சொல்றேண்ணே... சொல்றேன்!

இங்க புகழ்ச்சிக்கு மயங்காதவன் யாருண்ணே? ‘‘நீதான் உலகத்துலயே புகழ்ச்சிக்கு மயங்காத ஒரே ஆளு’’ன்னு சொல்லிப் பாருங்க... பயபுள்ள அந்தப் புகழ்ச்சிக்கும் மயங்கும். சின்ன வயசுல, ‘‘நீ யாருண்ணே... நாலுவேரு பாரத்தை நீயே தாங்கலைன்னா இந்த ஊர்ல வேற யாரு தாங்குவா’’ன்னு ஒருத்தனை உசுப்பேத்தி, அவன் முதுகுல ஏறித்தான் மாங்கா பறிப்போம். ஊருக்கே சேர்த்து ஒடம்பை வளத்து வச்சிருக்குற குண்டம்மாகிட்ட போய், ‘‘என்னக்கா எளச்சிட்டே?’’ன்னு கேட்டா போதும்... கலக்கலா ஒரு கருப்பட்டி காபி கன்ஃபார்ம்!

புகழ்ச்சிங்கறது பெரும்பாலும் பொய்யிதான்ணே... ஆனா என்ன செய்யிறது? தெனம் தெனம் வாழ்க்கைய ஓட்ட அது தேவைப்படுதே! ஒருநாளு வீட்ல சாப்பிடும்போது, ‘‘இவ்வளவு ருசியான சாப்பாட்டை நான் சாப்பிட்டதே இல்லை’’ன்னு பொண்டாட்டிகிட்ட சொல்லுங்களேன். அன்னிக்கு உங்க வாயில என்ன வாடை வந்தாலும் அவங்க சைட்ல வசவு வராது. அதுவே ஊருக்குப் போகையில, ‘‘பொண்டாட்டி கையால தின்னு தின்னு நாக்கு கோமாவுல கெடக்கும்மா... அத குருமா வச்சி எழுப்பு’’ன்னு அம்மாகிட்ட அடிச்சி விடுங்க. ‘‘பிள்ளையா அவன்? தங்கம்டீ’’ன்னு அந்த ஏரியாவுல பிழியப் பிழிய உங்களுக்கு பி.ஆர் வேலை நடக்கும்.

தான் ஒரு ஹீரோவா வாழணும்னுதான்ணே எல்லா மனுசனுக்கும் ஆச. எம்.ஜி.ஆர் மாதிரி எங்கயும் எப்பவும் நியாயத்துக்காக குரல் கொடுக்கணும்... பொண்ணுங்க நம்மளை சுத்திச் சுத்தி வந்து பாட்டுப் பாடணும்... சம்பளம் ஏத்தாத முதலாளிய ஒரு கையிலயும், கழுத்தைப் புடிக்கிற கடன்காரனை இன்னொரு கையிலயும் தூக்கிப் போட்டு மிதிக்கணும்... ‘நாட்டாம பாதம் பட்டா...’ங்கற மாதிரி ஊரே நம்ம காலத் தொட்டு வணங்கணும்னு எல்லாருக்குமே ஆசதான். கருமம், எங்க நடந்து தொலையுது?

சைக்கிள எடுத்தா கார்காரன் இடிக்கிறான்... கார எடுத்தா லாரிக்காரன் உரசுறான்... பொம்பளப் பிள்ளைங்க கொத்தா ஏறுற பஸ்ஸுல தான் கண்டக்டர் கரெக்டா சில்லறை கேட்டு எறக்கி
விடுறான். எவனையும் எதுத்துப் பேச முடியல. எங்கயும் மரியாத இல்ல... பாராட்டு இல்ல... பாட்டு, டான்ஸு ஒண்ணுமே இல்ல. அவனவன் நேரப் போக்குக்கு வந்து நெஞ்சில குத்தினாலும், ‘‘நேத்து குத்தின மாதிரி வலிக்கலைண்ணே’’ன்னு சிரிச்சிக்கிட வேண்டியிருக்கு. அத்தனை அடியையும் வாங்கிக்கிட்டு, வண்டியில வாலக் குடுத்த நாயி மாதிரி, ஊளையிட்டுக்கிட்டே வூட்டுக்குள்ள வந்து ஒடுங்கிடுறதுதான் வாழ்க்கைன்னு ஆகிப்போச்சு.

