சகுனியின் தாயம்



கே.என்.சிவராமன்

‘‘நீங்க கொடுக்கச் சொன்னதாதான் ஜேக்கப்போட ஆள் வந்து கொடுத்துட்டுப் போனான்...’’
ஸ்காட் வில்லியம்ஸின் கண்களை பார்த்தபடியே ராம் பதிலளித்தார்.
‘‘எப்ப?’’
‘‘ஈவினிங்...’’
‘‘பார்ட்டி அப்ப இதை ஏன் என்கிட்ட சொல்லலை...’’
‘‘தேன்மொழி பத்தியே யோசிச்சதுல மறந்துட்டேன்...’’ 
அவரை பிடித்திருந்த பிடியை தளர்த்தினான்.

‘‘இதுல என்ன இருக்குனு தெரியுமா?’’
‘‘தெரியும் சார். வீட்டுக்கு வந்த பிறகுதான் பார்த்தேன். கிட்னி பத்தின ரிசல்ட். பொழுது விடிஞ்சதும் உங்ககிட்ட கேட்கலாம்னு இருந்தேன்...’’
‘‘குடிக்க கொஞ்சம் தண்ணி வேணும்...’’
‘‘இதோ...’’
ராம் அகன்றதும், நின்றபடியே நான்கு புறமும் தன் பார்வையால் அலசினான். அறை மூலையில் இருந்த கதவைக் கண்டதும் அவன் புருவங்கள் சுருங்கின.
‘‘இந்தாங்க சார்...’’
வியர்த்து வழியும் பிளாஸ்டிக் பாட்டிலை வாங்கினான்.
‘‘ராம்...’’

‘‘சார்...’’
‘‘அது என்ன கதவு?’’
‘‘கீழ போறதுக்கான வழி...’’
‘‘யூ மீன் கிரவுண்ட் ப்ளோர்..?’’
‘‘யெஸ் சார். பார்க்கறீங்களா..?’’

‘‘அவசியம் இல்லை. சாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ். குட் நைட்...’’ - வாட்ச்சை பார்த்தவன், ‘‘குட் மார்னிங்...’’ என்றபடி வெளியே வந்தான். லிஃப்ட் வழியே கீழே இறங்கினான். கார் பார்க்கிங்கை அடைந்தவன், அப்படியே பின்பக்கம் சென்றான். இரும்பு படிக்கட்டு முன்பாக சில நொடிகள் நின்றான். பார்வையை உயர்த்தி, அது முடியும் இடத்தை பார்த்தான். ராம் வீடு.
வந்த வழியே திரும்பியவன், ‘கேட்’டை அடைந்ததும் தன் ஆட்களை அழைத்தான். ‘‘தேன்மொழி வீட்டுக்குப் போங்க. வாட்ச் பண்ணுங்க...’’
சல்யூட் அடித்துவிட்டு அவர்கள் அகன்றதும் சற்று தள்ளி சாலையில் நிறுத்தப்பட்டிருந்த தன் காருக்கு வந்தான். ஏறி அமர்ந்தான்.

‘‘எலியட்ஸ் போ...’’ டிரைவருக்கு கட்டளையிட்டான். கார் பறந்தது. முருகன் இட்லிக் கடையை கடந்து பெசன்ட் நகர் பீச்சை அடைந்ததும் நின்றது. இறங்கினான். பதினைந்தடி தொலைவில் சாம்பல் நிற இன்னோவா நின்று கொண்டிருந்தது. அதனை நோக்கி நடந்தான். நெருங்கியதும் கதவு திறந்தது. ஏறிக் கொண்டான். புதர் போல் வளர்ந்திருந்த மீசையுடன் ஒரு மனிதர் உள்ளே அமர்ந்திருந்தார். வயது எழுபது இருக்கலாம். முன் பக்கம் வழுக்கை விழுந்திருந்தது. இளம் வயதில் பரந்த மார்பும், விரிந்த தோள்களுமாக அவர் இருந்திருக்கக் கூடும். அதற்கான அடையாளங்கள் இப்போதும் தெரிந்தன. முதுமை அவரது கட்டுடலை சிதைத்திருந்தது. ஆனாலும்  கம்பீரம் குறையவில்லை.

