கர்ணனின் கவசம்





அதர்வண வேதத்தின் 5119 மந்திரங்களில், ஐந்தாயிரம் மந்திரங்கள் அலர்மேல் மங்கை குறித்துத்தான் பாடப்பட்டுள்ளன. தமிழ் சித்தர்களின் 2019 பாடல்களும் அவளைப் பற்றியதுதான். அவற்றில் முக்கியமானவற்றை ரவிதாசன் அட்சரம் பிசகாமல் உச்சரித்தான். ஸ்ரீசக்கரத்தில் அமர்ந்திருந்த பாலாவின் உடல் மெல்ல மெல்ல தீப்பிழம்பானது.
‘‘இங்க என்ன நடக்குது..?’’ , நம்ப முடியாத அதிர்ச்சியுடன் சூ யென் கேட்டான்.

‘‘நாம கர்ணனோட கவசத்தை கைப்பற்ற வேண்டாமா? அதுக்கான வேலைகள்தான் நடக்குது...’’ சிந்தனையில் ஆழ்ந்தபடி ஃபாஸ்ட் பதிலளித்தான்.
‘‘எது? இந்த சித்து வேலைகளா?’’
‘‘இது சித்து வேலையில்லை சூ யென். ரவிதாசன் சொன்னதை நினைச்சுப் பார். உனக்கே எல்லாம் புரியும்...’’
‘‘புரியாததுனாலதானே கேட்கறேன்...’’

‘‘என்ன புரியலை? ஆதித்த கரிகாலனுக்கு இந்திரன் கர்ணனோட கவசத்தை கொடுத்ததா ரவிதாசன் சொன்னானா
இல்லையா?’’
‘‘ஆமா...’’
‘‘அப்படி ஆதித்த கரிகாலன் வாங்கின கவசம் இப்ப எங்க இருக்கு?’’
‘‘அதானே... இப்ப அது எங்க இருக்கு?’’ இடையில் புகுந்த ஆனந்த், ஆர்வத்துடன் கேட்டான்.

‘‘அது ரவிதாசனுக்கு மட்டும்தான் தெரியும். அதை தாராவோ, ஆதித்யாவோ எடுத்துடக் கூடாதுன்னுதான் அலர்மேல் மங்கை தாயார்கிட்ட வேண்டிக்கிட்டு இருக்கான். என் சந்தேகம் என்னன்னா..?’’
‘‘என்ன... என்ன..?’’ ஃபாஸ்ட் பேசி முடிப்பதற்குள் ஆனந்த் புகுந்தான்.
‘‘கர்ணனோட கவசம் கலிங்கத்து பக்கம் இருக்கலாம்னு நினைக்கறேன்...’’
‘‘கலிங்கமா?’’

‘‘ம்... அசோக சக்கரவர்த்தி ஆட்சி செய்த பிரதேசம். இன்னிக்கி ஒடிசா, பீகார், சட்டிஸ்கர், மேற்கு வங்கம்னு மாநிலம் மாநிலமா பிரிஞ்சு இருக்கிற பூமி...’’
‘‘எதை வச்சு சொல்ற?’’ சிந்தனையுடன் சூ யென் கேட்டான்.

‘‘சிம்பிள். பிற்கால சோழர் வரலாற்றை கொஞ்சம் நினைச்சுப் பார். வம்ச விருத்தி இல்லாததால சோழர்களோட ஆட்சி முடிவுக்கு வந்தது. அப்ப இரண்டாம் ராஜேந்திர சோழனோட மகள் வயிற்றுப் பேரன்தான் குலோத்துங்க சோழனா பட்டத்துக்கு வந்தான். வந்ததும் என்ன செஞ்சான்? கலிங்கத்துக்கு மேல போர் தொடுத்தான். இவனோட தள
பதியான கருணாகர தொண்டைமான் அந்த நிலத்தையே தீக்கிரை ஆக்கினான்..’’

