நிழல்களோடு பேசுவோம்





கொலை தண்டனைகளும் குற்றமுள்ள நெஞ்சங்களும்

உங்களுக்கு கான்ஸ்டபிள் ராமச்சந்திரன் நாயரைத் தெரியுமா? நக்சல்பாரி என்று அழைக்கப்பட்ட வர்கீஸை 1970ல் போலி என்கவுன்டரில் சுட்டுக்கொன்றவர்தான் இந்த ராமச்சந்திரன் நாயர். எத்தனையோ காவல்துறை அதிகாரிகள் எத்தனையோ பேரை சட்ட விரோதமாக சுட்டுக் கொலை செய்கிறார்கள். அப்படிச் செய்பவர்கள் ‘என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்டுகள்’ என்று வேறு அழைக்கப்படுகிறார்கள். சட்டவிரோத கொலைகளைச் செய்துவிட்டு அதற்காக பதக்கங்களும் பதவி உயர்வுகளும் பெற்றுக்கொள்ளும் குற்றவாளிகள் நிறைந்த அதிகார வர்க்கத்தினர் மத்தியில், ராமச்சந்திரன் நாயர் வேறு மனிதராக இருந்தார்.

ஆதிவாசிகளின் விடுதலைக்காகக் கடுமையாக உழைத்தவர் வர்கீஸ். நக்சல்பாரி இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவர். 1970ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி ஒரு வீட்டில் அவர் தங்கியிருந்தபோது, போலீஸ் உளவாளி ஒருவன் அவரை உள்ளே வைத்துப் பூட்டிவிட்டு காவல்துறைக்குத் தகவல் கொடுத்தான். நிராயுதபாணியான வர்கீஸை கைது செய்த மத்திய போலீஸ் பிரிவைச் சேர்ந்த ராமச்சந்திரன் நாயரும் பிற காவலர்களும் கேரள காவல்துறையிடம் வர்கீஸை ஒப்படைத்தனர்.

 மாவட்ட காவல்துறை துணை ஆணையராக இருந்த லட்சுமணா அந்த இடத்திற்கு வந்தார். வர்கீஸை மலைப்பாறையில் உட்கார வைத்து சுட்டுக் கொல்வது அவர் திட்டம். ‘‘யார் சுடத் தயார்’’ என்று கேட்டார். ராமச்சந்திரன் மௌனமாக இருந்தார். ‘‘அப்படியானால் நீதான் அவனைச் சுடவேண்டும்’’ என்று ராமச்சந்திரனுக்கு லட்சுமணா உத்தரவிட்டார். சற்று முன் தன்னிடம் கைதியாக இருந்த வர்கீஸை தன் கையாலேயே மனசாட்சிக்கு விரோதமாகச் சுட்டுக்கொன்றார் ராமச்சந்திரன். அப்போது ராமச்சந்திரன், வர்கீஸ் இருவருக்குமே வயது 27.

ஆனால் வர்கீஸ் காவல் துறையால் படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி எல்லோருக்கும் பரவலாகத் தெரிந்த ஒன்றாகவே இருந்த்து. 25 ஆண்டுகள் தன்னுடைய குற்ற நிழலின் கடும் உறுத்தலில் வாழ்ந்த ராமச்சந்திரன், கடைசியில் ஒரு பத்திரிகை நிருபரிடம் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு பேட்டியளித்தார். அந்தப் பேட்டி கேரள சமூகத்தையே உலுக்கியது. ‘‘என் மீது வழக்கு போடட்டும். என்னை தண்டிக்கட்டும். ஆனால் என்னைக் கொலைகாரனாக்கிய என் மேலதிகாரிகள் என்னோடு என் சக கைதிகளாக ஒரே கொட்டடியில் இருக்கவேண்டும் என்பதுதான் என் கடைசி ஆசை’’ என்று சொன்னார் ராமச்சந்திரன். வழக்கு சி.பி.ஐக்குச் சென்றது. தீர்ப்பு 2010 அக்டோபரில் வந்தது. ஆனால் 2006லேயே ராமச்சந்திரன் இறந்துவிட்டார். வர்கீஸை கொல்ல ராமச்சந்திரனுக்கு உத்தரவிட்ட காவல்துறை அதிகாரி லட்சுமணாவுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.

