3000 கலர் பட்டு... 5 லட்ச ரூபாய் சேலை... நவரத்னா பாவாடை...



ஹாட் அறிமுகங்கள்!



சில கண்டுபிடிப்புகள் மனதை மகிழ்விக்கின்றன. சில வேலைகளைச் சுலபமாக்குகின்றன. சில வாழ்க்கையையே ரசிக்க வைக்கின்றன. மார்க்கெட்டுக்கு வந்த உடனேயே அவற்றை வாங்கிப் பயன்படுத்துவது அலாதி சுகம். அதற்காகவே டெடிகேட் செய்யப்பட்ட பகுதி இது. இந்த வாரம் தீபாவளி ஷாப்பிங்கில் இனிதே துவக்கம்!

வழக்கம்போலவே இந்த தீபாவளிக்கும் பெண்களுக்கே ஏக புதுசுகள். சுரிதார், ஜீன்ஸ், லெகின்ஸ் மோகம் கொஞ்சம் குறைந்திருக்கிறது போல. சேலையிலும் பாவாடையிலும்தான் புதுப்புது வெரைட்டிகள்.

*  ஹம்சவர்ணா பட்டு

ஒரே சேலை அல்லது பாவாடைதான். அதில் இருக்கும் கலர்களின் எண்ணிக்கை மூவாயிரம். அன்னம் மற்றும் சக்கரம் உருவம் பதிக்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளின் பாவாடைகள் ரூ.4000க்கு கிடைக்கிறது. புடவை ரகங்களோ ஏழாயிரம் முதல் முப்பதாயிரம் ரூபாய் வரை. ‘ஆரெம்கேவி’யின் இந்த வருட தீபாவளி வரவுகளில் ‘ஹம்சவர்ணா’ காட்டில் மழை.

*  ஜடாயு கலம்காரி

‘ஆரெம்கேவி’யின் இன்னொரு தீபாவளி ஸ்பெஷல் இது. பருத்திப் புடவையின் மென்மை தருவதாகச் சொல்கிறார்கள், கலம்காரியை ஒருமுறை கட்டிப் பார்த்தவர்கள். விலையுயர்ந்த கற்களோடு கிராண்ட் லுக் தருகிறது. எழுபது கலர்கள் அணி வகுத்திருக்க, வேலைப்பாடு வெளியில் தெரியாத வண்ணம் நெய்யப்பட்டிருப்பது கூடுதல் ஸ்பெஷல். விலை ரூ.7000 முதல் 30 ஆயிரம் வரை. மெரூன், பச்சை, ஊதா நிறங்களில் அதிகம் கிடைக்கின்றன. இவை தவிர, லினோலைட், லினோ வர்ணா என மேலும் சில வகைகளும் ஆரெம்கேவி யில் வந்துள்ளன.

*  விவாகா சாண்டல்வுட்
சென்னை சில்க்ஸ் கடைகளில் நுழைந்தால் எங்கும் சந்தன மணம். ஒரிஜினல் சந்தன வில்லைகள் பதிக்கப்பட்ட இந்தக் காஞ்சிப்பட்டே அதற்குக் காரணம். புடவையில் பொறிக்கப்பட்டுள்ள மயில் உருவத்தில் இருக்கும் நிஜத் தோகைகளைத் திரும்பத் திரும்பத் தொட்டுப் பார்க்கும் பெண்கள், புடவையை வாங்காமல் இடத்தை விட்டு நகர்வதில்லை. விலை ரூபாய் முப்பதாயிரத்திலிருந்து ஆரம்பிக்கிறது.



*  விவாகா எக்ஸ்க்ளூசிவ் ப்ரைடல்

சுத்தமான தங்கம், வெள்ளி கலவையில் உள்ள ஜரிகை பார்ப்பதற்கே தகதகவென மின்னுகிறது. விலை ரூ. 5 லட்சம். உடுத்தித் தேய்த்தபின் பழைய விலைக்குப் போட்டால், கிடைக்கும் தங்கத்துக்கும் வெள்ளிக்கும் அன்றைய ரேட் என்னவோ அதைத் தருவதாகச் சொல்கிறார்கள். அதாவது, இருந்தாலும் இத்துப் போனாலும் ஆயிரம் பொன்!
இவற்றோடு ‘விவாகா உக்வாடா’ திருமணப் புடவையையும் தலை தீபாவளிக்காக வாங்கிச்செல்கிறார்கள் புதுமணத் தம்பதிகள். இதுவும் தங்க-வெள்ளிக் கலப்பில் உருவானதே. சென்னை சில்க்ஸில் கூட்டம் சேர்க்கும் இன்னொரு வகை ‘ஆதிரா’ கிஃப்ட் புடவைகள். 900, 1000 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. ஊதா, பச்சை, சந்தனக்கலர்களில் கிடைக்கிற இவை எல்லாத் தரப்பு மக்களையும் கவர்ந்திருக்கிறது.

*  வசுந்தரா பட்டு
போத்தீஸின் தீபாவளிப் பரிசாக வந்திருக்கும் ‘வசுந்தரா’வில் சுமார் இருபது வகைகள், நாற்பது வண்ணங்களில் கிடைக்கின்றன. ஐயாயிரம் ரூபாயிலிருந்து ஆரம்பிக்கிறது விலை. இவர்களின் இன்னொரு வகை மயூரி சாஃப்ட். லைட் வெயிட்டான இவை எல்லோரும் வாங்கக்கூடிய விலையில் இருப்பது சிறப்பு. ரூபாய் இரண்டாயிரத்திலிருந்து கிடைக்கிறது.

*  நவரத்னா பாவாடைகள்
குழந்தைகள் அதிகம் விரும்புகிற போத்தீஸின் புதுசு இவை. பச்சை, ஆரஞ்சு, ஊதா, சிவப்பு உள்ளிட்ட இருபது வண்ணங்களில் கிடைக்கிறது. விலை ரூ.1500 முதல் தொடங்குகிறது.
- ராஜன்