‘‘வந்து ரொம்ப நேரம் ஆச்சா வால்டர் ஏகாம்பரம்?’’ சிரித்த
படியே ஸ்காட் வில்லியம்ஸ்
கேட்டான்.

‘‘ஜஸ்ட் ஃபைவ் மினிட்ஸ்...’’ மீசையை முறுக்கியபடியே பதிலளித்தார்.
‘‘நான் கேட்ட விவரங்கள்..?’’
‘‘கிடைச்சது...’’ என்றபடி தன் மடியில் இருந்த ஃபைலை பிரித்தார். உள்ளே ஓர் இளைஞனின் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இருந்தது. அதுவும் பழைய படம். ஓரங்களை கரையான் அரித்திருந்தது. அதை ஸ்காட்

வில்லியம்ஸிடம் கொடுத்தார்.
‘‘இது..?’’
‘‘என்கிட்ட மாட்டாம தப்பிச்சவன்...’’
‘‘புரியல...’’

‘‘1970களோட கடைசிலயும், 80களோட தொடக்கத்துலயும் வட ஆற்காடு மாவட்டத்துலயும், தர்மபுரிலயும் தேடுதல் வேட்டை நடத்தினேன். ஆபத்தான இருபத்தாறு பேரைத் தேடித் தேடி என்கவுன்ட்டர் செஞ்சேன். ஒரேயொருத்தன் மட்டும் பிடிபடலை. அது இவன்தான்...’’
‘‘பேரு?’’

‘‘தமிழரசன். அண்ணாமலை யுனிவர்சிட்டில மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படிச்சுட்டு இருந்தவன்...’’
‘‘ஓ...’’
‘‘அப்பு, பாலனுக்கு நெருக்கமானவன்...’’
‘‘அது யாரு..?’’

‘‘தமிழகத்துல நக்சல்பாரி இயக்கம் முழுவீச்சோட பரவ இவங்க இரண்டு பேரும்தான் காரணம்...’’
‘‘ஐ ஸீ...’’
‘‘தமிழரசன் மட்டும் தலை மறைவாகிட்டான். எத்தனையோ முறை முயற்சி செஞ்சோம். பிடி படவேயில்லை. இன்னிவரைக்கும் அவன் ஹிட் லிஸ்ட்லதான் இருக்கான். உங்ககிட்ட இருக்கறது அவனோட காலேஜ் டேஸ்ல எடுத்த போட்டோ. அநேகமா இப்ப அவன் இப்படி இருப்பான்...’’ பென்சிலால் வரையப்பட்ட ஒரு படத்தை ஸ்காட் வில்லியம்ஸிடம் காட்டினார்.

அது ஒரு பெரியவரின் உருவம். ராம் வீட்டில் ரங்கராஜனோடு சேர்ந்து தேன்மொழி சந்தித்தாளே... அதே பெரியவரின் தோற்றம்.
‘‘சொல்லுங்க எஜமான்...’’ என்றபடி விக்கிரமாதித்தனுக்கு சொந்தமான வேதாளம் தன் முன்னால் தோன்றியதும் பயம் கலந்த ஆச்சர்யத்துடன் மகேஷ் கண்களை விரித்தான்.
‘‘நீ... நீ... வேதாளம்தானே?’’

வெட்கத்துடன் ‘‘ஆம் எஜமான்...’’ என்றது
‘‘ஹையா. அம்மாகிட்ட இருந்த பழைய ‘அம்புலிமாமா’ புத்தகத்துல உன்னை பார்த்திருக்கேன். அச்சு அசலா அதே மாதிரி இருக்க...’’ கைதட்டி சிரித்தான்.
‘‘அப்படி சொல்லாதீங்க
எஜமான்...’’