‘‘இந்த வரலாற்றை நானும் கடிகைல படிச்சிருக்கேன்...’’
‘‘இங்கதான் நாம யோசிக்கணும் சூ யென். எதுக்காக கலிங்க நிலப்பரப்பை அப்படி குலோத்துங்கன் எரிக்கணும்? சோழர்கள் அந்தளவுக்கு கொடூரமானவர்களா என்ன..?’’
‘‘யோசிக்க வேண்டிய விஷயம்தான்...’’

‘‘எதையோ தேடிப் போயிருக்காங்க. அது கிடைக்காத கோபத்தைக் காட்டியிருக்காங்க... சோழர்கள் தேடிப் போனது ஏன் கர்ணனோட கவசமா இருக்கக் கூடாது? தனக்கு கிடைச்ச கவசத்தை ஆதித்த கரிகாலன் கலிங்கத்துல மறைச்சு வைச்சிருக்கலாம் இல்லையா?’’
கண்கள் விரிய சூ யென்னும், ஆனந்தும் ஃபாஸ்ட்டை பார்த்தார்கள்.

‘‘அங்க என்ன பேச்சு?’’ என மந்திரங்களை உச்சரிப்பதை நிறுத்திவிட்டு ரவிதாசன் கர்ஜித்தான். மற்ற மூவரும் சட்டென்று அமைதியாகி ஸ்ரீசக்கரத்தை ஏறிட்டார்கள்.
அங்கே கர்ணனின் கவசம் இருக்குமிடம் புள்ளி புள்ளியாகத் தெரிந்தது.

குள்ள மனிதன் கட்டளையிட்ட பிறகு, மத்திம மனிதன் தாமதிக்கவில்லை. பீஷ்மரிடம் இருந்து பெற்ற பிரும்மாஸ்திரத்தை எரிகல் மனிதனை நோக்கி ஏவினான்.
இப்படியொரு திருப்பத்தை எரிகல் மனிதன் எதிர்பார்க்கவில்லை என்பதை அவனது கண்களே காட்டிக் கொடுத்தன. குருக்ஷேத்திரப் போரின் இறுதியில் அஸ்வத்தாமனால் ஏவப்பட்ட பிரும்மாஸ்திரம் அது. பல்லாயிரம் வருடங்களாக எவர் உயிரையும் குடிக்காமல், எவரையும் அழிக்காமல், துடித்துக் கொண்டிருக்கிறது. அந்த அஸ்திரத்தை கிருஷ்ணர் உட்பட யாராலும் திரும்பப் பெற முடியாது என்பதும், ஐந்து பேரின் உயிரை குடிக்காமல் இனி அது ஓயாது என்பதும் அவனுக்கு நன்றாக தெரியும்.

எனவே தன்னை நோக்கி வரும் அஸ்திரத்திலிருந்து தப்பிக்க முடியுமா என நான்கு புறமும் ஆராய்ந்தான். குனிந்தான். எகிறினான். மறைவதற்கு இடம் தேடினான்.
ஆனால், ஆஜானுபாகுவான அவனது உருவம் இது எதற்கும் இடம் தரவில்லை. சீரான வேகத்துடன் அந்த பிரும்மாஸ்திரம் தன்னை நோக்கி வருவதை செய்வதறியாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
10... 9... 8... 7... என கொஞ்சம் கொஞ்சமாக அந்த பிரும்மாஸ்திரம் அவனை நெருங்கிக் கொண்டிருந்தது. 5... 4... 3... என அடிகள் குறைந்து கொண்டே வந்து ,
பட் என்று அவனைத் தாக்கியது.

