உங்களைத் தேடி வேலை வரும் ஷங்கர்பாபு





ஒவ்வொரு சமூகத்திலும் செய்ய வேண்டிய வேலை நிறைய பாக்கி இருக்கிறது; ஒவ்வொரு தேசத்திலும் ஆற்ற வேண்டிய காயங்கள் இருக்கின்றன; ஒவ்வொருவர் உள்ளத்திலும், அதையெல்லாம் செய்துமுடிக்கும் உறுதி இருக்கிறது, மரியான் வில்லியம்சன்செயற்கையான இடர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், சில நேரம் நீங்கள் உண்மையான பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பொதுவாக பணி இடப் பிரச்னைகள் நீங்கள் மட்டுமே சமாளிக்க வேண்டியதாக இருக்காது. ஏனென்றால் அவை பணி இடம் சார்ந்த பொதுப் பிரச்னைகள். இவற்றை எதிர்கொள்ள உங்களுடன் சக பணியாளர்கள், மேலிடம் என்று உங்கள் பின்னால் கை கோர்த்து நிற்க நிறைய பேர் உண்டு. ஆனால், இதில் நாம் பார்க்கப் போகும் பிரச்னைகள் பணி இடத்தில் நீங்கள் மட்டும் எதிர்கொள்ளப் போகிறவை. இதுபோன்ற சூழல்கள் எல்லோரது வாழ்விலும் நடந்தே தீரும் என்றில்லை... நடந்தால் நீங்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் இது.

அது என்ன, உங்களை மட்டுமே துரத்தக் கூடிய உண்மையான பிரச்னை? உங்களது பணி இடத்தில் ஒரு செயலை நீங்கள் நிர்ப்பந்தத்தின் பேரில் செய்கிறீர்கள். ‘‘சொன்னபடி செய்யுங்கள், பிரச்னை வந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன்’’ என்று உங்களது மேல் அலுவலர் தந்த ஊக்கத்தின் அடிப்படையில் அதிரடியாக சில நடவடிக்கைகளை எடுக்கிறீர்கள். இதனால் சிலர் பாதிப்புக்கு உள்ளாக நேரிடுகிறது. எல்லாம் முழுமையாக நடப்பதற்குள் உங்களை ஆட்டுவித்த மேல் அலுவலர் அந்தப் பணி இடத்திலிருந்து வேறு இடத்திற்குச் சென்று விடுகிறார். அடுத்து அந்தப் பொறுப்பிற்கு வருபவர் உங்கள் நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம்.

ஒரு நேரத்தில் நிர்வாகத்தின் பிரச்னையாக இருந்தது, இப்போது முழுக்க முழுக்க உங்கள் பிரச்னையாகி விட வாய்ப்பு இருக்கிறது. ஆரம்பத்தில் உங்களுடன் இருந்தவர்கள் எல்லாம் படிப்படியாகக் கழன்று கொள்ள, ஒரு கட்டத்தில் நீங்களும் உங்கள் பிரச்னையும் மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு சம்பந்தமே இல்லாத... ஆனால், உங்களை மையமாகக் கொண்ட பிரச்னைகளிலிருந்து எப்படி மீள்வது என்று தெரியாமல் தவிப்பீர்கள். அடுத்து என்ன நடக்குமோ என்ற பயம் உங்களைச் சூழத் துவங்கும். உங்களைத் தவிர, எல்லோருமே அவரவர் வேலையில் நிம்மதியாக இருப்பது போலவும், நீங்கள் மட்டும் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்வது போலவும் தோன்றும். இவ்வளவு துன்பம் தருகிற இந்த வேலையிலிருந்து விடுபட்டால் என்ன? என்றெல்லாம் யோசிப்பீர்கள். ஆனால், அந்த முடிவுக்கும் தயங்குவீர்கள். படுத்தால் தூக்கம் வராது தத்தளிப்பீர்கள்.

இந்தக் கவலைகள் நியாயமானவையே. ஒரு தங்க நகை வாங்குகிறீர்கள். அதை அணிந்ததும் அழகாக இருப்பதாக உணர்கிறீர்கள். உங்கள் சுற்றமும், நட்பும் கூட அதை உறுதி செய்கின்றன. சந்தோஷமாக இருக்கையில் திடீரென அது திருட்டு போய்விடுகிறது. இப்போது உங்கள் நகை எதிர்மறையான விளைவுகளைத் தரத் துவங்குகிறது. போலீஸ் ஸ்டேஷன் போகிறீர்கள். நகை வாங்கிய ரசீது, அதற்கான வருமானம் எங்கிருந்து வந்தது, அந்த நகை காப்பீடு செய்யப்பட்டிருக்கிறதா? ஏன் இந்த நகையை நீங்களே விற்று விட்டு நாடகமாடக்கூடாது? எனப் பல கேள்விகள். அப்புறம் கோர்ட், வக்கீல்... நடைமுறைச் சிக்கல்கள். ஒரு கட்டத்தில் நகை வாங்கியது தவறோ என்று நினைக்கும் அளவுக்குச் சென்று விடுவீர்கள். நகையின் நோக்கம் அழகுணர்ச்சி. ஆனால், அது இப்போது உங்களுக்குத் தந்து கொண்டிருப்பதோ வெறுப்புணர்ச்சி.