‘‘வேற எப்படி சொல்லணும்?’’
‘‘என்னை மாதிரிதான் அந்த ஓவியம் இருந்ததுன்னு சொல்லணும்...’’
‘‘ஓஹோ...’’ என்ற மகேஷ், சட்டென்று பின் வாங்கினான். அவன் முகமே மாறியது. கால், கையெல்லாம் நடுங்க ஆரம்பித்தது. அழுகை பீறிட்டு கிளம்பியது.
‘‘என்னாச்சு? எதுக்கு இப்ப அழறீங்க?’’ வேதாளம் பதறியது.

‘‘நீ என்னை ஏமாத்தற. நீயும் அந்த மந்திரவாதி தாத்தாவோட ஆள்தான்...’’
‘‘இல்லை எஜமான். நான் உங்க அடிமை...’’

‘‘பொய் சொல்லாத. இன்னமும் நான் விக்கிரமாதித்த மகாராஜா எழுதி வச்ச நூலையே படிக்கல. அதை படிச்சாதான் எனக்கு வித்தை எல்லாம் தெரியும். அதுக்கு அப்புறம்தான் உனக்கு எஜமானாகவே நான் மாற
முடியும்...’’
‘‘அப்படீன்னு உங்களுக்கு யார் சொன்னது?’’
‘‘ஹாரி பாட்டர்...’’
‘‘அவர் உங்க நண்பரா?’’

என்னவென்று பதில் சொல்வான்? உதட்டை கடித்தபடி மவுனமாக நின்றான். வேதாளமே தொடர்ந்து பேசியது.
‘‘இல்லல... சூனியக்கார பாட்டியோட அவர் பேசினதை நீங்களும்தானே கேட்டீங்க?’’
‘‘அதை நீயும் பார்த்தியா வேதாளம்?’’

‘‘இங்கதானே நானும் இருந்தேன்? எல்லாத்தையும் கேட்டேன். அவர் உங்ககிட்ட பொய் சொல்லியிருக்கார். எப்ப, விக்கிரமாதித்த மகாராஜா எழுதின ‘நேம் ஆஃப் த ரோஸ்’ புத்தகத்துக்குள்ள நீங்க சிக்கினீங்களோ அப்பவே எனக்கு எஜமானாகிட்டீங்க. இனி கவலைப்படாதீங்க. எல்லா மந்திர வித்தைகளையும் நான் கத்துத் தரேன்...’’
‘‘ஹாரி பாட்டருக்கு தெரிஞ்ச எல்லாத்தையுமா?’’

‘‘அதுக்கு மேலயும் சொல்லித் தரேன். மந்திரவாதி தாத்தாவையே நீங்க எதிர்க்கலாம். ராஜகுமாரியையும் காப்பாத்தலாம். அலாவுதீனுக்கும் சாப விமோசனம்
தரலாம்...’’
‘‘பிராமிஸ்?’’

‘‘மதர் பிராமிஸ்...’’
‘‘ஓகே எப்ப ஆரம்பிக்கலாம்?’’

‘‘இப்பவே தொடங்கலாம் எஜமான். ஆனா, இங்க வேண்டாம். வெளில போகலாம் வாங்க...’’ என்றபடி வேதாளம் பறந்து அவன் தோளில் அமர்ந்தது.
அது சுட்டிக்காட்டிய திசையை நோக்கி மகேஷ் நடந்தான்.