அடுத்த கணம் துண்டுகளாக எரிகல் மனிதன் சிதறினான்.
அதே வழிமுறைதான். திரிசங்கு சொர்க்கத்தில் ஆதித்யாவும், தாராவும் என்ன செய்தார்களோ... காஃபீன் மனிதனை அழிக்க எப்படிப்பட்ட யுக்தியை கையாண்டார்களோ அதையேதான் கபாடபுர வெளியில் விஸ்வரூப தரிசனத்துடன் காட்சி தந்த பகவான் கிருஷ்ணர் விஷயத்திலும் செய்தார்கள்.

இருவரும் ஒட்டி நின்றார்கள். அதே நேரம் ஒருவரது தலைக்கு நேராக மற்றவரின் கால்கள் வரும்படி பார்த்துக் கொண்டார்கள். இப்படி 69 ஆக நின்ற பிறகு கிருஷ்ணரை நோக்கி பாய்ந்தார்கள். தாராவின் கைகளில் இருந்து புறப்பட்ட ஜ்வாலை, கிருஷ்ணரை நெருங்கியதும் பன்னீராகக் குளிர்ந்தது. இருவரும் அவர் மேனியில் ஊடுவினார்கள்; இரண்டறக் கலந்தார்கள்.
கண்கலங்க இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் விமலானந்தர் உருவில் இருந்த இந்திரன்.

திரிசங்கு சொர்க்கத்தில் தாயத்தை உருட்டினார் சகுனி. கணீர் என்ற ஒலியுடன் விழுந்த தாயத்தில் தெரிந்த எண்ணை பார்ப்பதற்காக குனிந்தார்.
அது மட்டும்தான் அவருக்கு தெரியும். அதன் பிறகு நடந்ததை அவர் மட்டுமல்ல, அவர் அருகில் இருந்த துரியோதனன், பரமேஸ்வர பெருந்தச்சனால் கூட உணர முடியவில்லை. மூவரும் மூன்று திசைகளில் சிதறினார்கள். சுவரில் முட்டிக் கொண்டார்கள். ‘‘அம்மா...’’ என்ற அலறலுடன் தங்கள் தலையைத் தடவியபடியே தாயம் விழுந்த இடத்தை பார்த்தார்கள்.
அங்கு தாயம் இல்லை.

பதிலாக சிறகை உதறியபடி பறக்கத் தயாராக இருந்தார் ஜடாயு.
மூவரும் அதிர்ந்து போய் ஒருவர் முகத்தை மற்றவர்கள் பார்த்துக் கொண்டார்கள்.
கூரான நகத்தை தரையில் ஊன்றியபடி நடந்த ஜடாயு, மூவரையும் சுற்றிச் சுற்றி வந்தார். பிறகு சிறகை அசைத்தார். அப்படியே எம்பினார். மாளிகையின் கூரை வெடித்துச் சிதறியது. அடுத்த நொடி, விண்ணில் ஒரு புள்ளியாக மறைந்தார்.

‘‘மொத்தம் 58 துண்டுகள்...’’ என்று குள்ள மனிதன் முணுமுணுத்ததும் மற்ற எட்டு பேரும் அதிர்ந்தார்கள்.
‘‘என்ன சொல்ற?’’ உயரமான மனிதன் படபடத்தான்.

‘‘எரிகல் மனிதன் 58 பாகமா சிதறியிருக்கான். ஒவ்வொரு பாகமும் ஒரு குகை. அதுக்குள்ள 58 ரிஷிகள் தவம் செஞ்சுட்டு இருக்காங்க...’’
‘‘இப்ப நாம என்ன செய்யணும்?’’ மத்திம மனிதன் எதற்கும் தயாராக இருந்தபடி கேட்டான்.
‘‘கொஞ்சமும் தாமதிக்காம நாம ஒன்பது பேரும் இந்த 58 குகைகளுக்குள்ளயும் ஊடுருவணும். ரிஷிகளோட தவத்தைக் கலைக்காதபடி பார்த்துக்கணும்...’’
‘‘சரி...’’

