ஹாலிவுட் பாலிவுட் ஜாலிவுட்





சோனம் கபூர் ஒரு படத்தில் தனது டிரஸ், மேக்கப் உள்ளிட்ட ஸ்டைலிங் செலவுகளுக்கு சுமார் 75 லட்சம் ரூபாய் வரை வாங்குவார். சமீபத்தில் ஒரு படத்துக்கு இதில் அதிரடி தள்ளுபடி செய்து, வெறும் ஐந்து லட்ச ரூபாய் மட்டுமே வாங்கியிருக்கிறார். காரணம்... படத்தின் தயாரிப்பாளர், அவரது சகோதரி ரியா கபூர்.

பொதுவாக டி.வி நடிகைகள் ஹாலிவுட் படங்களில் பிரேக் கிடைத்து புகழ்பெறுவது அபூர்வம். அமெரிக்கா டி.வி தொடர்களில் நடித்தால்தான் அந்த பாக்கியமும் கிடைக்கும். ஆனால் கனடா டி.வி நடிகை லாரா வாண்டர்வூர்ட் மீது ஹாலிவுட்டின் கருணைப் பார்வை பட்டிருக்கிறது. 13 வயதிலிருந்து நடிக்கும் அழகிய லாராவுக்கு கால்பந்து, கூடைப்பந்து, டென்னிஸ், பேஸ்பால், கராத்தே, ஜிம்னாஸ்டிக்ஸ் என அரை டஜன் விளையாட்டுகள் தெரியுமாம்!

பொதுவாக ஹாலிவுட் நடிகைகள் இந்தியாவுக்கு வந்தால், மும்பையில் தங்கவும், தாஜ்மகாலின் அழகை ரசிக்கவுமே விரும்புவார்கள். ஷரோன் ஸ்டோன் இதற்கு விதிவிலக்கு. இந்த இரண்டையும் அவர் செய்தாலும், அதைத் தாண்டி காசிக்குச் செல்ல ஆசைப்பட்டார் அவர். உலகின் மிகப் பழமையான நகரமான காசிக்கு வந்து, கங்கா ஆரத்தி பூஜையை மனமுருகச் செய்தவர், கங்கை நதியில் படகில் கொஞ்ச நேரம் பயணித்தும் ரசித்தார். ஸ்படிக மாலை ஒன்றை வாங்கி பத்திரப்படுத்திக் கொண்டவர், ‘‘இங்கே கிடைத்த மன அமைதி எனக்கு வேறெங்கும் கிடைக்கவில்லை’’ என மனப்பூர்வமாகச் சொன்னார்.

ஆசை ஆசையாக வளர்த்த பூனைக்குட்டி இறந்து விட்டதில் சோகமாக இருக்கிறார் அலியா பட். நெருங்கியவர்கள் எத்தனையோ ஆறுதல் சொல்லியும் அவரைத் தேற்ற முடியவில்லை. இதனால் சில படப்பிடிப்புகள் தள்ளிப் போடப்பட்டிருக்கின்றன.

ரீ என்ட்ரியில் மிரட்டுகிறார் மாதுரி தீட்சித். திருமணமாகி, திரையை விட்டு பல ஆண்டுகள் ஒதுங்கி, மீண்டும் நடிக்க வரும்போதும் அவருக்கான படங்கள் காத்திருக்கின்றன. ‘குலாப் கேங்’ அப்படி ஒரு படம்தான். மாதுரி இதில் ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். ‘‘அவர் மட்டும் நடிக்க மறுத்திருந்தால் இந்தப் படத்தையே கைவிட்டிருப்பேன். சண்டைக் காட்சிகளில் அப்படி ஒரு நேர்த்தி காட்டுகிறார் அவர். எல்லோருக்கும் மாதுரியை டான்ஸராக மட்டுமே தெரியும். அவர் டேக்வாண்டோ அறிந்தவர். பிளாக் பெல்ட் இன்னும் சில நாட்களில் வாங்கிவிடுவார்’’ என்கிறார், படத்தின் இயக்குனர் சௌமிக் சென்.