குளத்தில் முளைக்கும் மரங்கள்





ஒவ்வொரு ஊரிலும் அனாதையாகக் கிடக்கின்றன எப்போதோ வாழ்ந்த தெப்பக்குளங்கள். அலைகளாக வந்து கரை மோதிய அந்த தெப்பக்குளத் தண்ணீரையும், வீடு வரை ஒலிக்கும் அதன் இரைச்சலையும் ஞாபகமாகப் பாதுகாக்கிறார்கள் ஊர்ப் பெரியவர்கள். கரும்பச்சை நிறத் தண்ணீருடன் இருக்கும் எங்கள் ஊர் தெப்பக்குளத்துக்கும் அதன் கரையிலிருக்கும் ஆலமரத்துக்கும் ஆழமான கதைகள் உண்டு. இந்தக் கதைகளை வரலாறுகளிலிருந்து சொல்ல முற்படும் தாத்தாக்களின் வார்த்தையில், உண்மையின் அளவு தெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் தல விருட்சக் கதைகள் மாதிரி தெப்பக்குளக் கரையில் வளர்ந்திருக்கிற ஆலமரத்துக்கும் கதைகள் இருக்கலாம்தான். ஒன்றில் ஆரம்பித்து ஏதோ ஒன்றில் முடிப்பதுதான் கதை என்றால் இங்கு எல்லாவற்றுக்கும் கதைகள் உண்டு.

தெப்பம் ஓடியதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இப்படியொரு குளம் எப்படி வந்திருக்கும் என்பதற்கான விவாதத்தை, கல்லூரி படிக்கும் அண்ணன்கள் ஆலமரத் திண்டில் அமர்ந்து ஆரம்பித்து வைத்ததிலிருந்து தெப்பக்குளப் பாசம் எனக்கும் பிடித்துக்கொண்டது. ஊரின் மேற்கே இருக்கிற சிவன் கோயிலுக்கான குளமாக இது இருந்ததாகவும், சில நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு தெப்பம் ஓடியதாகவும் பேசப்பட்டது. இப்போதே கிராமமாக இருக்கிற ஊர், சில நூற்றாண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்ற நினைப்பு எனக்குள் ஓடியது. அப்போது ஒரே ஒரு குடும்பமாக மட்டுமே இந்த ஊர் இருந்திருக்கும் என்றும் தோன்றியது. கூடவே, ஒரே ஒரு குடும்பத்துக்காகத் தெப்பம் ஓடியிருக்குமா என்ற சந்தேகமும்! பக்கத்து ஊரான ஆழ்வார்க்குறிச்சியில் ஒவ்வொரு வருடமும் தெப்பம் ஓடுகிறது. அக்கம் பக்கத்து ஊர்களிலிருந்து கூட்டம் கூட்டமாக வந்து அந்த தெப்பத்தை பார்ப்பதும், அதன் பொருட்டு நடக்கிற திருவிழா தடல்புடல்களும் மனதுக்குள் உற்சாகப் பட்டாசைக் கொளுத்திவிடும். தெப்பக்குள திண்டு, திருமண மண்டபம் போல மக்கள் கூடியிருக்கும் அரங்கமாகி இருப்பதும் மகிழ்ச்சிப் பிரவாகமாக இருக்கிறது. அப்படி ஒரு தெப்பம் இந்த குளத்தில் ஓடியதை யாரும் பார்த்ததில்லை. ஆனால் குளத்தைப் பார்க்கும்போது, தெப்பமும் திருவிழாவும் மனதுக்குள் வந்துபோவது தானாக நடந்துவிடுகிறது.

