மனதைத் தொடுகிற உணர்வுகளுக்கும் காதலுக்கும் இன்னும் மதிப்பிருக்கு!





‘‘இங்கே கதைக்காகவோ, களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை. ஒருத்தனை ஆழமா உத்துப் பார்த்தீங்கன்னா ஒரு கதை, அவனோட வீடு வரைக்கும் தேடிப் போனா களம். வயசும் மனசும் சண்டை போடுற பருவத்துல, ரசனையா, காதலா எழுதி லெட்டர் போட்டுக்குவோம். கிரீட்டிங் கார்டுகளை சேகரிச்சு வைப்போம். மயிலிறகோட, அவ கூந்தலையும் சேர்த்து வைப்போம். அது பைத்தியக்காரத்தனம்தான். ஆனா, அதுதானே ஆகப்பெரிய அன்பு!’’
- ரசனையாகப் பேசுகிறார் ‘மத்தாப்பூ’ இயக்குநர் நாகராஜ். ‘தினந்தோறும்’ என்ற தனது முதல் படத்திலேயே கவனம் ஈர்த்தவர்.

‘‘உங்க ‘தினந்தோறும்’ மாதிரியிருக்குமா மத்தாப்பூ?’’
‘‘நிச்சயமா காதல் ஒருத்தனை மாத்தும். இங்கே பெற்றோர்கள் காதலை அவங்களுக்கு எதிரானதுன்னு நினைக்கிறாங்க. நாம் நினைக்கிறபடிதான் அவங்க வாழ்க்கையை அமைச்சுக்கணும்னு எதிர்பார்க்கிறாங்க. அதை மீறினால் அவங்களுக்கு காதல் ஒரு தப்பான விஷயம். எனக்கு மனிதக் காதல் உணர்வுகளை பயப்படாம சொல்லணும்னு ஆசை. அது இந்தப் படத்தில் இருக்கு. சினிமான்னா நிச்சயம் சமூகத்தைப் புரட்டிப் போடணும்; கேள்வி கேட்கணும். அப்படி ஒரு சினிமா செய்யிறதுதான் நமக்குக் கௌரவம். அந்த அளவுக்கு முடியலைன்னா, நம்ம வாழ்க்கையை அப்படியே குறுக்குவெட்டா எடுத்து வச்சுரணும். நான் அதைத்தான் செய்திருக்கேன். இப்ப இருக்கிற நடைமுறை வாழ்க்கையை பாசத்தோட, பரிதவிப்போட சொல்லி யிருக்கேன்.’’

‘‘நீங்க நினைச்ச சினிமாவை எடுக்க முடிஞ்சுதா?’’
‘‘என் கேரக்டர்களுக்கு உயிர் கொடுக்க ஆள் வேணும். ஆனா உணர்வுகளை உள்வாங்கிட்டுத்தான் செட்டுக்கு வரணும். ஜெயன்னு ஒரு புதுப் பையன் கிடைச்சார். இயல்பாவே அருமையாக திறம்படவும் அவரால நடிக்க முடிஞ்சுது. கொஞ்சம் கூத்துப்பட்டறை பக்கமும் போகச் சொல்லி பயிற்சி கொடுத்தேன். வந்து நின்னது வேற ஜெயன். எளிய ரசிகனுக்கும், பழுத்த சினிமா ரசிகனுக்கும் பிடிச்சுப் போற அனுபவத்தோடு நடிச்சார். கேமராவில் பார்த்த மாறவர்மனுக்கு புருவம் நெற்றியைத் தாண்டிடுச்சு. எனக்கு சந்தோஷம் வந்துடுச்சு. காயத்ரிக்கும் முக்கியமான கேரக்டர். படத்தில் உயிர் இருக்கிற முடிச்சு அவங்ககிட்டே இருக்கு. ‘பதினெட்டு வயசு’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’னு பல படங்களில் முத்திரையை பதிச்சிட்டே வந்திருக்காங்க. இவ்வளவு நாளைக்குப் பிறகு மீண்டு வரும்போது என் படம் என்னென்ன அனுபவங்களைத் தரணும்னு எனக்குள்ளே ஒரு கணக்கு இருக்கு. அதுக்குத் தகுதியா வந்திருக்கு மத்தாப்பூ.’’‘‘பதிமூணு வருஷத்துல சினிமா வேற இடத்துக்குப் போயிருக்கிற விஷயத்தை உணர்ந்தீங்களா?’’



‘‘யாரும் இங்கே யாருடைய இடத்தையும் பிடிக்க முடியாதுங்கறதுதான் உண்மை. மனதைத் தொடுகிற உணர்வுகளுக்கும் காதலுக்கும் இன்னும் மதிப்பிருக்கு. இப்ப வந்திருக்கிறவங்களோட ஆட்டம் தெரிஞ்சது; சூட்சுமம் புரிஞ்சுது. எல்லாத்தையும் கணக்கில் எடுத்துக்கிட்டு செய்ததுதான் ‘மத்தாப்பூ’. எனக்கு யார்மேலயும் பொறாமை கிடையாது. அதே நேரத்தில் என்மீது இருக்கிற நம்பிக்கையை நான் குறைத்துக் காட்டவும் தயாரில்லை.’’

‘‘ஒரு நல்ல படம் கொடுத்துட்டு, இப்ப மீண்டு நிற்கிற இந்த இடைவெளியில் நீங்க உணர்ந்தது என்ன?’’ ‘‘யாரா இருந்தாலும் தொழிலை நேசிக்கணும். போதையில உருண்டால் யாராலும் மீண்டு எழமுடியாது. அதுவும் என்னை மாதிரி இருந்தவங்களுக்கு இந்த வாய்ப்பு பொக்கிஷம். ஒரு புது உலகத்துக்கு என்னை அறிமுகப்படுத்துற விஷயம். ஏதோ ஒட்டிக்கொண்டிருந்த துளி நேர்மைக்குத்தான் இந்த சினிமா வாய்ப்பு திரும்ப வந்ததுன்னு நம்பறேன்.

இப்படி இருக்கணும்னு யாரும் யாருக்கும் சொல்லித் தர முடியாது. ஆனா, எந்தத் தொழிலுக்கும் பொறுப்பு, ஒழுக்கம் இல்லன்னா ஏதோ ஒரு கணத்துல உக்கார்ந்து கண்ணீர் சிந்தி முழங்காலைக் கட்டிக்கிட்டு முகத்தை மூடி சங்கடப்பட வேண்டியிருக்கும். யாரையும் இம்சிக்காத இந்த வாழ்க்கை எனக்குக் கடவுள் அருளியது. என்மேல அவமானங்களை அள்ளி வீசினவங்களுக்கு பதிலடி அல்ல இந்த ‘மத்தாப்பூ’. நான் திரும்பி ‘நல்லபடியா வந்துட்டேன்’ என அன்போடு கொடுக்கிற பொக்கேதான் இந்தப் பூ.’’ ‘‘மியூசிக் எப்படியிருக்கும் நாகராஜ்?’’ ‘‘வேலாயுதம்னு புத்தம் புதியவர். நா.முத்துக்குமார், ப்ரான்சிஸ் கிருபான்னு பாடல் களைக் கொடுத்தாங்க. ட்யூன்களை கேட்கும்போது இசைக்கு இவர் புதியவராக இல்லைன்னு புரிஞ்சுது. உள்ளுக்குள்ளே ஒருவகையான நெருப்பு எரிஞ்சுக்கிட்டே இருக்கு இவர்கிட்டே. இறுக்கமே இல்லாம வேலை நடக்குது. அதுதான் ஆச்சரியம்!’’
- நா.கதிர்வேலன்