விகிதம், டாலர் மதிப்பு, சர்வதேசச்சந்தை பற்றியும், இன்சூரன்ஸ், பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், தங்கத்தின் மீதான முதலீடுகளில் உள்ள சாதக, பாதகங்களையும் இது விரிவாக விளக்குகிறது. நிதி மேலாண்மை ஆலோசகராகப் பணிபுரியும் இந்நூலின் ஆசிரியர் பாபி ஸ்ரீனிவாசன், நிதித் துறையில் 40 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் கொண்டவர். நூலை விறுவிறுப்பான எளிய தமிழில், தொகுத்திருக்கிறார் பத்திரிகையாளர் சி.முருகேஷ்பாபு. ஒரு முழுமையான சேமிப்பு வழிகாட்டி!  
(192 பக்கங்கள், விலை: ரூ.150/-, வெளியீடு: ரிகிலி பப்ளிகேஷன்ஸ், 229, கச்சேரி ரோடு, மயிலாப்பூர், சென்னை-4, பேச: 98409 78016, 044-42209191, 44676767)