நீங்கள் வாங்கும் நகை என்பது இவ்வளவு பிரச்னைகளையும் உள்ளடக்கியதுதான் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இதுபோல்தான் வேலையும் வேலை சார்ந்த பிரச்னைகளும். வேலை என்பது வருவது, கையெழுத்திடுவது, இயந்திரத்தனமாக எதையோ செய்வது, ஊதியம் பெறுவது, போய் விடுவது மட்டுமல்ல... வேலை சாராத பல பிரச்னைகளையும் உள்ளடக்கியதுதான் உங்கள் வேலை. என்னவென்று தெரிகிற பிரச்னைகளைச் சந்திப்பது போல், என்னவென்றே தெரியாத , கண்ணுக்குக்கே தெரியாத , பிரச்னைகளையும் எதிர்கொள்வதுதான் உங்கள் பணி வாழ்க்கை!



இது போன்ற இக்கட்டுகளை நீங்கள் உங்கள் வெற்றி, தோல்வி என்று பார்ப்பதை விட ‘அனுபவம்’ என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பும், எல்லா கணமும் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற ஆசையுமே உங்களை இப்படியெல்லாம் கவலை கொள்ள வைக்கிறது. நாளை என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. சற்று யூகிக்கலாம், அதில் ஆறுதல் அடையலாம். அவ்வளவுதான். அதேபோல், 100% பாதுகாப்பான இடம் என்று பூமியில் எதுவும் கிடையாது.

பிரச்னைகளுக்கு, உங்களது பயந்துபோன முகத்தைக் காட்டினீர்கள் என்றால், அது உங்களை வேகமாகத் துரத்தும். ஓடி ஓடி மேலும் நீங்கள் பலவீனம் அடைவீர்கள். இது போன்ற நேரங்களில் நீங்கள் தளர்ந்துவிட்டீர்கள் என்றால், உங்களைச் சார்ந்தவர்களும் உங்களை விட வேகமாக நம்பிக்கை இழந்து விடுவார்கள். அப்புறம் எந்தக் கயிற்றைப் பிடித்துக் கொண்டு மேலே ஏறுவது? இந்த இக்கட்டிலும் நீங்கள் எப்படி சுவாசிப்பது?

உங்களுக்கு வரக்கூடிய பிரச்னைகளில் 90% உங்களால் தாங்கக் கூடிய அளவுதான் இருக்கும். நீங்கள்தான் அலட்டிக் கொண்டு அதை பெரிசு பண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். ஒரு எல்.கே.ஜி பையனுக்கு அவனது அப்பாவும், அம்மாவும் ஜாலியாக இருப்பது போலவும், அவன் மட்டும் துயரப்படுவது போலவும் தோன்றும். அந்த அப்பா, அம்மாவிற்கு எப்படியும் நாட்டின் பிரதமர் அளவிற்கு பிரச்னைகள் இருக்கப் போவதில்லை. அவரவர் உருவத்திற்குத் தக்கபடிதானே அவரவர் நிழல் இருக்கும்? இந்த ரீதியில் யோசித்து நிம்மதி அடையப் பாருங்கள்.

இல்லை, எனக்கு இருப்பது சுலபத்தில் சரி செய்ய முடியாத மீதி 10% என்றால், அப்போதும் கவலை வேண்டாம். கவலைப்பட்டு எதுவும் ஆகப்போவதில்லை என்றால் கவலைப்பட்டு என்ன பலன்? ‘புல்லைவிட அற்பமானது கவலை’ என்கிறது மகாபாரதம். இனி, நீங்கள் செய்வதற்கு ஏதுமில்லை என்றான பிறகு, நீங்கள் செய்ய வேண்டியது ஒரு மூன்றாம் மனிதரைப் போல உங்களை வேடிக்கை பார்ப்பதுதான். ‘நேற்று இந்தப் பிரச்னை இல்லை... இன்று இருக்கிறது... நாளை இருக்க வேண்டிய அவசியமில்லை’ என்று நம்புங்கள். எப்படியும் இந்தப் பிரச்னையிலிருந்து நீங்கள் வெளியே வந்து விடத்தான் போகிறீர்கள். அது எப்படி என்பதை மட்டும் விறுவிறுப்பாய் செல்லும் ஒரு மர்ம நாவலின் பக்கங்களைப் படிப்பதைப் போல் உணர்ந்து எதிர்கொள்ளுங்கள்.

‘வருவது வரட்டும்’ என்ற மனநிலைக்கு வந்து விட்டீர்கள் என்றால், அது உங்களுக்கு மகத்தான சக்தியைத் தரும். இந்த சக்திக்கு நிகர் எதுவுமே கிடையாது. அடுத்த நொடி உங்களுக்குள் உற்சாகம் பீறிட்டுக் கிளம்புவதை உணர்வீர்கள். இதன் மூலம் யாராலும் உங்களுக்குத் தர முடியாத நம்பிக்கையை, நீங்களே உங்களுக்கு அளித்துக்கொள்வீர்கள். அப்போது நீங்கள் சுவாசிக்கும் காற்று புத்தம் புதிதாக இருக்கும். நீங்களே உங்களை ஆரோக்கியமாய் உணர்வதை விட சிறந்த விஷயம் இருக்கிறதா, என்ன? இதற்கு அர்த்தம், ‘நீங்கள் ஒரு செயலையும் செய்ய வேண்டாம். முடமாகி விடுங்கள்’ என்பதல்ல. செய்வதை செய்து கொண்டிருங்கள்.

அது சரி, அந்த பிரச்னை எப்படி முடியும்? அது நல்லபடியும் முடியலாம். வேறு விதமாகவும் இருக்கலாம். அது நமக்குத் தேவையற்றது. ஏனென்றால், நீங்களே அது எப்படி வேண்டுமானாலும் முடியட்டும், நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டீர்களே..!
(வேலை வரும்...)