நியூஸ் வே





*‘வடகறி’ படத்தில் ஜெய்க்கு ஈடாக அயிட்டம் நம்பர் ஆட சன்னி லியோன் என்கிற ‘குணச்சித்திர நடிகை’ வருவது தெரியும். இந்த கனடா நாட்டு அடல்ட்ஸ் ஒன்லி பட நடிகையின் வருகையால் கோலிவுட்டே பரபரத்துக் கிடக்கிறது. ‘‘நம்ம படத்திற்கும் பேசி வையுங்களேன்’’ என அடுத்த பட புரொட்யூசர்களிடம் கேட்டு வைத்திருக்கிறாராம் ஆர்யா.

*நடிகர் மாதவனுக்கு பிரதமரே போன் செய்தாலும், அவர் அதை எடுக்க மாட்டார். காரணம், தனக்கு வேண்டிய எல்லா நண்பர்கள் நம்பரையும் பதிவு செய்தே வைத்திருக்கிறார். அவர்கள் கூப்பிட்டால் மட்டுமே எடுப்பார். ‘அலை பாயுதே’ காலத்தில் சரி... இப்பவுமா?

*இன்னும் 15 நாட்கள் மட்டுமே ‘ஐ’ படத்திற்கு ஷூட்டிங் என்பதால், ஸ்கூல் விட்ட பிள்ளை மாதிரி சந்தோஷமாக இருக்கிறார் விக்ரம். தினமும் இரவு பகலாக ஜிம்மே பழியாகக் கிடந்து உடம்பை ஏற்றிக்கொண்டே இருக்கிறார். ‘‘இரண்டு மாதம் டைம் கொடுங்க, போதும்’’ என்பதுதான் டைரக்டர் தரணிக்கு அவர் கொடுத்திருக்கிற ரிக்வெஸ்ட்.



*வெள்ளாவி தேவதை டாப்ஸி, ‘ஆரம்பம்’ படத்தில் டல்லாவி தேவதையாக கன்னம் ஒட்டிக் காணப்பட்டார். ‘‘இது உனக்கு செட் ஆகவில்லை’’ என்று தோழிகள் ஆலோசனை சொல்லவே, கன்னாபின்னாவென சாப்பிட்டு அமுல் பேபி தோற்றத்திற்கு மாறி வருகிறார்.

*ஹன்சிகாவை எந்த கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம் ஆனால், சிம்புவைப் பற்றி கேட்டால் மட்டும், ‘‘நெக்ஸ்ட்’’ என சொல்லி
விடுகிறார். அவர் அம்மாவோ... ‘‘அவரு யாரு?’’ என்கிற கணக்காய் இருக்கிறார். என்னய்யா நடக்குது இங்கே!

*கவிஞர், இயக்குநர் லீனா மணிமேகலை, புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் கமலா தாஸ் கேரக்டரில் நடிக்கிறார். அனேகமாக அவரது சுயசரிதையை ஒட்டிப் படமாகும் எனத் தெரிகிறது. நடிகர் பிரதாப் போத்தன் டைரக்ட் செய்கிறார். இப்போதே கமலா தாஸின் படைப்புகளில் மூழ்கிக் கிடக்கிறார் லீனா.

*கதாநாயகியைக் காப்பாற்றணும், ஒரே அடியில் ஏழு பேரை வீழ்த்தணும், கல்யாண குணங்கள் கொண்ட ஹீரோவாக வரணும் என கதை சொல்லப் போனால், ‘‘அய்யோ சாமி... இது எதுவுமில்லாமல் சாதா மனுஷனை கதையில் கொண்டு வாங்க’’ என்கிறாராம் விஜய் சேதுபதி. சம்பளத்தில் வம்பு செய்யாத காரணத்தால் இன்னிக்கு அவர்தான் தயாரிப்பாளர்களுக்கு ‘கண்கண்ட தெய்வம்’.

*இந்தத் தடவை டிசம்பருக்கு சேரன், வெங்கட் பிரபு, ஜீவா, பாலு
மகேந்திரா நாலு பேரும் மோதுகிறார்கள். கலவையான டீம் என்பதால் நாலும் நாலு விதமாய் இருக்கும் என்று பேச்சு அடிபடுகிறது. தமிழ் சினிமா செழித்துத் தளிர்த்தால் சரி!