ஒரு மனிதன் கொல்லப்பட்டு நாற்பதாண்டு காலம் கழித்து, அவனுக்குச் செய்தது அநீதி என்று இந்திய நீதி அமைப்பு ஒப்புக்கொண்டு குற்றவாளிக்கு தண்டனை வழங்கியது. ஆனால் அந்த நீதியைப் பெற்றுக்கொள்ள வர்கீஸ் உயிரோடு இல்லை. அதைச் செய்த ராமச்சந்திரன் நாயரும் உயிரோடு இல்லை. ஆனால் அதே போன்ற நீதி மறுக்கப்பட்ட ஒரு வழக்கு இப்போது மறுபடியும் உயிர்த்தெழுந்திருக்கிறது. 22 வருடங்கள் எந்த அடிப்படையும் இல்லாமல் மரணக் கொட்டிலில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், தனக்கான நீதியைப் பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். பேரறிவாளனை கொலைக் களம் நோக்கி அழைத்துச் சென்ற சி.பி.ஐ அதிகாரி, ‘நான் பதிவு செய்த பேரறிவாளனின் வாக்குமூலம் பொய்யானது’ என்று ஒப்புக் கொண்டிருக்கிறார்.


ராஜீவ் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளிகள் அனைவரும் அப்போதே கொல்லப்பட்டு விட்டார்கள். அதற்குக் காரணமானது என்று சொல்லப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கமும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது. ஆனால் அந்தக் கொலைக்குக் காரணமான பல சக்திகளை இன்னும் கண்டறிய முடியவில்லை என்று ஜெயின் கமிஷன் குறிப்பிட்டது. ஆனால் இந்தக் கொலையோடு நேரடியாக சம்பந்தமில்லாத மூவர், ‘கொலைக்கு உதவியவர்கள்’ என்ற சந்தேகத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டு தூக்குக் கயிற்றை எதிர்நோக்கி  22ஆண்டுகளாகக் காத்தி ருக்கிறார்கள்.

பேரறிவாளன் கதை மிகவும் துயரமானது. சிவராசனுக்கு 9 வோல்ட் பேட்டரி வாங்கிக் கொடுத்தார் என்பதுதான் அவர் செய்த மிகப்பெரிய குற்றம். அந்த பேட்டரியால்தான் ராஜீவ் காந்தியை கொல்வதற்கான குண்டு வெடிக்கச் செய்யப்பட்டது என்று சி.பி.ஐ சாதித்தது. பெட்டிக் கடையில் பேட்டரி வாங்கியதற்கான பில்லைக்கூட சமர்ப் பித்தார்கள். இந்த வழக்கில் பேரறிவாளனுக்கு மரண தண்டனை பெற்றுத்தர காரணமாக இருந்தது அந்தக் குற்றத்தை தான் செய்ததாக பேரறிவாளன் கொடுத்த வாக்குமூலம்தான். அதன் அடிப்படையிலேயே அவருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டது. இப்போது அந்த வாக்குமூலமே பொய் என்று தெரிய வந்துள்ளது.

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள ‘உயிர் வலி’ ஆவணப்படத் தில், ராஜீவ் கொலை வழக்கின் விசாரணையில் பேரறிவாளனின் வாக்குமூலத்தை 22 ஆண்டுகளுக்கு முன்பு பதிவு செய்த சி.பி.ஐ எஸ்.பி.யான தியாகராஜன், இப்போது ராமச் சந்திரன் நாயரைப் போலவே 22 ஆண்டுகளுக்குப் பிறகு மனம் வருந்தி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
‘‘என்னிடம் அறிவு (பேரறிவாளன்) வாக்குமூலம் கொடுக்கும்போது ‘அந்த பேட்டரி களை எதற்காக வாங்கி வரச் சொன்னார்கள் எனத் தெரியாது’ என்றார். ஆனால், வழக்கு விசாரணை நடைபெற்று வந்ததால், அவரது ஒப்புதல் வாக்குமூலத்தில் அவரது கூற்றைத் தவிர்த்துவிட்டுப் பதிவு செய்தேன்.

அது ஒரு குற்ற ஒப்புதல் வாக்குமூலமாக அல்லாமல், ஒரு விடுதலை வாக்குமூலமாக அமைந்துவிடும் என்ற காரணத்தால், அந்த வாக்குமூலத்தை நான் பதிவு செய்தபோது, தொழில்ரீதியான ஒரு தர்மசங்கடம் எனக்கு ஏற்பட்டது. நான் அப்படிச் செய்ததை ஒரு தவறு என்றுகூடச் சொல்லலாம். அவரது முழுமையான வாக்குமூலத்தைப் பதிவு செய்திருந்தால் வழக்கின் போக்கே மாறியிருக்கும். தவிர, பேரறிவாளனின் ஒப்புதல் வாக்குமூலம் அடிப்படையில் மட்டுமே அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்த்தால் 22 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இச்செயல் எனக்கு மிகவும் வேதனை அளிக்கும் விஷயம்’’ என்று தியாகராஜன் கூறுகிறார்.

