இந்திக்கும் போவேன் : விஜய் அதிரடி





யார் சொன்னது விஜய் அதிகமாக பேசமாட்டார் என்று? ‘துப்பாக்கி’ ரிலீசுக்காக காத்திருக்கும் தருணத்தில், விஜய்யை சந்தித்தபோது பேச்சில் பெய்தது ஆலங்கட்டி மழை. வெரி ஸ்மார்ட் விஜய்யின் முகத்தில் முன்பைவிட ஃபிரஷ் லுக். சினிமா, குடும்பம், அரசியல் என எல்லா கேள்விகளுக்கும் விரிவான விடையளித்த விஜய்யிடம் தென்பட்டது  வானிலை மாற்றம்.

‘‘என்னோட கேரியரில் ‘துப்பாக்கி’ முக்கியமான படமா இருக்கும். ரெண்டு பேருக்கும் ஒருத்தருக்கொருத்தரைப் பிடிக்கும். பார்க்கும்போதெல்லாம் படம் பண்ணலாம்னு பேசிக்கிட்டே இருப்போம். அதுக்கான நேரம் இப்பதான் அமைஞ்சிருக்கு. படத்துல நான் ராணுவ வீரன். அதனால ஸ்டோரி ஃபுல்லாவே மிலிட்டரி பற்றின்னு நினைச்சுடாதீங்க. ராணுவ வீரர்கள் வருஷத்துக்கு ஒருமுறை லீவுல ஊருக்கு வருவாங்க. அப்படி ஒரு லீவுக்கு வரும்போது அங்க நடக்கற சம்பவங்கள்தான் கதை. க்ளைமாக்ஸில் ஒரு அருமையான மெசேஜ் இருக்கு. அதை ரொம்ப கவித்துவமா சொல்லியிருக்கார் முருகதாஸ்.


‘இந்த மாதிரி பொண்ணு நம்ம வாழ்க்கையில வந்தா எப்படியிருக்கும்’னு சில பொண்ணுங்கள பார்த்தா தோணும்ல... அதுமாதிரியான ஒரு பொண்ணா, காஜல் எனக்கு ஜோடியா நடிச்சிருக்காங்க. பொண்ணு சூப்பர். எல்லா டயலாக்கையும் தமிழில் பேசி அசத்துது. வெரி பப்ளி!
அப்புறம் சந்தோஷ் சிவன். சொல்லவே வேண்டாம். அற்புதமான டெக்னீஷியன். எப்போதுமே பரபரப்பா இருக்கிற தாதர் ரெயில்வே ஸ்டேஷன்ல நான் நடந்துபோற மாதிரி ஒரு சீன். லாங் ஷாட்ல இருந்து பார்த்தா நெரிசலில் வெறும் தலைகளாதான் தெரியும். அந்த இடத்துல சந்தோஷ் என்னோட கை மணிக்கட்டுல சின்ன கேமராவை கட்டி விட்டுட்டார். அந்தக் கேமராவை நானே ஆபரேட் பண்ற மாதிரி ஆன், ஆஃப் சிஸ்டம் இருந்துச்சு. மக்களோட மக்களா பேசிக்கிட்டே நடக்கணும். கேமராவை ஆன் பண்ணிட்டு, நான் நடிக்க ஆரம்பிச்சுட்டேன். பக்கத்துல வந்துக்கிட்டிருந்த ஆளுங்க, நான் தனியா பேசிட்டு நடந்ததை ஒரு மாதிரியா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. இதில் கேமராவிலேயே அவ்வளவு வித்தைகளை வைச்சிருக்காரு சிவன்.’’
ரொம்ப நாளைக்கப்புறம் பாட்டு பாடியிருக்கீங்க?

‘‘ஆமா. திடீர்னு ஒருநாள், ‘கொஞ்சம் ஸ்டூடியோவுக்கு வரமுடியுமா’ன்னு ஹாரிஸ் கிட்டயிருந்து போன்.  ‘அங்கே போனா நீங்க ஒரு பாட்டு பாடுறீங்க’ன்னு ஹாரிஸும், டைரக்டரும் கேட்டாங்க. ‘இந்த ஆட்டத்துக்கு நான் வரலை’ன்னு சொல்லிப் பார்த்தேன். ‘டிரை பண்ணலாம். நல்லாயில்லைன்னா மாத்திக்கலாம்’னு வற்புறுத்தினதும் பாடினேன். சென்னை ஸ்டூடியோவோட விடல; மும்பை ஸ்டூடியோவிலயும் காதுல ஹெட் போன மாட்டிவிட்டு இன்னொரு டிராக்கும் எடுத்துக்கிட்டாங்க. ‘கூகுள் கூகுள்...’ங்கற அந்தப் பாட்டு உட்பட எல்லா பாட்டுமே ஹிட்டானதுல டபுள்
சந்தோஷம்.’’



