பள்ளிக்கூடம் போகாமலே பாடம் படிக்கலாம்!





தலைப்பை பார்த்தவுடனேயே, ‘அப்பாடா... இனிமே டீச்சர் கையில குட்டு வாங்காம வீட்டிலேயே இருந்து பாடங்களைப் படிக்கலாமா?’ என்று மாணவர்கள் கேட்பது புரிகிறது. அமெரிக்காவில் ‘ரோபோஸ்வாட்’ என்ற பெயரில் புதிய ரோபோவை கண்டுபிடித்துள்ளார்கள். இதற்கு கண், காது, முகம், வாய் எல்லாம் உண்டு. கண் எனப்படுவது வெப் கேமரா. காது - மைக்ரோபோன்கள், முகம் - மானிட்டர், வாய் - ஸ்பீக்கர்.

மாணவர்களுக்கு உடல்நலம் சரியில்லாதபோது, இந்த ரோபோவை பள்ளிக்கு அனுப்பி வைத்துவிட்டால் போதும். அதை வீட்டில் இருந்தபடியே இயக்கி, மாணவரின் இருக்கையின் அருகில் நிற்க வைத்துவிடலாம். ஆசிரியர் பாடம் நடத்தும்போது, அதை அப்படியே வெப் கேமரா வழியாக வாங்கி, வீட்டில் இருக்கும் மாணவரின் கம்ப்யூட்டருக்கு ரோபோ தகவல்களை அனுப்பும். வீட்டில் கம்ப்யூட்டர் மானிட்டர் முன் அமர்ந்து வகுப்புப் பாடங்களை மாணவர்கள் கவனிக்கலாம்.



இந்த ரோபோவின் மூலம் வீட்டில் இருக்கும் மாணவனிடம், வகுப்பறையில் இருக்கும் ஆசிரியர் கேள்விகள் கேட்டு பதிலும் பெற முடியும் என்பதால், வீட்டில் இருந்தாலும் மாணவர்கள் பாடங்களை கேட்டுத்தான் ஆக வேண்டும். இதேபோல் மாணவனின் முகம், ரோபோவின் மானிட்டரில் ஆசிரியருக்கு ஒவ்வொரு நொடியும் தெரிந்து கொண்டிருக்கும் என்பதால் நைசாக தூங்கிவிடவோ, கட் அடித்துவிட்டு டி.வியில் கிரிக்கெட் மேட்ச் பார்க்கவோ முடியாது.

அமெரிக்காவின் பப்பலோ நகரைச் சேர்ந்த சிறுவன் டேவன் காரோ ஸ்பெர்டூடிக்கு உடலில் பல்வேறு அலர்ஜிகள். இதனால் வகுப்பில் மாணவர்களுடன் சேர்ந்து அவனால் பாடம் கற்க முடியாது. தற்போது அந்த சிறுவன் இந்த ரோபோஸ்வாட் மூலம்தான் பாடங்களைக் கற்று வருகிறான். இந்த ரோபோ மூலம் டேவனுடன் சக மாணவர்கள் பேசிக் கொண்டும், கிண்டலடித்தும் விளையாடுகின்றனர். இதனால் வீட்டில் இருந்தாலும், வகுப்பில் இருக்கும் அனுபவத்தை தன்னால் உணர முடிகிறது என்கிறான் டேவன் காரோ.
எதிர்கால வகுப்பறைகள் இன்னும் எப்படியெல்லாம் மாற்றம் பெறுமோ!
- ஜே.எஸ்.கே.பாலகுமார்