அது மட்டுமல்ல... பேரறிவாளனுக்கு கொலைத்திட்டம் தெரியாது என்பதற்கு ஆதாரமாக தியாகராஜன் வேறொரு ஆதாரத்தையும் சுட்டிக் காட்டுகிறார். ‘‘பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில், தமது தாக்குதல் திட்டம் எவருக்கும் தெரியாது என்று ஒரு வயர்லெஸ் தொடர்பில் சிவராசன் கூறிய தகவல் விசாரணைக் குழுவுக்கு கிடைத்தபோது, முன்னர் தனக்கு கொலை பற்றித் தெரியாது என்று பேரறிவாளன் கூறியது உண்மை என்பது உறுதியாகி விட்டது’’ என்றார்.

இந்த வழக்கில் மூவரின் மரண தண்டனையை உறுதிசெய்த உச்ச நீதிமன்ற நீதிபதி கே.டி.தாமஸ் சில மாதங்களுக்கு முன்பு என்ன சொன்னார் தெரியுமா? ‘‘ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனையை எதிர்நோக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் தூக்கிலிடக் கூடாது. அவ்வாறு நிகழ்ந்தால் அது இந்திய அரசியல் சட்ட முறைமைக்கு எதிரானதாக ஆகிவிடும். அது அரசியல் சட்ட முறைமைக்கும் இயல்புக்கும் எதிரான நீதி வழுவிய ஒரு தீர்ப்பு என்று இப்போது தான் உணர்கிறேன். இத்தகைய வழக்கில் தீர்ப்பெழுதும் முன் அந்த மனிதர்களின் முன்னாள் வரலாறு, அவர்களின் நிறுவப்பட்ட பண்புகள் ஆகியவற்றை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும் என சட்ட விதி 21 உபதேசிக்கிறது. அம்முறைமையை கணக்கில் எடுக்காது நான் உட்பட மூன்று நீதிபதிகளும் தவறிழைத்துவிட்டோம்’’ என்றார் அவர்.

இதே கருத்தை முன்னாள் நீதிபதி எஸ்.பி.சின்ஹா அவர்களும் வெளிப்படுத்தியிருக்கிறார். மேலும், ‘‘சாதாரண ஆயுள் தண்டனைக் கைதிகளுக்கு சிறைத்துறை வழங்கும் சில சலுகைகள் கூட 23 ஆண்டுகள் , அதாவது இரட்டை ஆயுள் தண்டனை , அனுபவித்துவிட்ட இந்த ஏழைகள் மூவருக்கும் வழங்கப்படவில்லை. இதற்கப்புறமும் தூக்கு என்று ஆட்சியாளர்கள் முழங்கினால், அது ஒரே குற்றத்துக்கான இரண்டு தண்டனையாகவும், மேலும் நீதித்துறைகள் கண்டிராத மிக மோசமான நிகழ்வாகவும் அமையும்’’ என்றார்.

தியாகராஜனும் கே.டி.தாமசும் தாங்கள் செய்த குற்றத்திற்கு இப்போது பாவ மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு மனிதனைக் காப்பாற்றுவதற்காக தாங்கள் செய்த தவறை இவ்வளவு பகிரங்கமாக ஒப்புக்கொள்ளும் அவர்கள், உண்மையில் நம் காலத்தின் தலைசிறந்த மனிதர்கள் என்பதில் சந்தேகமில்லை. பேரறிவாளன் கைது செய்யப்பட்டபோது அவருக்கு வயது 18. அவரது வயதை ஒத்த இளைஞர்களை பார்க்கும்போதெல்லாம் அவரது நினைவு வந்து மனம் பதைக்கிறது. எனக்கே இப்படியென்றால் அவரது தாயார் அற்புதம்மாள்? அவரை மரண தண்டனை எதிர்ப்புக் கூட்டங்களிலும் பிற பொது நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி சந்திக்கிறேன். பேச முடியாமல் புன்னகையுடன் கடந்து செல்கிறேன். நீதி மறுக்கப்பட்ட தன் மகனுக்காக இந்த தள்ளாத வயதில் ஊர் ஊராக நடந்துகொண்டிருக்கிறார்.

நமது தேசிய குணம் என்ன?