மழை பெய்து வெள்ளம் வருகிற காலங்களில் தெப்பக்குளத்தின் கீழ்முக்கில் ஒதுங்கிக் கிடக்கிற பொருட்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டோ, அல்லது அதில் தலை தூக்கி அசைந்து கிடக்கிற பாம்புகள் மீது கல்லெறிந்து கொண்டோ அலையும் டவுசர் காலத்தில், இந்தக் குளம் மாடுகள் குளிப்பதற்காகத்தான் என்பதாகவே நினைத்திருந்தேன். ரெண்டாத்து முக்கிற்கு மாடுகள் பத்திச் செல்கிற புனமாலை அண்ணன், குளத்தின் இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு மாடுகளைப் பத்திவிட்டு ஏதாவது ஒரு மாட்டின் மீதமர்ந்து நடுக் குளத்தில் பொத்தென்று குதித்து எழும்போதுதான் ‘மனிதர்களும் குளிக்கலாம்‘ என உணர்ந்தேன். நீச்சல் தெரியாத சிறு பயல்கள் பயந்துகொண்டு கரையில் நிற்க, அவர்களை தண்ணீருக்குள் தள்ளிவிட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள் அண்ணன்கள். தத்தக்கா பித்தக்கா என்று முங்கி, மோதி, தவித்து, தண்ணீர் குடித்து அவர்கள் தானாக நீச்சல் கற்றுக்கொள்ளும் இடமும் தெப்பம் ஓடாத இந்தக் குளம்தான்.

ஒரு பெருமழைக்காலத்தில் இந்தக் குளத்தின் வடப்பக்கப் படித்துறை ஒன்று சிதைந்து போனது. மாடுகளைக் குளத்துக்குள் இறக்க ஊர்க்காரர்கள் தடுமாறியபோது, பஞ்சாயத்து சார்பாக சாய்வு தளம் ஒன்று கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வேர்களைப் பிதுக்கி திமிறிக்கொண்டிருக்கிற ஆலமரத்தைச் சுற்றி திண்டு ஒன்றும் கட்டப்பட்டது. அதுவரை வேரில் அமர்ந்து கதை பேசியவர்கள், திண்டுக்கு மாறினார்கள். எப்போதாவது தெப்பக்குளத்துக்கு வந்து போய்க்கொண்டிருந்த - திருட்டுத்தனமாகப் புகை பிடிக்கிற - அண்ணன்களுக்கு இப்போது இது நிரந்தர இடமாகிவிட்டது. அண்ணன்கள் மாலையிலும், மாடு மேய்ப்பவர்களும் வயலுக்குச் செல்பவர்களும் காலையிலும் என பரபரப்பாகிவிட்டது திண்டு. இதற்கு இன்னொரு சிறப்பும் இருப்பதாக, காபி கடைகளில் பேசிக்கொண்டார்கள்.

‘‘வீட்டுல உருண்டு உருண்டு படுத்தாலும் தூக்கம் வரமாட்டேங்குடே. தெப்பக்குளத் திண்டுல துண்டை விரிச்சு சும்மா படுத்துப் பாரேன். எப்ப தூங்குனம்னே தெரியாது. எந்துச்சு பாத்தாதான் தூங்கிருக்கோம்னு தெரியும்‘‘ - என்றார்கள். கோடை காலங்களில் நண்பகல் நேரத்தில் திண்டில் தூங்க இடம் கிடைப்பது அரிது. தூங்கிக்கொண்டிருப்பவர்களின் கால்களை ஒதுக்கிவிட்டு, கொஞ்சம் இடம்பிடித்து உட்கார்ந்து கொள்ள வாய்ப்பிருக்கும்.

ஊரில் இருந்து சற்றே ஒதுங்கி தனியாக இருக்கிற இந்தத் திண்டு, தூங்கவும், கதைகள் அல்லது பொரணி பேசும் இடமாகவும் மாறிப்போனதில் தெப்பக் குளத்துக்கும் வருத்தம் இருந்திருக்கலாம். அவளை அவன் வைத்துக்கொண்டிருக்கிறான் என்கிற கிளுகிளு கதையிலிருந்து, சொந்தக்கார குடும்பத்துக்கு எப்படி குடைச்சல் கொடுக்கலாம் என்கிற கொடூரம் வரை அலசப்படும் இடமாக மாறிப்போன திண்டும், அதன் தோழன் தெப்பக்குளமும் பேசத் தொடங்கினால் என்ன பேசியிருக்கும்? தினமும் வந்தமர்கிறவர்களுடன் அவையும் ஒன்றாக, தங்கள் கருத்தை சொல்லி இருக்கலாம். அல்லது, ‘‘இங்க உட்கார்ந்து இதையெல்லாம் பேசாத‘‘ என்கிற ஆட்சேபத்தையும் எழுப்பி இருக்கலாம். அல்லது மவுனமாகச் சிரித்துக்கொண்டும் இருந்திருக்கலாம்.