இதுக்கு மத்தியில ஒரு துளி சந்தோசம் வேணும்னா, இந்தப் பய எங்கண்ணே போவான்? புகழ்ச்சி தான் நம்மாளுக்குத் தெரிஞ்ச பழமையான போதை. நம்மளையும் ஒருத்தன் ‘‘அண்ணே’’ன்னு கூப்பிட்டு, ‘‘உன்ன மாதிரி யாரு’’ன்னு பேசுற அந்த நிமிசம் இருக்கு பாருங்க... வாங்கின அடியெல்லாம் வட்டுக்கருப்பட்டியா இனிக்கும். அந்த சந்தோசத்துக்கு விலையா எதையும் குடுப்பான்ணே மனுசன்.‘‘அதுக்காக பொய் சொல்றதா’’ன்னு கேக்கப்படாது. இது பொய் இல்ல... ரெண்டு பேத்துக்கும் நல்லது செய்யிற ஒரு ஏற்பாடு. இதுல உண்மை, பொய்யி பாக்கக் கூடாது. சந்தோசத்ததான் பாக்கணும். உண்மையத்தான் பேசணும்னா, ஊர்ல பல பேர கூப்பிட்டு, ‘‘பாப்புலேஷன் கவுன்ட்டைத் தவிர உன்னால என்னடா பிரயோஜனம்?’’னுதான் கேக்கணும். ‘‘நாளைக்கே நீ இல்லைன்னாலும் உன் பொண்டாட்டி புள்ளை நாலு நாளைக்கு மேல அழாதுடா’’ன்னு நாக்க மடிக்கணும். சொல்லிருவோமா? ப்ச்... கூடாதுண்ணே.... எல்லா இடத்துலயும் உண்மையப் பேசப்படாது. அது பொய்ய விட மோசமானது.

‘‘சாம்பார் எப்படி இருக்கு?’’ ‘‘நானே போட்ட இந்த எம்பிராய்டரி எப்படி இருக்கு?’’ ‘‘பத்திரிகையில நான் எழுதின கவிதை... எப்படி இருக்கு?’’ , இந்த டைப் கேள்விகள நிறைய பேரு உங்ககிட்ட கேட்டிருப்பாங்கண்ணே. இதெல்லாம் நிஜமாவே அந்தந்த அயிட்டங்களோட நிறை, குறையை அலசி ஆராய்ச்சி பண்ற கேள்வின்னு நெனைக்கீங்களா? அய்யோ பாவம்... நான் கூட ஆரம்பத்துல அப்படித்தான் நினைச்சேன். ‘‘சாம்பார்ல லேசா உப்பு காணாது... எம்பிராய்டரியா? நான் தையல்தான் கோணிப் போச்சுன்னு நெனச்சேன்’’ , இப்படியெல்லாம் வெவகாரமா பதில் சொல்லி, வெறுப்ப வளர்த்திருக்கேன். அப்புறம்தான் புரிஞ்சுது... நம்மூர்ல ஒவ்வொருத்தனும் கருத்து கேக்குறதே புகழ்ச்சி தாகத்துலதான்.

சின்ன வயசுல நான் வேலை பார்த்த கடையில முதலாளி ஒருத்தரு... வெயில் வராம வாசல்ல சாக்குக் கோணி மாட்டினதுக்கெல்லாம் ‘‘எப்பூடி?’’ன்னு கேப்பாரு. பாவம்! அவங்களுக்கும் உலகத்துல வேற என்ன சந்தோசம்? ‘‘அண்ணே சூப்பர்ணே... பின்னிட்ட்டீங்க!’’, ‘‘எக்கா உன் கை பட்டா எல்லாமே அழகுதான்கா’’ , இப்படி ஒரு ரெடிமேட் பிட்டைத்தான் இவங்கல்லாம் எதிர்பாக்குறாங்க. நல்லதா நாலு வார்த்தை... அதுக்கு கூடவா பஞ்சமா போச்சு நமக்கு?

