சினிமா விமர்சனம் : பீட்சா






‘பீட்சா’ டெலிவரி செய்யும் இளைஞனும், பிசாசுகளில் நம்பிக்கையுள்ள யுவதியும் ‘லிவிங் டுகெதரா’க வாழ முற்படும்போது ஏற்படும் த்ரில் அனுபவங்கள்தான் கதை. நம்பகமில்லாத கதையை, நம்பும் விதமாக சொல்லி சுவாரஸ்யப்படுத்தியிருப்பது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் மெய்டன் வெற்றி.

தாலி கட்டாமல் வாழும் காதலர்கள் விஜய் சேதுபதியும், ரம்யா நம்பீசனும். உறவுகளில்லாத அவர்களின் தனிமை வாழ்க்கை விலாசமில்லாத கடிதமாக தொடர்ந்து கொண்டிருக்க, அமானுஷ்யங்களில் நம்பிக்கை வைத்திருக்கும் ரம்யாவின் தேடல்களும், ஒரு கட்டத்தில் அப்படி ஒரு ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் விஜய் சேதுபதியும் என்ன ஆகிறார்கள் என்பது சஸ்பென்ஸ்.

அடுத்தடுத்த படங்களில் நடிப்பில் தேறிவருகிறார் விஜய்சேதுபதி. நடிப்புப் பட்டறையில் தீட்டப்பட்டவர் என்பதால் சூழ்நிலை உணர்ந்து நடிப்பதில் வல்லவராகத் தெரிகிறார். அப்பாவித்தனமான தோற்றம் அவருக்கு பெரிய ப்ளஸ். ரம்யா நம்பீசன் வெகு அழகாகத் தெரிந்திருப்பது இந்தப் படத்தில்தான். அதற்கு ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத்துக்கும் நன்றி சொல்ல வேண்டும் அவர். பேசினால் எதிர்ப்பேச்சு, அடித்தால் பதிலடி என்று செல்லும் அவரது டாமினேட்டிங் கேரக்டர், விஜய் சேதுபதிக்கு புத்திசாலித்தனமான யோசனை சொல்வதில் நியாயப்படுத்தப்படுகிறது.

பீட்சா கடை முதலாளியாக வரும் நரேன், ஆவி நிபுணர் ஓவியர் வீர சந்தானம் உள்பட இன்னபிற பாத்திரங்களும் கூட நடிப்பில் அடையாளம் தெரிகின்றனர்.
சின்னச்சின்ன வசனங்கள் என்றாலும், தேவைக்கேற்ப அமைந்து அங்கங்கே ரசிக்க வைக்கின்றன. தான் என்றுமே கவனக்குறைவாக நடந்து கொண்டதில்லை என்கிற விஜய்சேதுபதியிடம், தான் கர்ப்பமாக இருப்பதாக ரம்யா சொல்ல, ‘‘அப்ப ரெண்டு பேருமே கேர்லெஸ்ஸா இருந்திருக்கிறோம்...’’ என்று விஜய்சேதுபதி சொல்வதும், அந்த விஷயத்தை அவர் நண்பர்களிடம் சொல்லி ஆலோசனை கேட்க, ‘‘அந்தக் கம்பெனி மேல கேஸ் போட்ருவமா..?’’ என்று ‘காண்டம்’ பிழையை நண்பர் கிண்டலடிப்பதும் அந்த ரகம்.

கதையின் உயிர்நாடியே, ‘அடுத்த காட்சி இப்படித்தான் இருக்கும்’ என்கிற நம் யூகங்களிலிருந்து விலகியே செல்லும் திரைக்கதை உத்திதான். ஒரு காட்சியில்  ஜீணீusமீ   பட்டனை அழுத்திவிட்டு அடுத்த காட்சியைக் கேட்டால் நிச்சயமாக ஒருவரால் சொல்லிவிட முடியாது. அத்துடன் தொழில்நுட்ப நேர்த்தி களையும் துருத்தாமல் பயன்படுத்திக்கொண்டிருப்பதில் இயக்குநரின் ஞானத்தை மெச்சமுடிகிறது. கார்த்திக் சுப்புராஜை தமிழ் சினிமாவில் சீக்கிரமே அடுத்தடுத்த உயரங்களில் பார்க்க முடியும்.

கதையில் ஓட்டைகளும் இல்லாமல் இல்லை. குறிப்பாக நம் சிந்தனை பேய் வீட்டின் பக்கம் திரும்பிவிட்டாலும், பல கோடிகளை கோட்டை விட்ட பீட்சா கார்னர் முதலாளியின் சிந்தனை நம்மைப்போல் பேய்க்கதையின் பக்கம் மட்டுமே இருக்காது என்பது உண்மை. அதில் சம்பந்தப்பட்ட விஜய் சேதுபதி சொல்வதை அப்படியே நம்புவதற்கு அவர் என்ன மாங்காயா..? அதுவும் அவர் விஜய் சேதுபதியைப் பற்றி ஆராயும்போது அவரது எந்த நடவடிக்கைகளிலும் உண்மை இல்லை. ஆனால் அவர் நம்புவதாக நாம் நம்ப முடிவது நம்மைக் கட்டிப்போட்டிருக்கும் திரைக்கதையின் சுவாரஸ்யம்தான்.
ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் பங்குடன் ஒலிப்பதிவு, எடிட்டிங், மிக்ஸிங் உள்ளிட்ட அனைத்துத் தொழில்நுட்ப வல்லுநர்களுமே மெச்சத் தகுந்தவர்கள். யூகிக்க விடாமல் காட்சிகள் நகரும் படத்தில் கிளைமாக்ஸ் மட்டும் வழக்கமான ஆங்கிலப்பட பாணியில் பழமை தட்டி நிற்கிறது. ஆனாலும் அது தமிழ்ப்படத்துக்குப் புதிது.
கதை தெரியாமல் பார்க்க நேர்ந்தால் சூடான பீட்சா. சஸ்பென்ஸ் தெரிந்து பார்த்தால் ஆறிப்போன டெலிவரி.
- குங்குமம் விமர்சனக்குழு