‘‘சிற்ப ரகசியத்துக்கு பெயர் போன பரத்வாஜ முனிவரோட அம்சம்தான் இந்த 58 பேரும். இதை மட்டும் மனசுல வைச்சுக்குங்க... கமான்... ஒன்... டூ... த்ரீ...’’
ஒன்பது பேரும் பாய்ந்தார்கள்.
‘‘வாவ்... கர்ணனின் கவசம் எங்க இருக்குனு அதோ தெரியுது...’’ என்று ஆனந்த், ஆனந்தக் கூத்தாடியது ஒரு விநாடிதான். அதற்குள் எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.
தோன்றியது போலவே கர்ணனின் கவசம் இருந்த இடம் மறைய ஆரம்பித்தது.

காரணம், மந்திரம் உச்சரிப்பதை ரவிதாசன் நிறுத்தியது தான்.
இந்த அவகாசமே ஸ்ரீசக்கரத்துக்குள் அமர்ந்திருந்த பாலாவுக்கு போதுமானதாக இருந்தது. சட்டென்று எழுந்து நின்றாள்.
அவளது கைகளில் இருந்த ருத்ரனின் இதயம், காளிங்கனாக மாறியது.

ஸ்பேஸ் ஸ்டேஷனில் இருந்த துரோணர், பரத்வாஜ முனிவரின் சிற்ப ரகசியத்தை மெல்ல மெல்ல வெளிப்படுத்த ஆரம்பித்தார்...
திரிசங்கு சொர்க்கத்தில் ஐந்து சாவிகளாகப் பிரிந்த குந்தி, மீண்டும் ஒன்று சேர்ந்தாள். விண்ணதிர சிரித்தாள். அங்கிருந்தபடியே பாலாவுக்கு கட்டளையிட்டாள்.
சீறிய காளிங்கனைப் பார்த்து ரவிதாசன் கண்களில் முதல்முறையாக அச்சம் துளிர்த்தது. தோற்றுவிட்டோம். முழுமையாகத் தோற்றுவிட்டோம்.
வெறுப்புடன் ஃபாஸ்ட், சூ யென், ஆனந்த் ஆகிய மூவரையும் பார்த்தான். இவர்கள் மட்டும் அமைதியாக இருந்திருந்தால்... மந்திரங்கள் உச்சரிக்கும்போது தொந்தரவு செய்யாமல் இருந்தால்...
கிடைத்திருக்கும். பல்லாயிரம் வருடங்களாக பாடுபட்டு வந்ததற்கு பலன் கிடைத்திருக்கும். தலைமுறை தலைமுறையாக எதைத் தேடி வருகிறோமோ, அந்த கர்ணனின் கவசத்தைக் கைப்பற்றியிருக்கலாம்.

எல்லாம் கைகூடி வந்த நேரத்தில் இப்படிப் பறிகொடுத்துவிட்டோமே...
இயலாமையுடன் தன் மகன் சங்கரை பார்த்தான். கண்களால் சேதி சொன்னான். புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக சங்கர் தலையசைத்தான்.
அடுத்த கணம் அவனை குண்டுக்கட்டாக தூக்கி தன் சக்தி அனைத்தையும் திரட்டி கபாடபுரத்துக்கு வெளியே வீசி எறிந்தான்.
அதே நேரம்...

காளிங்கனும் சீற்றத்துடன் தன் விஷத்தைக் கக்கினான். அந்த வெப்பத்தில் ரவிதாசன், ஃபாஸ்ட், சூ யென், ஆனந்த் ஆகியோர் சாம்பலானார்கள்.
குந்தியின் கட்டளையை ஏற்று, பாலாவும் தன்னைத்தானே மாய்த்துக் கொண்டாள். அரவானுக்கு சமமாக களப்பலியானாள்.
கிருஷ்ணருக்குள் ஒன்று கலந்த தாராவும், ஆதித்யாவும் அவரது நெஞ்சுக் கூட்டை அடைந்தார்கள். எட்டிப் பார்த்தார்கள். விண்வெளி வீரரைப் போல் உடையணிந்திருந்த இந்திரனான விமலானந்தர், அவர்களைப் பார்த்து கை கூப்பினார்.