உங்க ரசிகர்களுக்கான ஆக்ஷன் எப்படி இருக்கு படத்துல?
‘‘சுத்தி சுத்தி பறந்து பறந்து அடிக்கிற மாதிரியான சண்டைக் காட்சிகளை விரும்பற ஆள் இல்ல நான். ஆனாலும் என்னோட படங்களில் அது தவிர்க்கமுடியாம இருந்திடும். ஆனால் ‘துப்பாக்கி’ அந்த ஸ்டைலிலிருந்து டோட்டலா மாறியிருக்கும். ரியல் லைஃபில் ஒருத்தன் சண்டை போட்டா எப்படி இருக்குமோ, அவ்வளவு யதார்த்தமா இருக்கும். கெட்சாங்கிற பாங்காங் மாஸ்டர்தான் ஸ்டன்ட் கம்போஸ் பண்ணியிருக்கார். ஒரே டைம்ல எல்லாத்தையும் அடிச்சு காலி பண்ணாம, புரூஸ் லி, ஜாக்கி சான் படத்தில வர்ற மாதிரி ஒவ்வொருத்தரையா பிரிச்சி பிளான் பண்ணி அடிக்கிற ஆக்ஷன். கிளைமாக்ஸுக்கு முந்தைய ஒரு ஃபைட், என் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டா இருக்கும். ஒவ்வொரு இடத்திலயும் புகுந்து முருகதாஸ் வேலை செய்றார். அவருக்கு ஏன் இத்தனை பெயர் இருக்குன்னு இப்பப் புரியுது.’’

ஓப்பனாவே கேட்கிறோம். உங்க ஜெனரேஷன் நடிகர்கள் மாதிரி வித்தியாசமான கெட்டப்களை நீங்க ஏன் முயற்சி பண்றதில்லை?
‘‘நானும் ஓப்பனாவே சொல்றேங்க. இது எனக்கு செட் ஆகும்னு தோணினா, நிச்சயம் கெட்டப்சேஞ்ச் பண்ணி நடிப்பேன். சிலது சிலருக்குத்தான் செட் ஆகும்; எனக்கு செட் ஆகுமான்னு தெரியல. இன்னொரு உண்மையைச் சொல்றேன், அந்த மாதிரியான ஒரு கதைகூட இதுவரை எங்கிட்ட யாரும் சொன்னதில்ல. அப்படியொரு சந்தர்ப்பம் வந்தா நான் வேண்டாம்னு சொல்லமாட்டேன். சந்தர்ப்பம் கொடுத்து கதை சொல்லிப் பார்க்கணும் இல்லையா? நான் எந்த புது முயற்சிக்கும் முகத்தைத் திருப்பிக் கொண்டது கிடையாது.”படத்துல இந்தி டயலாக்கெல்லாம் பிரிச்சி மேய்ஞ்சிருக்கீங்களாமே... அடுத்து இந்திப் படம்தானா?

‘‘இந்தியும் தமிழும் பக்காவா தெரிந்த ஒரு அசிஸ்டன்ட் உதவியில தான் இந்தி டயலாக் பேசினேன். கொஞ்சம் மிஸ் ஆனாலும் ஸ்லாங் மாறிடும். அதனால ஸ்பாட்ல இந்தி பேசறவங்களை உன்னிப்பா கவனிச்சேன். அவங்களோட உச்சரிப்பை, அவங்க கவனிக்காதபடியே வாட்ச் பண்ணினேன். ஒரு விஷயம் நமக்குத் தெரியலைன்னா, அத கத்துக்கறதுல தப்பில்லங்கண்ணா. தயக்கம் காட்டுறதுதான் தப்பு. டப்பிங் பார்த்துட்டு மும்பை ஆட்களே பாராட்டினப்போதான் எனக்கு உயிர் வந்துச்சு.

