இருவாட்சியின் கற்பு வாழ்க்கை!





‘‘ஒரு ஊருல ஒரு காக்கா இருந்துச்சாம்... அந்த காக்காவுக்கு ஒரு புறா ஃபிரண்டா இருந்துச்சாம்...’’ என்று கற்பனை கலந்து கதை சொல்லுகிற வயசு விஷ்வக்சேனனுக்கு. ஆனால் பறவைகள் பற்றியும், அவற்றின் வாழ்க்கை முறை பற்றியும் தேர்ந்த ஆய்வாளரைப் போல பேசுகிறார். பெரியவர்களே கையாளத் திணறும் நவீன கேமராக்களை 10 வயதே ஆகும் இந்த குட்டிக்கலைஞன் லாவகமாகக் கையாள்வதோடு, உலகத் தரத்துக்கு புகைப்படங்களையும் எடுக்கிறார். அண்மையில் நடந்த சென்னை புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையான நூல்கள் பட்டியலில், இவர் எடுத்த புகைப்படங்களின் தொகுப்பான ‘பறவைகள்-1’, ‘கூந்தன்குளம்’ ஆகிய நூல்களும் அடக்கம்.

சென்னை கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த விஷ்வக் இப்போது 4ம் வகுப்பு படிக்கிறார். அப்பா வேல்முருகன், சென்னை ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் விரிவுரையாளர். அம்மா அஜிதா, ‘சென்னை ஃபிலிம் ஸ்கூல்’ என்ற பயிற்சி மையத்தை நடத்துகிறார். ஓடிப் பிடித்து விளையாட வேண்டிய வயதில், கூந்தன்குளம், வேடந்தாங்கல், பந்திப்பூர், தடா என்று கேமராவும் கையுமாக பறவைகளைத் துரத்தியபடி ஓடிக்கொண்டிருக்கிறார் விஷ்வக்.

விஷ்வக்கின் கேமராவில் வர்ணநாரைகள் வரிசை குலையாமல் நடை பயில்கின்றன. பச்சைக்கிளி அழகு வாயால் நெல் கொறிக்கிறது. சிவந்த விழி ஒளிர, திரும்பிப் பார்க்கிறது பெண்குயில். இரைக்காக வாய் பிளந்து காத்திருக்கும் தம் சந்ததியை பெருமை பொங்கப் பார்க்கிறது செம்முதுகு தேன்சிட்டு. தட்டான்பூச்சியைக் கவ்வியபடி, நெற்கதிரில் அமர்ந்து ஊசலாடுகிறது நெட்டைக்காலி. இப்படி பறவைகளின் உலகத்தை அழகுணர்வு ததும்பும் புகைப்படங்களாக மாற்றியிருக்கிறார் விஷ்வக்.  

பள்ளியில் இருந்து வீடு திரும்பியதும், கேமராவை தூக்கிக்கொண்டு கோவளம், பள்ளிக் கரணை என்று கிளம்பிவிடுகிறார் விஷ்வக். சனி, ஞாயிறுகளில் வேடந்தாங்கலோ, கூந்தன்குளமோ... சேர்ந்தாற்போல நான்கைந்து நாட்கள் விடுமுறை கிடைத்துவிட்டால் இமயமலை, மேற்குத் தொடர்ச்சி மலை. கூடவே  உதவியாளராக அப்பா.

‘‘பறவைகள்னா எனக்குக் கொள்ளை இஷ்டம். கூந்தன்குளம் போனப்போ பறவை மனிதர் பால்பாண்டி அங்கிளைப் பாத்தோம். நானும் அவரும் ஃபிரண்ட்ஸ் ஆயிட்டோம். ‘பறவைகளை படம் எடுத்தா மட்டும் பத்தாது. பறவைகளை வகை பிரிச்சு தெரிஞ்சுக்கணும். அதோட வாழ்க்கை முறைகளை புரிஞ்சுக்கணும். அப்போதான் பறவைகளோடு நெருக்கமாக முடியும்’னு அந்த அங்கிள் சொன்னார். இப்போ 600 பறவைகளை அடையாளம் கண்டுபிடிச்சிருவேன்’’ என்று மழலை பேசுகிற விஷ்வக், பறவைகளைப் பற்றி சொல்கிற தகவல்கள் மலைக்க வைக்கின்றன.

