சட்டம்





‘‘சார், என் பேர் தாமோதரன்... நீங்க வரச் சொன்னதா ஏட்டு சொன்னார்...’’
இன்ஸ்பெக்டர் அவனை ஏறிட்டார். ‘‘ஐம்பது பவுன் நகை, பத்து லட்ச ரூபாய் வரதட்சணையோட கல்யாணம் பண்ணி ஆறு மாசம்கூட ஆகலை... அதுக்குள்ள இன்னும் பணம் வேணும்னு பொண்டாட்டிய கொடுமைப்படுத்தியிருக்கே. அவங்க அம்மா, அப்பா, உறவுக்காரங்க எல்லாம் உன் மேல வரதட்சணை கேஸ் கொடுக்கணும்னு குதிச்சாங்க. உன் பொண்டாட்டிதான் ‘என் புருஷன் மேல கேஸ் கொடுத்து அவமானப்படுத்த மாட்டேன்’னு சொல்லிருச்சி. உன்கிட்ட அவ்வளவு பிரியம் வச்சிருக்கிற பொண்ணை வச்சி வாழத் தெரியாம ஏன் இப்படி காசு, பணம்னு அலையறே? போ... போய் அவகூட சேர்ந்து வாழப் பாரு!’’தலையாட்டி வணங்கி விட்டுப் போன அவன் முகத்தில் புதுத் தெளிவு.

மெல்ல ஏட்டு குரலெடுத்தார்... ‘‘ஐயா... அந்தப் பொண்ணும்தானே இவனை உள்ளே போடணும்னு சொல்லிச்சி...’’ ‘‘ஆமாய்யா, அதுக்காக இவனைத் தூக்கி உள்ளே போட்டிருந்தா என்னாகும்? தன்னை ஜெயிலுக்கு அனுப்பி அசிங்கப்படுத்தின மனைவிகூட இவன் எந்தக் காலத்துக்கும் சேர்ந்து வாழ மாட்டான். ஆனா, இப்ப நான் சொன்ன பொய்யால இவன் பொண்டாட்டிய பொக்கிஷமா மதிப்பான். அன்பை உண்டாக்குறதும் சட்டத்தோட கடமைதான்யா’’ என்றார் இன்ஸ்பெக்டர் பெருமிதத்தோடு!   
சுபாகர்