சென்னை நம்பர் 1 மனைவியிடம் அடி வாங்கும் ஆண்கள்...

‘‘யப்பா... என்னா அடி!’’ என கோவை சரளாவிடம் வடிவேலு செம மாத்து வாங்கும் சீனைப் பார்த்து இனி சிரித்துக் கொண்டிருக்க முடியாது. சீரியஸாகவே, தமிழ்நாட்டில் மனைவிகளிடம் அடிவாங்கும் கணவர்கள் பெருகிவிட்டார்கள் என அறிவித்திருக்கிறது ஆண்கள் பாதுகாப்பு சங்கம். இந்தியாவின் முக்கிய நகரங்கள் எங்கும் கிளை பரப்பியிருக்கும் இந்தச் சங்கத்தில் ‘பொண்டாட்டி டார்ச்சர் தாங்கலை’ என வந்து குவியும் புகார்களில் முதலிடம் சென்னைக்கு. மேல்நாடுகளுக்கு இணையாக ஃபீமேல்கள் வளர்ச்சி பெற்றிருக்கும் மும்பையில் கூட மனைவி டார்ச்சர் புகார் 2000தான் என்ற நிலையில், சென்னையின் ஸ்கோர் 5000! ‘‘ஏங்க இந்தக் கொடூரம்?’’ ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் அருள்துமிலனிடமே கேட்டோம்...

‘‘எங்ககிட்ட வர்ற புகார்கள்ல கிட்டத்தட்ட 10 சதவீதம், ‘பொண்டாட்டி அடிக்கிறா’ங்கற பிரச்னையா இருக்குங்க. ‘ஆண்கள்னா அழக்கூடாது. வீரமா இருக்கணும். பெண்கள்கிட்ட அடி வாங்கினதா வெளிய சொல்லிக்கிறது கேவலம்’... இப்படியெல்லாம் ஒரு மாயை நம்ம நாட்ல ஆண்களைச் சுத்தி எழுப்பப்படுது. இதனாலயே யாரும் இதை வெளியே சொல்ல முடியாம உள்ளுக்குள்ளேயே வச்சிப் புழுங்கறாங்க. இப்ப காலம் மாறி இருக்கு. ஆணும் பெண்ணும் சமம் என்கிற தெளிவு வந்திருக்கு. வீரம், கௌரவம்ங்கிற கட்டுக்களை உடைச்சு, ஆண்களும் வெளியே வந்திருக்காங்க. அதனோட அடையாளம்தான் இந்தப் புகார்கள்.

போன வருஷம் மட்டுமே குடும்பப் பிரச்னைகளால தற்கொலை செய்துக்கிட்ட இந்திய ஆண்கள் சுமார் 64 ஆயிரம் பேர். அதிலும் மனைவியோட நேரடி/ மறைமுகக் கொடுமைகளால இறந்துபோனவர்கள் சுமார் 34 ஆயிரம் பேர்னு ஒரு அறிக்கை சொல்லுது’’ என்கிற அருள்துமிலன், பொதுவாக ஆண்கள் வீட்டில் அடி வாங்குவதற்கும் ஒரு பொது இலக்கணம் வகுத்துச் சொல்கிறார்...
‘‘நாலு சுவற்றுக்குள்ள என்ன பேசினா என்ன? புருஷன் என்ன கொலையா பண்ணிடுவான்? அப்படீங்கற துணிச்சல்ல பெண்கள் பேசுற பேச்சுக்கள், பல சமயங்கள்ல எல்லை மீறும். முதன்முதலா இப்படி நடக்கும்போது ஒரு கணவன் பதிலுக்கு பதில் பேசுவான். அடிக்கவும் செய்வான். சொந்தக்காரங்க பஞ்சாயத்து பேச வரும்போது, மனைவி பேசினதெல்லாம் காத்துல போயிடும். இவன் அடிச்சது மட்டும்தான் நிக்கும். ‘மனுசனா நீ’ன்னு எல்லாரும் கரிச்சிக் கொட்டிட்டுப் போவாங்க.அதுக்கப்புறம் ஆண் சுதாரிச்சுடுவான். கிட்னி திருடனைக் கண்டுக்காம டீக்கடையில பேப்பர் படிக்கிற மாதிரி, வீட்லயும் பேப்பர் படிக்கப் பழகிடுவான். ஆனா, பெண்களைப் பொறுத்தவரைக்கும் அவங்க சொல்ற வார்த்தைக்கு எதிர்வினை வரணும். திருப்பித் திட்டுறது, அடிக்கிறதுன்னு ஏதாச்சும் இருக்கணும். இல்லாட்டி வார்த்தையோட கனம் கூடிக்கிட்டே போகும். அவன், இவன்ங்கிற ஒருமைப் பேச்சு, நாயி, எருமைன்னு ஏளனமா திட்டறது, பொருளாதார நிலையைச் சுட்டிக்காட்டி காறித் துப்புதல்... இப்படியா, ஏதோ சண்டைக்கு வர்ற மாடு கொம்பால மண்ணைக் குத்திக் கிளறுற மாதிரி பேச்சு வளரும். ஒரு கட்டத்துல, ‘நீயெல்லாம் ஆம்பிளையா?’ங்கற மாதிரி கேள்வி எழும்போது, எவனுக்குமே கோவம் வரும். அப்பவும் ஒரு ஜென் துறவி மாதிரி அமைதி காக்க ஒருத்தன் பழகிட்டான்னு வைங்க... அப்பதான் ஆரம்பமாகும் அடி!’’ , இப்படி பலரது அனுபவங்களிலிருந்து அவர் காட்சிகளை விவரிக்கிறார்.