இதையெல்லாம் மறைவில் இருந்தபடி ஹாரி பாட்டர் கவனித்தான். அவன் கண்களுக்கு மகேஷ் தெரியவேயில்லை. பதிலாக விக்கிரமாதித்த மகாராஜாதான் தெரிந்தார்!
ராணி அம்பு எய்தாள். அதுவும் சரியாக இளமாறன் செல்லும் பீப்பாயின் மீது படத்தான் செய்தது. ஆனால் -எதிர்பார்த்தது போல் அது துளைக்கவில்லை. பதிலாக பீப்பாயின் மீது பட்டு அப்படியே கடலில் விழுந்தது. நிதானித்த ராணி, கணத்துக்கும் குறைவான நேரத்தில் அடுத்த அம்பை எடுத்தாள். இம்முறை அவள் குறி பார்த்தது வேறொரு இடத்தில்.
ஒரே அளவுள்ள பட்டை பட்டையான மரப் பலகைகள் ஒன்றிணைக்கப்பட்டு பீப்பாய்களாக உருமாறியிருந்தன. எனவே இரண்டாவது அம்பை மரப்பலகைகள் இணைக்கப்பட்ட இடத்தை நோக்கி செலுத்தினாள்.

இதுவும் பயனளிக்கவில்லை. அப்போதுதான் யவன ராணிக்கு உரைத்தது. மேலுக்கு பீப்பாய்கள் போல் தெரிந்தாலும் உண்மையில் அவை சிறிய படகுகள். தொலைநோக்குப் பார்வையுடன் திட்டமிட்டு இப்படி உருவாக்கியிருக்கிறார்கள். இதற்கு தச்சனும், கொல்லனும் துணைபோயிருக்கிறார்கள். இளமாறனையோ அல்லது பெரியவரையோ அல்லது பாண்டிய இளவரசரையோ குறி பார்த்து அடுத்த அம்பை செலுத்தலாம். ஆனால், அவர்கள் குனிந்து, ஒதுங்கி அதிலிருந்து சுலபமாக தப்பித்துவிடுவார்கள். பலனளிக்காது என்று தெரிந்த பிறகும் ஆயுதங்களை வீணாக்குவது புத்திசாலிகளுக்கு அழகல்ல.

ராணி, அறிவாளி. எனவே தன் கட்டளைப்படி அங்கு வந்து சேர்ந்த சோழ வீரர்களிடம் தனது வில்லை ஒப்படைத்தாள். படகை இழுப்பதற்காக அவர்கள் கொண்டு வந்த கயிற்றை வாங்கினாள். தேங்காய் நாரால் உருவாக்கப்பட்டிருந்த அந்த கயிற்றின் நுனியில் வளைந்த இரும்புக் கம்பிகள் பொருத்தப்பட்டிருந்தன. யானையை நெருங்கியவள், அதை தட்டிக் கொடுத்தாள்.
‘‘அரணமைத்து நில்லுங்கள்.

மறு கரையில் இருக்கும் வீரர்களுக்கும் சமிக்ஞை மூலம் தகவல் அனுப்புங்கள். சுங்க அதிகாரி மூலம் பாண்டியக் கப்பலை சுற்றி வளைக்கச் சொல்லிவிட்டேன். வேல்கள் தயாராக இருக்கட்டும். பீப்பாயில் இருப்பவர்கள் எந்தக் கரையை நோக்கி வந்தாலும் அவர்களை சிறைப் பிடிக்க வேண்டும். உங்களுக்கு இந்த வாரணம் உதவும். மறக்காதீர்கள். அந்த மூவருக்கும் எந்தக் காயமும் ஏற்படக் கூடாது. அவர்களை உயிருடன் பிடிப்பதுதான் நமது நோக்கம்...’’

கட்டளையிட்ட ராணி, இரும்புக் கம்பிகள் இருக்கும் கயிற்றுப் பகுதியை வேகமாக சுற்றினாள். பிறகு அதை பாண்டிய இளவரசர் செல்லும் பீப்பாயை நோக்கி வீசினாள். குறி தப்பவில்லை. வளைந்த இரும்புக் கம்பிகள் சரியாக அந்த பீப்பாயை கவ்விப் பிடித்தன. உடனே கரையை நோக்கி கயிற்றை இழுக்க ஆரம்பித்தாள். இளமாறனும், பெரியவரும் திகைத்தார்கள். இளவரசர் சிக்கிவிட்டாரோ என்று அஞ்சினார்கள்.