*ஏ.ஆர்.ரஹ்மான் வருஷத்திற்கு இரண்டு படம் மட்டும் தமிழில் செய்தால் போதும் என தீர்மானித்து விட்டார். ஹாலிவுட்டில் அதிகமாக அழைப்புகள் வர ஆரம்பித்திருப்பதே காரணம். குறிப்பாக ஷங்கர், மணிரத்னம் படங்கள் போதும் என்கிற முடிவுக்கு வந்திருக்கிறாராம்.

*சென்னையில் ஹோட்டல் செலவு தாக்குப் பிடிக்க முடியாமல், கிழக்குக் கடற்கரைச் சாலையில் சொந்த இடம் வாங்கி கனவு இல்லம் கட்டும் முயற்சியில் இருக்கிறார் பூர்ணா. தெலுங்கு பக்கமும் வாய்ப்புகள் வந்துகொண்டிருப்பதால் உடற்பயிற்சி செய்து உடம்பையும் குறைத்துக் கொண்டிருக்கிறார்.

*‘ஊதா கலர் ரிப்பன்’ புகழ் ஸ்ரீதிவ்யா தடுமாறி தமிழ் பேசுகிறார், திக்கித் திணறி இங்கிலீஷ் பேசுகிறார், தெலுங்கு மட்டும் சரளமாகத் தெரிகிறது. ‘வ.வா.சங்க’த்திற்குப் பிறகு தமிழில் வாய்ப்புகள் வண்டி கட்டி நிற்பதால், அவசர அவசியமாக ஆங்கில டியூஷன் ஏற்பாடாகி இருக்கிறது. உடன் நடிக்கும் ஹீரோக்களே தமிழ் வாத்தியார் வேலை செய்வதால், தமிழ் டியூஷன் செலவு மிச்சம்.



சைலன்ஸ்

‘வேர்ல்டு’ படத்தை 17சியில் முடித்துத் தரும் வாக்குறுதியோடு களமிறங்கினாராம் கண்ணாடி இயக்குனர். 17சி என்பது பஸ் நம்பர் இல்லை, பட்ஜெட். ஆனால் சொன்ன பட்ஜெட்டையும் தாண்டி நாலு மடங்கு அதிகமானது செலவு. படத்துக்கும் சரியான வியாபாரம் இல்லை, எதிர்பார்த்த வசூலும் இல்லை என்பதால் நொந்துபோன தயாரிப்பு, இயக்குனரை தனியே அழைத்து கண்டிஷன் போட்டிருக்கிறது. ஒல்லி தம்பியை வைத்து சம்பளம் வாங்காமல் ஒரு படம் இயக்கித் தர வேண்டும் என்பதுதான் கண்டிஷன்.

புது வருஷத்தில் மதுரை காமெடி மூன்று படங்களில் நடிக்க ஒப்புதல் கொடுத்திருக்கிறாராம். ஆனால், வாங்கின தொகையை மட்டும் யாரிடமும் சொல்லி விடக்கூடாது என புரொட்யூசர்களிடம் வேண்டிக் கொண்டாராம். இனிமேலும் தாமதிக்கக் கூடாது என்ற நிலைமையில்தான், முன்பு வாங்கினதில் பாதியை மட்டும் வாங்கியிருக்கிறாராம்.

*‘ஜில்லா’ படத்தில் விஜய்யுடன் இணைந்து துள்ளல் ஆட்டம் போட்டிருக்கிறார் பிரிட்டிஷ் மாடலும் நடிகையுமான ஸ்கேர்லெட் வில்சன். விஜய்யின் மூவ்மென்ட்ஸ் பார்த்து அசந்து போன ஸ்கேர்லெட், ‘‘விஜய் ஒரு சூப்பர் டான்ஸர்’’ என பாராட்டுப் பத்திரம் வாசித்திருக்கிறார்.

*ஷூட்டிங் இல்லாத நாட்களில் யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வட இந்தியா போய்விடுவார் விஷால். ‘‘இமயமலை சார்ந்த ஏரியாக்களில் மக்களோடு மக்களாக கலந்து நேரத்தைப் போக்குவதே தனி அனுபவம்’’ என்கிறார்.