காணிக்கை




‘‘பங்கஜம், கிளம்பிட்டியா..?’’
‘‘ஆச்சுங்க!’’
‘‘பசங்க..?’’
‘‘எல்லாம் ரெடி! ஆமா, இப்ப எங்கே போறோம்?’’
‘‘சொல்றேன்... இந்த வருஷம் பிசினஸ்ல அமோக லாபம். அதான் திருப்பதி போயி, உண்டியல்ல பத்து லட்ச ரூபாய் காணிக்கை போட்டுட்டு, அப்படியே வைர கிரீடமும் சாத்திடலாம்னுதான் கிளம்பச் சொன்னேன்’’ , பிசினஸ்மேன் பீதாம்பரம் சொல்லிக்கொண்டிருந்த போதே திடுதிப்பென ஆறேழு பேர் உள்ளே நுழைந்தார்கள்.

‘‘நாங்க இன்கம்டாக்ஸ் அதிகாரிகள். வீட்ல யாரும் வெளியே போகவோ, யார்கிட்டயும் தொடர்பு கொள்ளவோ கூடாது. வருமானத்துக்கு அதிகமா நீங்க சொத்து சேர்த்ததா தகவல் வந்ததாலதான் இந்த ரெய்டு!’’ என்றார் ஒருவர்.
‘‘வெங்கடேசா, இதென்ன சோதனை..?’’ , திகைத்து நின்றார் பீதாம்பரம்.
வைர கிரீடமும், பத்து லட்சமும் மட்டுமில்லை. இன்னும் வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பதுக்கப்பட்டிருந்த பணம், நகையும் தங்கக் கட்டிகளும் தேடி எடுத்து மூட்டை கட்டப்பட்டன.
‘‘சாமிக்கு செய்யிறது தப்பே இல்லை. ஆனா, அதைவிட முக்கியம் கவர்மென்ட்டுக்கு கணக்கு காமிச்சு வரி கட்டறது. அதை நீங்க சரியா செய்யலையே...’’ என்றார் ரெய்டு முடித்த அதிகாரி.
‘‘சார்... உங்க பேர்?’’ , கேட்டார் பீதாம்பரம்.
‘‘வெங்கடாசலம்!’’ என்றார் அவர்.