ஆனால், மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுத் தர வேண்டும்? இப்படி நடக்கும் என்பதை ஊகித்திருந்த பாண்டிய இளவரசர், தன் இடுப்பிலிருந்து குறுவாளை எடுத்தார். கயிற்றை அறுத்து எறிந்தார்.
இதை யவன ராணியும் அனுமானித்திருக்க வேண்டும். அதனால்தான் இன்னொரு கயிற்றை எடுத்து வட்டமாக சுற்ற ஆரம்பித்தாள். வேகம் அதிகரிக்க அதிகரிக்க, தானும் வட்டமடித்தாள். பின்னர் கைகளை உயர்த்தி எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக அந்தக் கயிற்றை வீசினாள்.

முகத்துவாரத்தின் மறு கரையில் இருந்த ஆலமரத்தின் கிளையை சரியாக அந்த கயிற்றின் நுனியில் இருந்த வளைந்த இரும்புக் கம்பிகள் கவ்வின. இமைப்பொழுதும் தாமதிக்காமல் இக்
கரையில் இருந்த இன்னொரு ஆலமரத்தின் கிளையில், கயிற்றின் மறு நுனியை கட்டினாள்.

ஒரே தாவலில் அந்தரத்தில் இருந்த கயிற்றை பிடித்தாள். இடுப்பிலிருந்து தோலாலான ஒரு துணியை எடுத்தாள். அதை கயிற்றின் மீது போட்டாள். தோல் துணியின் இரு பக்கங்களையும் தன்னிரு கைகளிலும் பிடித்துக் கொண்டாள். நுரை பொங்க காவிரி கடலை நோக்கி பாய்ந்து கொண்டிருந்தது. இரு கரைகளையும் இணைக்கும் விதமாக அந்தரத்தில் கயிறு கட்டப்பட்டிருந்தது. கயிற்றை பிடித்தபடி யவன ராணி தொங்கிக் கொண்டிருந்தாள். இளமாறனும், பெரியவரும், பாண்டிய இளவரசரும் தத்தம் பீப்பாய்களில் கடலை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள்.

அந்தரத்தில் தொங்கியபடி அவள், வந்து கொண்டிருந்த பீப்பாயின் வேகத்தை கணக்கிட்டாள். மூச்சை இழுத்துப் பிடித்தாள். பின்னர் பிடித்துக் கொண்டிருந்த தோலை முன்னோக்கி இழுத்தாள்.
தோலாலான அந்தத் துணியின் மையத்தில் சின்னதாக இருந்த சக்கரம் சுழல ஆரம்பித்தது. விளைவு, சரசரவென மறு கரையை நோக்கி நகர்ந்தாள்.

கரையில் இருந்த சோழ வீரர்கள் மட்டுமல்ல, காவிரியின் போக்கில் முதலில் வந்து கொண்டிருந்த இளமாறனும் திகைத்தான். அழகான இளம்பெண், ஆண்களே செய்யத் தயங்கும் சாகசத்தை
சர்வசாதாரணமாக செய்வாள் என்று அவன் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால் -அழகையும், சாகசத்தையும் ரசிக்க இது தருணமல்ல. துடுப்பை வேகமாக துழாவினான்.
சரியாக அவன் தலைக்கு நேராக யவன ராணி வந்ததும் பிடித்திருந்த தோலை விட்டாள். காற்றை கிழித்தபடி கீழ் நோக்கி இறங்கினாள். பீப்பாயின் மீது ஊன்றி நின்றாள்.
எதிர்பாராத இந்த கனத்தால் பீப்பாய் தள்ளாட ஆரம்பித்தது. இளமாறனும் இதை எதிர்பார்க்கவில்லை. என்றாலும் சுதாரித்தான். இடுப்பிலிருந்த வாளை, யவன ராணியும் இளமாறனும் ஒரே சமயத்தில் உருவினார்கள்.