‘நாம ஒரு இந்திப் படம் பண்ணலாம்’னு முருகதாஸ் ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்கார். எனக்கு அந்த மாதிரி ஐடியாவெல்லாம் இல்ல. தமிழ் சினிமாதான் எனக்கு முக்கியம். அதேசமயம், ‘எவ்வளவு நாளைக்குத்தான் தமிழ்ப் படம் மட்டுமே பண்ணுவீங்க. தெலுங்கு, இந்தின்னு அடுத்த ஸ்டெப்புக்கு போங்க’ன்னு நிறைய பேர் சொல்றாங்க. அவங்க சொல்றதுலயும் தப்பில்ல. பார்ப்போம்... முருகதாஸ் மூலமா கூடிய சீக்கிரம் இந்தி படத்தில் நடிச்சாலும் நடிப்பேன்...’’

‘துப்பாக்கி’க்காக மும்பையிலேயே ரொம்ப நாள் இருந்துட்டீங்க போல... பிள்ளைகள் ஏங்கிப் போயிருப்பாங்களே?
‘‘ஒரு மாசம் கழிச்சு வீட்டுக்கு வந்தப்போ பசங்களோட முகத்தில் ரொம்பவே சேஞ்ச் இருந்ததைப் பார்த்தேன். என்மேல கோபமெல்லாம் இல்லை. வளர்ற பசங்க. புரிஞ்சிக்கிறாங்க. கேப் விட்டு
மீட் பண்றப்போ, வழக்கத்தைத் தாண்டிய ஒரு அன்பை ஷேர் பண்ணிக்க முடியுது. ஐயோ, அது ரொம்ப சூப்பர் ஃபீலிங்ணா. பசங்களோட வளர்ப்பு, படிப்பெல்லாம் என் ஒய்ஃப் டிபார்ட்மென்ட். கண்ல கண்டிப்பும், பாத்துக்கறதுல அக்கறையும் கலந்து, கவனமா பார்த்துக்கிறாங்க. மகன் சஞ்சய்க்கு, கிரிக்கெட்னா சாப்பாடு வேண்டாம். வீட்லயே அவனுக்காக ஒரு கிரிக்கெட் பிட்ச் அமைச்சுக் கொடுத்திருக்கேன். ஒரு ஸ்பெஷல் கோச்சும் இருக்கார். ஃபியூச்சர்ல கிரிக்கெட் பிளேயரா தான் ஆகணும்ங்கிற ஆசை அவனுக்குள்ள இருக்கு. அவன் ஆசை எதுவா இருந்தாலும் ஒரு அப்பாவா அதை நிறைவேத்துறது என் கடமை.’’அடுத்து?

‘‘விஜய் டைரக்ஷன்ல பண்றேன். அதுக்கு ‘தலைவன்’னு பெயர் வச்சுட்டதா நியூஸ் வருது. ஆனா அது முடிவாகல. நாலு டைட்டில் யோசிச்சோம். அதுல ஒண்ணுதான் லீக்காயிடுச்சு. நாங்க யோசிச்சிட்டு இருக்கும்போதே நியூஸ் எழுதிடுறீங்களே... எங்கேயாவது கூடிப் பேசுவீங்களாண்ணா! எப்படிங்ணா அது?’’
அரசியலில் எந்த படிக்கட்டில் இருக்கீங்க?
‘‘ஏங்க... நீங்களாவே ஒரு கணக்கு போட்டுக்கிறீங்களா? என்னோட மன்றத்தினரை நற்பணிகள் செய்யவே முடுக்கி விட்டிருக்கேன். கொஞ்ச நாளைக்கு முன்னாடிகூட வேலூர்ல ஒரு நலத்திட்ட விழாவில கலந்துக்கிட்டேன். மும்பையில ஷூட்டிங் நடந்தப்போ, அங்க இருக்குற மன்றத்தினர் மூலமா தாராவி பகுதி தமிழ் மக்களுக்கு சில உதவி களை செஞ்சோம். இப்படி எங்களால முடிஞ்ச உதவிகளை ஏழை மக்களுக்கு செஞ்சிட்டு இருக்கோம். இது நற்பணி தான். அதைத் தாண்டி வேற அடையாளத்தைக் கொடுக்காதீங்க. அரசியலுக்கு வர்ற முடிவை ஓவர் நைட்ல எடுத்துட முடியாது. முதல்ல என் மைண்ட்ல அது செட் ஆகணும். ஒருவேளை அப்படி ஒரு எண்ணம் வந்துட்டா. அப்புறம் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். ஆனா இந்த நிமிஷம் வரைக்கும் அந்த எண்ணம் எனக்குள்ள முளைக்கல!’’
- அமலன்