பொலிட்டிகல் பீட்





‘இன்ஃபோசிஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், ஆதார் அடையாள அட்டை தரும் ஆணையத்தின் இப்போதைய தலைவராக இருப்பவருமான நந்தன் நீலகேனி அரசியலுக்கு வரப் போவதாகத் தகவல்கள். இதனால் பதற்றத்தில் இருக்கிறார் பா.ஜ.க மூத்த தலைவர்களில் ஒருவரான ஆனந்த் குமார். பெங்களூரு தெற்கு தொகுதியில் ஐந்து முறை ஜெயித்த பெருமைக்குரியவர் ஆனந்த் குமார். படித்த, மிடில் கிளாஸ் வாக்காளர்கள் அதிகம் இருக்கும் இங்குதான் காங்கிரஸ் வேட்பாளராக நீலகேனி நிற்கப் போவதாகப் பேச்சு. படித்தவர்கள் மத்தியில் நல்ல பெயருள்ள அவர் நின்றால் இம்முறை போட்டி கடுமையாக இருக்கும்.

தலைநகர் டெல்லியில் இருக்கும் அனைத்து மத்திய அமைச்சரகங்களுக்கும் டெல்லி மாநில அரசின் குடிநீர் வாரியம்தான் தண்ணீர் சப்ளை செய்கிறது. முக்கிய அரசு அலுவலகங்களுக்கு பாட்டில்களிலும் குடிநீர் தருகிறது. நாடாளுமன்றத்துக்கு ரயில்வேயின் ‘ரயில்நீர்’ பாட்டில்கள் வருகின்றன. ஆனால் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், இந்த எல்லா தண்ணீரையும் நிராகரித்துவிட்டு பன்னாட்டு நிறுவனங்களிடம் தண்ணீர் சப்ளைக்காக டெண்டர் கோரியிருக்கிறது. டெல்லி வட்டாரத்தில் இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கவலையில் இருக்கும் இன்னொரு மூத்த பா.ஜ.க தலைவர் லால்ஜி டாண்டன். உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகர் லக்னோ தொகுதியின் தற்போதைய எம்.பி இவர். வாஜ்பாயி இங்கிருந்து வென்றுதான் பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார். உடல்நிலை காரணமாக அவர் போட்டியிட மறுத்தபிறகு லால்ஜிக்கு இந்தத் தொகுதி கிடைத்தது. இப்போது இந்தப் பெருமைக்குரிய தொகுதியில் நரேந்திர மோடியோ, பா.ஜ.க தலைவர் ராஜ்நாத் சிங்கோ போட்டியிடக்கூடும் எனத் தகவல். ‘‘அடுத்த ஆட்சி நம்முடையதுதான். உங்களுக்கு கவர்னர் பதவி உறுதி’’ என லால்ஜிக்கு இப்போதே வாக்குறுதிகள் தரப்படுகின்றன.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அடிக்கடி நகைச்சுவையாக எதையாவது சொல்லி சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். இம்முறை அவர் சிக்கியிருப்பது வக்கீல்களிடம்! நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை அவரது அமைச்சரவைதான் கண்காணித்து வருகிறது. இதேபோல இப்போது நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை வடிவமைத்ததிலும் இவர் பங்கு இருந்தது. இந்த சட்டம் தொடர்பாக தொழில்துறையினருடன் பேசும்போது, ‘‘இது வக்கீல்கள் வேலைவாய்ப்பு சட்டம்’’ என்றார் அவர். ஏனெனில், நிலம் தொடர்பான சர்ச்சைகளில் வக்கீல்கள் வாதாட வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த கமென்ட்டுக்கு வக்கீல்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

உத்தரகாண்ட் முதல்வர் விஜய் பகுகுணா மீது காங்கிரஸ் மேலிடத்துக்கு என்ன அதிருப்தியோ தெரியவில்லை. டேராடூனில் ஒரு காங்கிரஸ் பேரணியில் கலந்துகொள்ள ராகுல் காந்தி வரவேண்டும் எனக் கேட்டிருந்தார் அவர். இதற்காக ராகுலைச் சந்திக்க அவர் அப்பாயின்ட்மென்ட் கேட்டு பல நாட்களாகக் காத்திருந்தார். சமீபத்தில் அவரைச் சந்தித்த ராகுல், மூன்று நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு வெளியில் அனுப்ப, சோகமாகத் திரும்பினார் அவர்.