சுட்ட கதை சுடாத நீதி





அந்த அலுவலகத்தில் புதிதாக வேலைக்குச் சேர்ந்திருந்தான் அவன். தன்னைப் பற்றியோ, தன் குடும்பத்தைப் பற்றியோ யாரிடமும் அவன் அதிகம் சொன்னதில்லை. ‘கேட்கிற கேள்விக்கு பதில்’ என்கிற அளவில் உரையாடல்களைத் துண்டித்துக் கொள்வான். லஞ்ச் நேரத்தில் கூட தனியாக ஒரு மூலையில் இருக்கும் டேபிளில் போய் உட்கார்ந்து சாப்பிடுவான். ‘முசுடு’ என்று அவனுக்கு பலரும் பெயர் வைத்திருந்தார்கள்.   

இந்நிலையில் ஒருநாள் அலுவலகத்தில் எல்லோருக்கும் ஒரு படிவம் விநியோகிக்கப்பட்டது. பணியாளர்கள் எல்லோரையும் குரூப் இன்சூரன்ஸ் திட்டத்தில் சேர்த்திருந்தார்கள். பெயர், முகவரி போன்ற அடிப்படை விவரங்களைத் தாண்டி, குடும்பத்தினர் பற்றிய எல்லா தகவல்களும் அதில் இருக்க வேண்டும். அவன் திருமணம் ஆகாதவன்; ஆனால், பெற்றோர் பற்றியும், அவர்களது வாழ்க்கை அல்லது
மரணம் பற்றியும் கேட்டிருந்தார்கள்.

அம்மாவைப் பற்றி எழுதுவதில் அவனுக்குப் பிரச்னை இல்லை. 65 வயதைத் தாண்டியும் திடகாத்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள். ஆனால் அப்பா? கிராமத்தில் ஒரு குடும்பத்தையே கொடூரமாகக் கொன்ற வழக்கில் முதல் குற்றவாளி அவர். மாநிலத்தையே பரபரப்பாக்கிய வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, தூக்கில் போட்டுக் கொல்லப்பட்டார் அவர். தூக்கு மேடையில் காலடியில் இருக்கும் பலகை விலக, அவர் துடித்து இறப்பது போன்ற கனவு அவனுக்கு அடிக்கடி வரும். அதை எப்படி எழுதுவது?

யோசித்தான்... எழுதினான்!
அலுவலக நேரம் முடிந்ததும், அவனது படிவத்தை எல்லோரும் ஆர்வமாகப் பார்த்தார்கள். ‘நாடே எதிர்பார்த்த ஒரு பொது நிகழ்ச்சியில், காலடியில் இருந்த மேடை சரிந்து விழுந்ததில் அவர் மரணமடைந்தார்’ என அவனது அப்பா பற்றி இருந்தது. ‘‘பிரபலமான தலைவரா இருந்திருப்பாரு போல’’ என்று அவர்கள் பேசிக் கொண்டார்கள்.