, அ.முரளிதரன், மதுரை.
மறதி.
அரசியல்வாதிகளுக்கு அரசியல் கற்றுக்கொடுக்க ஒரு கல்லூரி நிறுவினால்?
, த.ஜெகன், சரசலூர்.
சொல்லிக் கொடுப்பதில்லை அரசியல் கலை. அது தானா ரத்தத்தில் ஊறி வரணும்.
இரவில் தூங்கப் போகும்போது இறைவனிடம் என்ன கேட்க வேண்டும்?  
, அ.ராஜா ரஹ்மான், கம்பம்.
இறைவா, என் எதிரிகளைத் தூங்க விடாதே!
ராஜஸ்தானைப் போல போதைப் பழக்கம் உள்ளவர்களுக்கு அரசு வேலை கொடுக்கக் கூடாது என்ற கோரிக்கை பற்றி?
, பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.
போதை ஒழியாது; வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்.
‘தெஹல்கா’ ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான பாலியல் குற்றச்சாட்டு பற்றி?
, மல்லிகா அன்பழகன், சென்னை,78.
தருண் தேஜ்பால் என்ற தனி மனிதர் செய்த தவறு, ‘தெஹல்கா’ என்ற தவறுகளுக்கு எதிராகப் போராடும் பத்திரிகையை கொன்றுவிடக் கூடாது.
(சமூகம், இலக்கியம், சினிமா, அரசியல்... எதைப்பற்றியும் கேளுங்கள் மனுஷ்யபுத்திரனிடம். உங்கள் கேள்விகளை ‘மனுஷ்யபுத்திரன் பதில்கள், குங்குமம், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை ,600004’ என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.email: editor@kungumam.co.in)

நெஞ்சில் நின்ற வரிகள்

‘குணா’ , பைத்திய நிலையின் அவலத்தையும் பரிசுத்தத்தையும் குற்றத்தையும் ஒருசேரச் சொன்ன படம். படத்தின் துவக்கம் முதல் இறுதி வரை ஒரு மூர்க்கமும் தத்தளிப்பும் நம்மைக் கவிகிறது. அதில் ஒரு துயரமான தாலாட்டுப் பாடல் இருக்கிறது. இந்த உலகில் குற்றங்களால் சூறையாடப்பட்ட ஒரு பெண், கைவிடப்பட்ட ஒரு மனிதனுக்காகப் பாடும் தாலாட்டு. அதன் வழியே கசியும் எல்லையற்ற நேசமும் கனிவும் கரையச் செய்யக் கூடியவை.
உன்னை நான் அறிவேன்
என்னை அன்றி யார் அறிவார்
கண்ணில் நீர் வழிந்தால்
என்னை அன்றி யார் துடைப்பார்
யார் இவர்கள் மாயும் மானிடர்கள்
ஆட்டி வைத்தால் ஆடும் பாத்திரங்கள்
வாலியின் இந்த வரிகளினூடே ஆற்றுப்படுத்துதலும் ஆற்றுப்படுத்த முடியாத துயரமும் ஒருசேர வெளிப்படுகின்றன.
இந்த மூவரையும் தூக்கிலிட்டால் அது இந்த தேசத்தின் முழு நீதியையும் தூக்கிலிட்டதுபோல ஆகிவிடும்.
தமிழில் சர்வதேச தரத்தில் எழுதுபவர் அ.முத்துலிங்கம். தொட்டதையெல்லாம் தங்கமாக்கும் மைதாஸ் அரசனைப் போல, பார்த்ததையெல்லாம் படைப்பாக்கும் கலைஞன். அவர் முகநூலுக்கென்று தனியே எதுவும் எழுதுவதில்லை. ஆனால் தான் எழுதும் சிறந்த ஆக்கங்கள் அனைத்திற்கும் தனது பக்கத்தில் இணைப்பு தருகிறார். அவரது ஒரு பதிவிலிருந்து...
சிறுவயதிலே நான் முதலில் அறிந்த வெளிநாட்டுப் பூ ட்யூலிப்தான். அதன் அழகோ நிறமோ மணமோ எனக்கு ஒன்றுமே தெரியாது. எங்களுக்கு பாடப் புத்தகமாக ஜிலீமீ ஙிறீணீநீளீ ஜிuறீவீஜீ என்ற   நாவலை யாரோ ஓர் ஆசிரியர் வைத்துவிட்டார். ஒரு வருடமாக ஆராய்ச்சி செய்து எப்படித்தான் இந்த நாவலை அவர் கண்டுபிடித்தாரோ தெரியாது. ஆங்கிலத்தை முழுமனதோடு வெறுக்க வைத்தது அந்தப் புத்தகம்தான். எல்லா வார்த்தைகளும் தனித்தனியாக தெரிந்த வார்த்தைகளாக இருக்கும். ஆனால் வசனம் மாத்திரம் விளங்காது.
உலகத்திலே பலவிதமான நிறங்களில் ட்யூலிப் பூக்கள் வந்துவிட்டன. சிவப்பு, மென்சிவப்பு, மஞ்சள், ஊதா, வெள்ளை என்று பல வர்ணங்கள் இருந்தாலும்
கறுப்புநிற ட்யூலிப்பை ஒருவரும் கண்டுபிடிக்கவில்லை.
எழுதிச்செல்லும் இணையத்தின் கைகள்
(பேசலாம்...)