‘‘தூக்கணாங்குருவி இரவு நேரத்துல வெளிச்சம் கிடைக்கிறதுக்காக தன்னோட கூடுகள்ல மின்மினிப்பூச்சிகளை பிடிச்சு ஒட்டி வச்சுக்கும். தினைக்குருவி ரெண்டு வாசல் வச்சு கூடு கட்டும். கூட்டுக்கு நடுவில உக்காந்திருக்கும். எதிரி ஒரு வாசல் வழியா வந்தா, அதை ஏமாத்திட்டு இன்னொரு வாசல் வழியா ஓடிடும்.. இருவாட்சி பறவை வித்தியாசமா வீடு கட்டும். ஒரு மரப்பொந்தை செலக்ட் பண்ணிட்டு முதல்ல அம்மா பறவை அதுக்குள்ள போய் உக்காந்துக்கும். அப்பா பறவை நிறைய இரை எடுத்துக்கிட்டு வந்து கொடுக்கும். உள்ளே இருக்கிற அம்மா பறவை முட்டையிட்டு குஞ்சு பொறிக்கிற வரைக்கும் வெளியவே வராது. தன்னோட டாய்லெட்டை வச்சு உள்புறமா பொந்தோட வாசலை கொஞ்சம் கொஞ்சமா அடைக்கும். அப்பாக்குருவி மண்ணை எடுத்துக்கிட்டு வந்து வெளிப்புறமா அடைக்கும். வாய் தெரியிற அளவுக்கு மட்டும்தான் ஓட்டை இருக்கும். தினமும் அப்பா குருவி இரை எடுத்துக்கிட்டுப் போய் அந்த ஓட்டை வழியா கொடுக்கும். குஞ்சு பொறிச்சதுக்கு பிறகு, அப்பா குருவி வாயால கொத்தி வாசலைத் திறக்கும். அதுக்குப்பிறகுதான் தாயும், குஞ்சுகளும் வெளியில வரும். ஒருவேளை அப்பா குருவி வேட்டைக்காரன் கையில சிக்கி செத்துட்டா குடும்பமே அழிஞ்சிடும்’’ - அழகிய ஆலாபனைகளோடு விஷ்வக் சொல்வதைக் கேட்க வியப்பாக இருக்கிறது.



வனப்பகுதிகளில் நடக்கும் பறவைகள், விலங்குகள் கணக்கெடுப்புகளில் வெகு ஆர்வமாகக் கலந்து கொள்கிறார் விஷ்வக். ‘‘நீலகிரியில பறவைகள் சென்சஸ். காட்டுக்குள்ள போய் ஒரு இடத்துல பறவைகளை படம் எடுத்துக்கிட்டிருந்தேன். முன்னாடி போய்க்கிட்டிருந்த எல்லோரும் தெறிச்சு ஓடி வர்றாங்க. என்னன்னு பாத்தா பெரிய யானை வருது. கேமராவைத் தூக்கிக்கிட்டு எப்படித்தான் ஓடினேனோ... இன்னைக்கு நினைச்சாலும் பகீர்னு இருக்கும்’’ என்று திகிலடையப் பேசுகிற அவருக்குப் பிடித்தது நம்மூர் இருவாட்சி தானாம். காரணம், ‘ஒருவனுக்கு ஒருத்தி’ என்ற கொள்கையைக் கொண்ட பறவையாம் அது.

‘‘சில பறவைகளுக்கு தினமும் குறிப்பிட்ட ஒரு இடத்துக்கு வந்துபோற குணம் உண்டு. அந்த இடத்துல கேமராவோட போய் உக்காந்திருவேன். ஏழு மணி, எட்டு மணி நேரமெல்லாம் ஒரு பறவைக்காக உக்காந்திருக்கேன்’’ என்று விழி விரியப் பேசுகிற இந்தக் குட்டிக்கலைஞனுக்கு ஒரு வண்ணக்கனவு இருக்கிறது. ‘‘உலகம் முழுக்க சுத்தி 10 ஆயிரம் வகையான பறவைகளை படம் எடுக்கணும்...’’
வண்ணக்கனவு சாத்தியமாகட்டும்!
- வெ.நீலகண்டன்