வாட்கள் மோத ஆரம்பித்தன. கடலை நெருங்கிக் கொண்டிருந்ததால் காவிரியின் வேகமும் அந்த இடத்தில் அதிகரித்தது. பீப்பாயும் தள்ளாட ஆரம்பித்தது.
இதற்குள் கரையோரம் சோழ மன்னர் பெருநற்கிள்ளி வந்திருந்தார். அவர் கண்கள் தீப்பிழம்பாக ஜொலித்தன. ‘‘அவர்கள் மீது வேல்களை எறியுங்கள். ஒருவரும் தப்பக் கூடாது...’’ இடியென முழங்கினார். மன்னரின் கட்டளையை வீரர்கள் ஏற்றார்கள். வேல்களை வீசினார்கள்.

பெரியவரும், பாண்டிய இளவரசரும் அப்படியே தத்தம் பீப்பாய்களுக்குள் குனிந்து அந்த வீச்சி லிருந்து தப்பினார்கள். யவன ராணியின் இடுப்பை தன் கைகளால் சுற்றிய இளமாறனும், அவர்களைப் போலவே தன் பீப்பாய்க்குள் ஒடுங்கினான்.  வாளை ஏந்தியிருந்த ராணிக்கு ஆறு விரல்கள் இருந்தன. புன்னகைத்தான். ‘‘உண்மையான ராணிக்கு இந்த அடிமையின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...’’

அலட்சியமாக தன் தலையை சிலுப்பினாள். ‘‘இறக்கப் போகும் அடிமையின் வணக்கத்தை ஏற்கும் மனநிலையில் ராணி இல்லை...’’
‘‘ராணியின் மனநிலையை ஆராயும் நிலையில் அடிமையும் இல்லை...’’ பதில் சொல்வதற்காக வாய் திறந்தாள்.

அதற்குள் பாண்டிய இளவரசரின் குரல் நீரின் ஓட்டத்தை மீறி கணீரென்று ஒலித்தது.‘‘இளமாறா... மீனின் பலம் நீரில்...’’ புரிந்து கொண்டதற்கு அறிகுறியாக கடலை நோக்கி பாய்ந்து கொண்டிருந்த தனது பீப்பாயை தலைக்குப்புறக் கவிழ்த்தான். யவன ராணியை இழுத்துக் கொண்டு நீரினுள் மூழ்கினான்.திமிறிய ராணி, தன் வாள் பறிக்கப்படுவதையும், ஏதோ ஒரு மூலிகைச் சாற்றை, தான் சுவாசிப்பதையும் உணர்ந்தாள். 

‘‘அந்தத் தொகுதியில மட்டும் ஏன் நமீதாவை பிரசாரம் செய்யச் சொல்லி தலைவர் கேட்டுக்கறாரு..?’’
‘‘அது தலைவரோட மச்சான் நிக்கற தொகுதியாச்சே... அதான்!’’

‘‘ஆனாலும் தலைவர் இவ்வளவு அப்பாவியா இருக்கக் கூடாது...’’
‘‘ஏன்... என்னாச்சு?’’
‘‘வேட்பு மனு தாக்கல் பண்ணாம ‘நோட்டா’ எப்படி போட்டியிடலாம்னு கேக்கறார்!’’

‘‘நம்ம கட்சிக்கு காந்தி பிரசாரம் பண்ணப் போறதா தலைவர் சொல்றாரே...’’
‘‘ஓட்டுக்கு பணம் கொடுக்கப் போறதைத்தான்
அப்படிச் சொல்றார்!’’
- பி.பாலாஜிகணேஷ், கோவிலாம்பூண்டி.            

(தொடரும்)