அதே நேரம்...
திரிசங்கு சொர்க்கத்திலிருந்து ஜடாயுவும், கபாடபுரத்திலிருந்து காளிங்கனும் அங்கு வந்து சேர்ந்தார்கள்.
ஐந்து உயிர்களைக் குடித்த திருப்தியுடன் அந்த பிரும்மாஸ்திரம் வைகுண்டத்துக்குச் சென்றது. பழையபடி பீஷ்மரின் கைகளில் தஞ்சமடைந்தது.

‘‘மணல் மனிதனே 58 ரிஷிகள் தவம் செய்யும் மணல் குகைகளாக சிதறியிருக்கிறான். ஜடாயுவின் சிறகில் மறைந்திருக்கிறாள் தாரா. அவளது சிரசில் வீற்றிருக்கிறாள் சரஸ்வதி. சரஸ்வதியின் மறைவே, காளிங்கனின் நர்த்தனம். நர்த்தனத்தின் முடிவே மதுரை வெள்ளியம்பல நடராஜர். நடராஜரின் சொரூபமே கபாடபுரத்தின் இருப்பு. அந்த இருப்பின் சுவாசத்தில் துடிக்கிறது பொக்கிஷத்தின் வரைபடம். வரைபடத்தின் புள்ளிகளே இன்றைய கோயில்கள். சிற்பங்களின் மொழியே தேடும் புதையலின் திசைகள்...’’ என்று முணு
முணுத்தார் வியாசர்.

‘‘குருவே... இது..?’’ சோழ இளவரசியும், ஆதித்த கரிகாலனின் சகோதரியுமான குந்தவை நாச்சியார் பயபக்தியுடன் கேட்டாள்.
‘‘கர்ணனின் கவசம் எங்க இருக்குன்னு சொல்ற அடையாளம்...’’
‘‘அப்படீன்னா அந்த பொக்கிஷம் இப்ப கிடைக்கப் போகுதா?’’

‘‘ஆமா, குந்தவை. ஆனா, அது எதிரிகள் கைக்கு போகவும் வாய்ப்பிருக்கு...’’
‘‘என்ன சொல்றீங்க..?’’
‘‘நீயே பாரும்மா...’’
குந்தவை பார்த்தாள். அதிர்ந்தாள்.

பூமிப்பந்தில், இந்திய வரைபடம் முழுக்க... தமிழகத்தைச் சேர்ந்த நாமக்கல்லில் ஆரம்பித்து ஒடிசா, சட்டிஸ்கர், பீகார், குஜராத்... என காஷ்மீர் வரை 58 புள்ளிகள் பொன்னிறத்தில் மின்னின. மின்னியவை அனைத்தும் இணைந்து கவச குண்டலமாக மாறின.
அந்த கவச குண்டலம், சாட்சாத் கர்ணனுடையதுதான்.  
அதே நேரம்...

பரமேஸ்வர பெருந்தச்சன் உக்கிரத்துடன் கிருஷ்ணரை நெருங்கிக் கொண்டிருந்தார். அவரது கைகளில் அம்பு ஒன்று இருந்தது.
எந்த அம்பை மறைந்திருந்து ராமர் எய்தி, வாலியை வீழ்த்தினாரோ ,
எத்தனை அவதாரம் எடுத்தாலும் இதே அம்பால் உங்களை வீழ்த்தியே தீருவேன் என்று எந்த அம்பை தன் கைகளில் ஏந்தியபடி வாலி சபதமிட்டானோ ,
அந்த அம்பைத்தான் கிருஷ்ணரை அழிப்பதற்காக பரமேஸ்வர பெருந்தச்சன் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தார்.
(அடுத்த இதழில் முடியும்!)
கே.என்.