கடைசி பக்கம்



தேசத்துக்காக பல சாகசங்கள் புரியும் வேட்கையோடு ராணுவத்தில் சேர்ந்தான் அவன். பணியில் சேர்ந்த முதல் நாளே அவனுக்கு படைப்பிரிவு அதிகாரி அலுவலகத்திலிருந்து அழைப்பு. நவீன ரக துப்பாக்கியைக் கையில் கொடுத்து எல்லைப் பாதுகாப்புக்கு அனுப்புவார்கள் என்ற கனவோடு போனான். அதிகாரி அவனை ஏற இறங்கப் பார்த்தார். ‘‘உனக்கு டைப் அடிக்கத் தெரியுமா?’’ என்றார். குழப்பத்தோடு அவன், ‘‘தெரியும்’’ என்றான்.

அவன் கையில் ஒரு பேப்பரைக் கொடுத்த அதிகாரி, ‘‘எனக்கு வரும் கடிதங்களுக்கு பதில் அடித்து அனுப்ப ஒரு ஆள் கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை நீ வந்தாய். இதை டைப் அடி. நீ ஒழுங்காக செய்கிறாயா என்று பார்ப்போம். பக்கத்து அறையில் டைப்ரைட்டர் இருக்கிறது’’ என்றார்.

அதோடு நிற்கவில்லை. பின்னாலேயே வந்து, அவன் டைப் அடிப்பதை மேற்பார்வை செய்தார். அவனுக்குக் கடுப்பு. போர் புரிய வந்தவனை டைப்பிஸ்ட் ஆக்க சூழ்ச்சி நடக்கிறதா? தப்புத் தப்பாக டைப் அடித்துக் கொடுத்தால் தப்பிக்கலாம் என நினைத்தான். ஒவ்வொரு வரியிலும் குறைந்தது இரண்டு, மூன்று தவறுகளாவது இருக்கும்படி டைப் செய்து அவரிடம் நீட்டினான்.
வாங்கிப் பார்த்தவர் அவனுக்குக் கை கொடுத்து, ‘‘நீ இரண்டு டெஸ்ட்களிலும் பாஸ் செய்துவிட்டாய். இன்று முதல் உனக்கு இதுதான் டியூட்டி’’ என்றார்.
‘‘என்ன டெஸ்ட்?’’ - அவன் குழம்பினான்.

‘‘இதற்கு முன் இங்கு வந்தவர்கள், டைப்ரைட்டர் எது என தெரியாமல், பிரின்டிங் மெஷினில் போய் எழுத்துகளைத் தேடினார்கள். அவர்கள் ஒரு பக்கத்தில் நூறு தவறுகள் செய்தார்கள். நீ பரவாயில்லை, ஐம்பது தப்புதான்’’ என்றார். கூடுதல் தகுதிகள் சமயங்களில் சங்கடமும் தரும்!

நிதர்ஸனா