ஊரில் ஏதாவது கல்யாணம் நடக்கும்போதும், கோயில் கொடை காலங்களிலும் இந்த தெப்பக்குளத் திண்டுதான் சாராயம் குடிப்பதற்கான இடமாகவும் இருக்கும். இருட்டில் திருட்டுத்தனமாக பாட்டில்களைக் கொண்டு வந்து குடிக்கவும் பேசவுமாக திண்டு மாறிப்போனதின் தடதடப்பு, மறுநாள் தலைவலியில் தெரியும்.

இப்படி பரபரப்பாக இருக்கும் தெப்பக்குளமும் திண்டும், தென்னரசுவின் அக்கா குளத்தில் பிணமாக மிதந்ததிலிருந்து வெறிச்சோடிப் போனது. துறுதுறுவென்று இருக்கும் தென்னரசுவின் அக்காவுக்கு ஊரில் ‘அழகி’ என்றும் பெயர். காதல் சமாசாரங்கள் கெட்டவார்த்தையாகப் பார்க்கப்பட்ட ஊரில் பிறந்தது அவளது குற்றம். விஷயம் வீட்டுக்குத் தெரிந்து அவசரம் அவசரமாக, மாமன் மகன்
மாப்பிள்ளையாக நிச்சயிக்கப்பட்டான். பெரியவர்களின் கவுரவம் சிறுசுகளின் ஆசையை எப்போதும் கொலை செய்யத்தான் துடித்துக் கொண்டிருக்கிறது. தனது காதல் நிராகரிக்கப்பட்டதன் விளைவாக தெப்பக்குளத்தில் விழுந்து பிணமானாள். வீட்டில் ஆளைக் காணோமென்று விடிய விடியத் தேடியும் கிடைக்கவில்லை. பக்கத்து ஊருக்கு பால் விற்கப்போகும் கணேசன், மறுநாள் காலையில் தற்செயலாகக் குளத்தை பார்க்க, விஷயம் ஊருக்குப் போனது. மொத்த ஊரும் குளக்கரையில் கூடி கண்ணீர் சிந்திய பின், குளத்துக்கு இன்னொரு பெயரும் வைக்கப்பட்டது. கொலைகாரக் குளம்! தண்ணீரும் கொலைக்கான ஆயுதமானது ஆச்சர்யம்தான்.



ஒரு மாயச்சுழலாக காலம் எல்லாவற்றையும் மாற்றிப்போட்டு விடுகிறது. பிழைப்பின் பொருட்டு பெருநகருக்கு புலம்பெயர்ந்தாலும் எப்போதும் உள்ளுக்குள் ஊசலாடிக்கொண்டே இருக்கிறது ஊர். ரகளையும் ரசனையுமாக இருந்த தெப்பக்குளத்தை சமீபத்தில் எட்டிப் பார்க்கிறேன். தென்னரசுவின் அக்காள் பிணமாக மிதந்த வடக்கு முக்கில், குளக்கரை சுவரோடு மரமொன்று முளைத்திருக்கிறது. அவள் அணிந்திருந்த பச்சைத் தாவணியாய் கிளைபரப்பி பார்க்கிறது மரம். குப்பைகள் சுமக்கும் குளத்து தண்ணீர், குட்டையாகி இருக்கிறது. பாசி படர்ந்திருக்கிற படித்துறை, செடிகளால் மூடப்பட்டிருக்கிறது. எப்போதும் ஆட்களோடு இருக்கும் திண்டு, பாம்பு சட்டைகள் படர்ந்திருக்க, பேச்சுத் துணையின்றி மூச்சற்றுக் கிடக்கிறது. எப்போதோ அங்கு அமர்ந்து பேசிய பொரணிகளும் கதைகளும் அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்க, ஆக்ரோஷமாக வீசும் புழுதிக்காற்றில் வேகமாகத் தலையாட்டும் ஆலமரம் எதையோ ஏக்கத்தோடு சொல்வதாக எனக்குப் படுகிறது. காற்றின் மொழி யாருக்குத் தெரிகிறது?   
- வாசம் வீசும்