‘‘ஆரம்பத்துல செல்லமாத்தான் அடிக்கிறாங்களோன்னு ஒரு சந்தேகத்துல பல ஆண்கள் இதை அலவ் பண்ணிடுவாங்க. மெதுமெதுவாத்தான் அடியும் வலியும் அதிகமாகும். அடிக்க ஆரம்பிக்கிற புதுசுல திட்டுக்கள் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி தெரியும். அதனால, பல ஆண்கள் ‘அவ வாயைத் தொறந்து பேசறதை விட நாலு அடி அடிச்சா கூட வாங்கிக்கலாம்’னு முடிவெடுத்துடறாங்க. ஆனா, ஒன்ஸ் இது பழக்கமாயிடுச்சுன்னா அப்புறம் மாத்த முடியாது. நமக்கு ஒரு அடிமை சிக்கிட்டான்டான்னு மனைவிகள் செட் ஆயிடுவாங்க. அதுக்கு அப்புறம் எப்பவாவது தட்டிக் கேட்டா, ‘நான் அடிப்பேன்... நீ வாங்கிக்குவே... இதுதானே நம்ம குடும்ப வழக்கம்? இப்ப என்ன புதுசா?’ங்கற மாதிரி டீல் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க.

ஆரம்பத்துல வெறும் கை, சுருட்டின பேப்பர், டவல், தலையணைன்னு சாஃப்ட்டா ஆரம்பிக்கிற அடி, போகப் போக மிக்ஸி கப், கரண்டி, டம்ளர்னு ஆபத்தா மாறும். கட்டை, இரும்பு பைப்னு ஹெவி வெயிட் பொருட்கள் எல்லாம் மண்டையைப் பதம் பார்க்கும் வீடுகளும் உண்டு. ஆனா, மனைவிகள் இதையெல்லாம் ஏன் செய்யிறாங்க? இதனால அவங்களுக்கு என்ன கிடைக்குது? பொறாமையா? வெளி உலக எக்ஸ்போஷர் இல்லாததால வர்ற அலுப்பா? எதுவும் தெரியல. முறையான புகார்களும் விசாரணையும் சகஜ மாகும்போதுதான் இந்தப் பிரச்னைக்கு முழுமையா தீர்வு கிடைக்கும்’’ என்கிறார் அவர் ஒரு நீண்ட பெருமூச்சோடு!இது கேள்விக்குறி!

‘‘உண்மையிலேயே மனைவியால் இவ்வளவு கணவர்கள் பாதிக்கப்படுகிறார்களா?’’ , வழக்குரைஞர் அஜிதாவிடம் பேசினோம்... ‘‘இது ஆண்களின் சமுதாயம். வரதட்சணை, குடும்ப வன்முறை, பாலியல் தொல்லைகள் என்று இறக்கும் பெண்கள்தான் இங்கே அதிகம். ஆண்கள் பாதிப்படைந்த ஒரு சில சம்பவங்களை வைத்துக்கொண்டு, ‘மனைவி அடிக்கிறார்கள்’ என்பதை எல்லாம் பெரிது படுத்த முடியாது. சமூகத்துக்கும், உறவுகளுக்கும் பயந்தே வாழும் பெண்களுக்கு கணவனை அடிக்கும் அளவுக்கு உடல்பலமும் மனபலமும் இருக்கிறதா என்பதே கேள்விக்குறிதான். இவர்கள் சொல்லும் புகார்களிலும் எத்தனை உண்மையானவை என்பது வழக்குகளை ஆராய்ந்து பார்த்தால்தான் தெரிய வரும்’’ என்றார் அவர்.

, டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்