எங்க ஊர்ல ஒரு டீக் கடைண்ணே. ஊர்ல 24 மணி நேரமும் நடக்குற ஒரே கடை அதுதான். எல்லா மனுசனும் புகழ்ச்சி விசயத்துல வீக்கு... அந்தக் கடை ஓனரு, அதுலயே ரொம்ப பீக்கு. ‘‘அண்ணாச்சி போல வருமா’’ன்னுட்டா போதும்... உசுரக் குடுப்பாரு மனுசன். அது யாருக்கு வேணும்னு நாங்கதான் பன்னையும் பிஸ்கட்டையும் தின்னுட்டு வருவோம்.

அவரைப் பொய்யா புகழ வேண்டியதில்லைண்ணே... மனுசன் வாழ்நாளுல ஒரு சாதனையப் பண்ணியிருக்காரு. ஒரு நாளு திருடன் ஒருத்தன் கடையில புகுந்து கல்லாப்பெட்டியத் தூக்கிட்டு ஓட, ஒத்தை ஆளா அவனை வெரட்டிப் பிடிச்சி, அடிச்சுத் துரத்தி யிருக்காரு. நம்ம சேத்திக் காரனுவளோட நான் போறப்ப, அதுல தான் ஆரம்பிப்பேன்ணே. ‘‘அந்தத் திருடனை எப்படி அண்ணாச்சி...? அதுவும் ஒரே ஆளா..? யப்பா... அந்த உடம்பு உங்களுக்கு இன்னும் அப்படியே இருக்கு’’ன்னு நான் பேசப் பேச, இங்க ஏழெட்டு டீயும் வடையும் காலியாயிரும். கடைசியா வாயெல்லாம் பல்லா நிக்கிற அண்ணாச்சிகிட்ட, ‘‘காசு...’’ன்னு இழுப்பேன். ‘‘எல... நான் கேட்டனா? எல்லாம் நம்ம பயலுவ... சாப்பிடுங்கலே’’ம்பாரு. ரொம்ப நல்ல மனுசன்.

ஒண்ணா, ரெண்டா? வருசக் கணக்குல இப்படி ஓசி டீ குடிச்சிருக்கோம். இப்ப டி.வியில வந்து, பேரெல்லாம் வாங்கின பெறவு ஒருநாளு ஊருக்குப் போயிருக்கேன். அந்த அண்ணாச்சி கணக்கு நோட்டோட வாராரு. அந்தத் திருடன் கல்லாப் பெட்டிய எடுத்துக்கிட்டு ஓடினானே... அப்ப அந்த கல்லாப் பெட்டியில ஐநூறு ரூவாதான் இருந்துச்சாம். ஆனா, அந்தக் கதையப் பேசிப் பேசி நாங்க ஓசி டீயே 1200 ரூவாய்க்கு குடிச்சிருக்கோம். ‘‘இதுக்கு நான் கல்லாப்பெட்டியையே திருட்டுக் குடுத்திருக்கலாம்’’னு சொன்னாரு. நான் அப்பவும் அசரல. ‘‘இத்தனை வருசம் கழிச்சும் எப்படி அண்ணாச்சி இந்தளவுக்கு துல்லியமா கணக்குப் பாக்கீங்க?’’ன்னு கேட்டேன். ‘‘அது நம்ம ரத்தத்துல ஊறினதுல்லா!’’ன்னு சிரிச்சிக்கிட்டே போயிட்டாரு. இன்னும் அவரு மாறல... உலகத்துல யாருமே மாறல! என்ன நான் சொல்றது? (இன்னும் சொல்றேன்...)

தொகுப்பு: கோகுலவாச நவநீதன்
ஓவியம்: அரஸ்
படங்கள்: புதூர் சரவணன்