மீண்டும் வதைக்கும் மின்வெட்டு! என்னதான் நடக்கிறது..?





‘‘2014ம் ஆண்டில் தமிழகம் மின்மிகை மாநிலமாகத் திகழும்’’ என்று கடந்த அக்டோபர் 25ம் தேதி சட்டசபையில் உறுதியளித்தார் தமிழக முதல்வர். அதற்காக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் ராஜகோபுரமே மறையும் அளவுக்கு ஃபிளக்ஸ் போர்டு வைத்துக் கொண்டாடினார்கள் ஆளுங்கட்சியினர். ஆனால் யதார்த்தம் என்னவோ எதிர்மறையாக இருக்கிறது. கொஞ்சநாள் நிம்மதியாகக் கழிந்த பொழுதுகள் மீண்டும் நசநசக்கத் தொடங்கி விட்டன. சென்னை தவிர பிற பகுதிகளில் தினமும் 6 முதல் 10 மணி நேரம் மின்வெட்டு. அதுவும், ‘எப்போது போகும், எப்போது வரும்’ என்ற அறிவிப்பின்றி. வழக்கம் போலவே தொழில்கள் ஸ்தம்பித்து இயல்பு குலைந்து தவிக்கிறது தமிழகம்.

‘‘மின்தடைக்குக் காரணம் மத்திய அரசுக்குச் சொந்தமான மின் உற்பத்தி நிறுவனங்களே’’ என குற்றம் சாட்டுகிறார் முதல்வர். ஆனால், ‘‘தமிழக மின் உற்பத்தி நிறுவனங்களில் நிலவும் அலட்சியமும், தொலைநோக்கற்ற மின் திட்டங்களுமே இதற்குக் காரணம்’’ என்கிறார்கள்  மின்துறை நிபுணர்கள். ‘‘காற்றும், காலமும் மனது வைத்தால் தவிர, நிரந்தரத் தீர்வுக்கு வாய்ப்பில்லை’’ என்றும் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்கள் அவர்கள்.

‘‘தமிழகத்தை பல விஷயங்களில் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு மத்திய அரசு நடத்துகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், மின்தடை விவகாரத்தைப் பொறுத்தவரை நிலை வேறு. தமிழக மின் வாரியத்தில் உள்ள நிர்வாகச் சீர்கேடு களை அகற்றி, கண்காணிப்பு அமைப்புகளை பலப்படுத்தி, அறிவிக்கப்பட்டுள்ள மின்திட்டங்களை விரைவுபடுத்தினால் மட்டுமே இந்தப் பிரச்னை தீரும்’’ என்கிறார் ‘வெளிப்படை மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்கத்தின்’ தலைவரும், ஓய்வுபெற்ற மின்வாரியப் பொறியாளருமான சி.செல்வராஜ்.

‘‘தமிழகத்துக்கு இன்றைக்கு எவ்வளவு மின்சாரம் தேவை என்று எவரிடமும் கணக்கே இல்லை. மூன்று வருடங்களாக, ‘12 ஆயிரம் மெகாவாட் தேவை’ என்றே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஏகப்பட்ட புதிய சர்வீஸ்கள் வழங்கப்படுகின்றன. அதையெல்லாம் கணக்கிட்டால், தேவை 13 ஆயிரம் மெகாவாட்டுக்கு அதிகமாகி இருக்கும். மின்சாரத்தை உற்பத்தி செய்வது இன்று நினைத்தால் நாளை நடந்து விடாது. நீண்டகால செயல்முறை அது. அதற்குத் தகுந்தாற்போல நிர்வாகம் விரைவுபடுத்தப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மின் உற்பத்தி நிலையங்களில் பல முறைகேடுகள் நடக்கின்றன. பிக்கல், பிடுங்கல் காரணமாக கான்ட்ராக்டர்கள் தடுமாறுகிறார்கள். பணிகளும் தரமற்றவையாக இருக்கின்றன. அதனால் அடிக்கடி உற்பத்தியில் தடங்கல் ஏற்படுகிறது.



இந்த நிலையை மாற்ற, மின் வாரியத்தைப் பலப்படுத்த வேண்டும். வல்லூர், மேட்டூர், வடசென்னை மின்நிலையங்கள் முறையாக செயல்பட்டாலே தமிழகம் தன்னிறைவு அடைந்து விடும். ஆனால் அவை எப்போது முழுமையாக செயல்படும் என்றே தெரியவில்லை. இப்போதைக்கு காற்றாலைகளை நம்பியே தமிழகம் இருக்கிறது. 7200 மெகாவாட் உற்பத்தி செய்யும் அளவுக்கு இங்கே காற்றாலைகள் உண்டு. ஆனால் 3200 மெகாவாட்டை கையாளத்தான் நம்மிடம் ‘லைன் கெபாசிட்டி’ இருக்கிறது. ஜூலை முதல் செப்டம்பர் வரை காற்று நன்றாக வீசியதால் 3000 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. இப்போது காற்று குறைந்து விட்டதால், பல மணி நேரம் மின்வெட்டு செய்யும் நிலைமை. மத்திய அரசைக் குற்றம் சாட்டுவதன் மூலம் இங்குள்ள பிரச்னைகள் மறைக்கப்படுகின்றன. அவற்றைக் கண்டறிந்து சமரசமில்லாமல் மிகக்கடுமையாக நடவடிக்கை எடுத்தால் மட்டுமே காலப்போக்கிலாவது நிலை சீராகும்’’ என்கிறார் செல்வராஜ்.

தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் தலைவர் காந்தியும் சில ஆதாரங்களை முன்வைத்து இக்கருத்தை வழிமொழிகிறார். ‘‘மத்திய மின் வாரிய ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிப்படி, புதிய மின்நிலையங்களில் அதிகபட்சம் 6 மாதம் மட்டுமே சோதனை ஓட்டம் நடத்த வேண்டும். ஆனால், மேட்டூர், வடசென்னை, வல்லூர் மின் நிலையங்கள் ஒன்றரை வருடங்களாக சோதனை முறையில் செயல்படுகின்றன. இவற்றின் உண்மை நிலை தெரியவில்லை. சில மின்நிலையங்கள் ஒரு மாதம் இயங்கினால் 2 மாதங்கள் பழுதாகி நிற்கின்றன. மின் நிலையங்களில் தகுதிவாய்ந்த கண்காணிப்பு அமைப்புகள் இல்லை.  

மேட்டூர் 600 மெகாவாட் மின்நிலையப் பொறுப்பு, மின்சாரப் பொருட்களை உற்பத்தி செய்கிற ஒரு தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. இதே நிறுவனத்துக்கு ஏற்கனவே வழுதூர் என்ற பகுதியில் 92 மெகாவாட் உற்பத்தி செய்யும் எரிவாயு மின் நிலையம் ஒன்றை அமைக்கும் பணியும் ‘முழுப்பொறுப்பு’ அடிப்படையில் (மின்நிலையத்தை உருவாக்கி, செயல்படும் நிலையில் வழங்க வேண்டும். 1 வருட கியாரண்டியும் உண்டு) வழங்கப்பட்டது. இந்த மின்நிலையம் தொடங்கிய சில மாதங்களிலேயே (2010 ஜனவரி) ‘ஃபெயிலியர்’ ஆகிவிட்டது. இந்நிலையத்துக்கு நாளொன்றுக்கு சுமார் 4.50 லட்சம் கன அடி கேஸ் வாங்குவதாக ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. கேஸை பயன்படுத்தினாலும்,பயன்படுத்தாவிட்டாலும் பணம் கொடுத்தாக வேண்டும்.

 ஃபெயிலியர் ஆன மின் நிலையத்தை மே 2011ல்தான் சரிசெய்தார்கள். சுமார் 488 நாட்கள் பயன்படுத்தாத எரிவாயுவுக்கு கோடிக்கணக்கில் பணத்தை மின் வாரியம் தண்டம் அழுதது. இப்போதும் அங்கிருந்து வெறும் 72 மெகாவாட் மின்சாரம்தான் கிடைக்கிறது. இவ்வளவு இழப்புகளுக்குக் காரணமாக இருந்த அதே நிறுவனத்துக்கு மீண்டும் மேட்டூர் மின் நிலையத்தை அமைக்கும் பொறுப்பை ஏன் கொடுக்க வேண்டும்?  

தமிழக மின் வாரியத்தோடு ஒப்பந்தம் போட்டுள்ள மத்திய அரசு நிறுவனங்கள் சரியாக செயல்படாத பட்சத்தில், அந்நிறுவனங்களை வெளியேற்றவும், அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவும், இழப்பீடு கேட்கவும் தமிழக அரசுக்கு முழு உரிமை உண்டு. அதைச் செய்யாமல் குற்றம் சாட்டுவதோடு ஒதுங்குவது ஏற்புடையதல்ல. மின்வாரிய சீர்கேடுகளைக் களையாமல், எடுக்கப்படும் பிற நடவடிக்கைகள் அனைத்துமே தற்காலிக ஏற்பாடுகளாகத்தான் இருக்கும். தற்போது மழைக்காலம்... அடுத்து பனி... இத்தருணங்களில் மின் உபயோகம் குறைவு. ஜனவரி மத்தியில் கோடைக்காலம் தொடங்கிவிடும். மின் தேவை அதிகரித்து விடும். இப்போதுள்ள நிலையில் எல்லா மின் நிலையங்களும் சரியாக இயங்கினால் கூட மேலும் பற்றாக்குறை ஏற்படவே செய்யும்’’ என்கிறார் காந்தி.  
தெளிவான திட்டமிடலுடன் கூடிய தொலைநோக்கான முடிவு களே எதிர்காலத்தின் இருட்டை விரட்ட உதவும் என்கிறார்கள் நிபுணர்கள். என்ன செய்யப் போகிறது அரசு..?
மத்திய அரசைக் குற்றம் சாட்டுவதன் மூலம் இங்குள்ள பிரச்னைகள் மறைக்கப்படுகின்றன

, வெ.நீலகண்டன்
படங்கள்: ஏ.டி.தமிழ்வாணன்