நியூஸ் வே





அரசுகள் மாறும்போது வரலாறும் மாறிவிடுகிறது. இந்த வரலாற்றுப்பிழைகளால் உலகம் முழுக்க அதிகம் பாதிக்கப்படுகிறவர், பொதுவுடமைப் போராளி லெனின்தான்! ஏற்கனவே சோவியத் யூனியனிலிருந்து பிரிந்த நாடுகள் பலவும் அவர் சிலைகளை அகற்றின. இப்போது மங்கோலியாவின் நேரம். சமீபகாலம் வரை ‘ஆசிரியர் லெனின்’ என வரலாற்றுப் புத்தகங்களில் போட்டு, குழந்தைகளுக்கும் அப்படி சொல்லிக் கொடுத்த தேசம் அது. ‘லெனின் ஒரு கொலைகாரர்’ என மங்கோலியத் தலைநகர் உலன் படார் மேயர் அறிவிக்க, அங்கிருந்த லெனின் சிலை அகற்றப்படுகிறது.



கரீனா கபூர் - சயீப் அலிகான் திருமணத்துக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை அழைக்கப் போயிருந்தார் சயீப்பின் அம்மா ஷர்மிளா தாகூர். மகன் நடித்த படங்களைப் பார்த்திருக்கிறாரா என ஜனாதிபதியிடம் ஷர்மிளா கேட்டபோதுதான் ஒரு உண்மை வெளிப்பட்டது. பிரணாப் தனது வாழ்நாளில் இரண்டே இரண்டு படங்கள்தான் பார்த்திருக்கிறாராம். ‘‘இங்கே ஜனாதிபதி மாளிகையில் ஒரு தியேட்டர் இருக்கிறது. சீக்கிரம் பார்த்துவிட்டு சொல்கிறேன்’’ என்றார் பிரணாப்.

ஊழல் குற்றச்சாட்டுகளால் அரசியல் குடும்பங்களின் திருமணங்களும் தர்மசங்கடங்களுக்கு ஆளாகும். அப்படி இப்போது தவிக்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் குலாம் நபி ஆசாத். சோனியா மருமகன் ராபர்ட் வதேராவுடனான சர்ச்சையில் சிக்கியிருக்கும் டி.எல்.எஃப் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தின் சேர்மன் கே.பி.சிங்கின் பேத்தியைத்தான் மணக்கிறார் ஆசாத்தின் மகன் சதாம். திருமணம் நெருங்கும் நேரத்தில் எழுந்துள்ள இந்த சர்ச்சைகளால் சந்தோஷப்படுவதா, துக்கப்படுவதா என புரியாமல் தவிக்கிறார் குலாம்.



வழக்கமாக காஷ்மீர் போகிற மத்திய உள்துறை அமைச்சர்கள், அங்கிருக்கும் கவர்னர் மாளிகையைத் தாண்டி வெளியில் வர மாட்டார்கள். அங்கேயே எல்லோரோடும் பேசி முடித்து விடுவார்கள். ஆனால் சுசீல் குமார் ஷிண்டே அப்படி இல்லை. ஜாலியாக மார்க்கெட்டுக்குப் போய் ஷாப்பிங் செய்தவர், மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவோடு ஒரு ஓட்டலுக்குப் போய் சாப்பிட்டார். பாதுகாப்புப் படையினர்தான் தவித்து விட்டார்கள்.

பாலிவுட், கோலிவுட் எனப் பறந்தாலும், பீகாரில் பிறந்த நீது சந்திராவுக்கு தங்கள் மாநிலத் திரையுலகமான போஜ்புரி படங்கள் மீது பாசம் அதிகம். தானே தயாரிப்பாளர் ஆகி, தனது சகோதரர் நிதின் சந்திராவை இயக்குனர் ஆக்கி, ‘தேஸ்வா’ என்ற படத்தை சமீபத்தில் தயாரித்தார். பீகார் கிராமங்களில் வேலையில்லாத் திண்டாட்டம் காரணமாக இளைஞர்கள் குற்றப் பாதைக்குச் செல்வதைப் பற்றிய அந்தப் படம், கோவா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடத் தேர்வாகியுள்ளது. இந்தத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் முதல் போஜ்புரி மொழி படம் இதுதான். நெகிழ்ந்து போயிருக்கிறார் நீது!

ஃபிட்னஸ் பிரியர்கள் உடற்பயிற்சி செய்வார்கள்; ஜிம்மில் பழியாகக் கிடப்பார்கள். இப்போது கிக் பாக்ஸிங் கற்பது ஃபேஷன் ஆகிவருகிறது. நடிகை ஷஸான் பதம்ஸி அதைத்தான் செய்கிறார். ‘‘உடலை ஸ்லிம்மாக வைக்கிறது. அதோடு இது நல்ல தற்காப்புக் கலையும் கூட! யாராவது வழியில் வம்பு செய்தால் பஞ்ச் விடலாம்’’ என முஷ்டி யை மடக்குகிறார்.



அடுத்த ஒலிம்பிக்ஸுக்கு போக திரையுலகிலிருந்து ஒருவர் தயாராகி விட்டார். அவர், கல்யாண சர்ச்சைகளால் சமீபகாலமாக செய்திகளில் அடிபட்ட அனன்யா. கேரள மாநில வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வாங்கியிருக்கிறார் அனன்யா. ‘‘பள்ளி நாட்களி
லிருந்தே வில்லும் அம்பும் பழக்கம். அடுத்ததாக தேசியப் போட்டிகள்தான்’’ என்று குதூ
கலிக்கிறார் அவர்.

ஜேம்ஸ்பாண்ட் படங்களுக்கு இது பொன்விழா ஆண்டு. இதற்காக ‘ஜேம்ஸ்பாண்டோடு ஜோடி சேர பொருத்தமானவர் யார்’ என பிரிட்டனில் ஒரு நாடு தழுவிய சர்வே எடுத்தார்கள். ஆச்சரியம் தரும் வகையில் பலரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலிடம் பிடித்தவர் இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன். இரண்டாவது, மூன்றாவது இடங்களில் ரிஹானாவும் பியான்ஸ் நோல்ஸும் இருக்கிறார்கள்.

இது நம்பர்


1962ம் ஆண்டு நிகழ்ந்த இந்தியா - சீனா போருக்கு இது பொன்விழா. 50 ஆண்டுகள் கழித்து அந்தப் போர் பற்றி சீனாவில் எடுத்த ஒரு சர்வே, அந்த தேசம் பற்றி புதிய விஷயங்களைச் சொல்கிறது.

80 சதவீத சீனர்களுக்கு இந்தப் போர் பற்றி எதுவும் தெரியவில்லை.

75 சதவீதம் பேர் இந்தியாவும் சீனாவும் எதையும் பேசித் தீர்த்துக் கொள்ளச் சொல்கிறார்கள்.

40 சதவீதம் பேர் எல்லைப் பிரச்னையால் இன்னொரு போர் வரும் என்கிறார்கள்.

39 சதவீதம் பேர் போருக்கு வாய்ப்பு குறைவு என்கிறார்கள்.

61 சதவீதம் பேர், இரு நாடுகளுக்கும் நல்லுறவு இருப்பதாக நம்புகிறார்கள்.

16.4 சதவீதம் பேரே இந்தியாவை வெறுக்கிறார்கள்.