குட்டிச் சுவர் சிந்தனைகள்



ஆல்தோட்ட பூபதி

60 வருடங்களுக்கு முன்பு வரை ஆங்கிலேயர்களுக்கு இருந்ததைப் போல, 50 வருஷங்களுக்கு முன்பு வரை அரசியல்வாதிகளுக்கு இருந்ததைப் போல, 40 வருஷங்களுக்கு முன்பு வரை அரசு அதிகாரிகளுக்கு இருந்ததைப் போல, 30 வருடங்களுக்கு முன்பு வரை அப்பாக்களுக்கு இருந்ததைப் போல, 20 வருடங்களுக்கு முன்பு வரை கம்ப்யூட்டர் படித்தவர்களுக்கு இருந்ததைப் போல, 15 வருடங்களுக்கு முன்பு வரை வேலைக்காக அமெரிக்கா செல்பவர்களுக்கு இருந்ததைப் போல, 10 வருடங்களுக்கு முன்பு வரை வோட்டுக்கு இருந்ததைப் போல, இந்தியாவில் ஒரு காலத்தில் புருஷன்களுக்கும் மரியாதை இருந்தது!

முன்னால எல்லாம் ஒரு படம் வெளிவந்து, வெற்றிகரமா நூறு நாள் ஓடுன பின்னாடிதான் சக்சஸ் மீட் வைப்பாங்க. இப்ப என்னடான்னா, வெளிவந்த மூணாவது நாளே சக்சஸ் மீட் வைக்கிறாங்க. போற போக்கப் பார்த்தா, இனி ஒரு படம் ஷூட்டிங் முடிஞ்சு வெளியில வந்தாலே சக்சஸ் மீட் வைப்பாங்க போல. அய்யா சினிமாக்காரங்களே, ஒரு படம் முடியறதுக்கு மூணு நிமிஷம் முன்னால பாட்ட வைக்கிறத கூட பொறுத்துக்கலாம்; ஆனா, படம் வந்த மூணாவது நாளே சக்சஸ் மீட் வைக்கிறத பொறுக்க முடியல.

தயவுசெய்து நிறுத்துங்க! மொதல்ல ஒரு படத்தை மக்கள் கொண்டாடணும்... அதுக்கு அப்புறம்தான் நீங்க கொண்டாடணும். அதை விட்டுட்டு, விளம்பரத்துக்காக நீங்களே ‘வெற்றி... வெற்றி...’ன்னு கொண்டாடினா, அடுத்த படத்துல திண்டாடித்தான் போகணும். ஒவ்வொரு கள்ளக்காதலனும் ஆதாரமில்லாம தன் லவ்வர பார்த்துட்டு, சேதாரமில்லாம திரும்பி வர்றான் பாருங்க... அதான் உண்மையான சக்சஸ் மீட். அவனுங்களே சும்மா இருக்காங்க... பத்து பேரு பார்க்கிற மாதிரி படம் எடுக்காம உங்களுக்கு என்னாத்துக்கு உடனே சக்சஸ் மீட்?

‘சிதம்பரத்துல மாம்பழக் கட்சி வேட்பாளரோட வேட்பு மனுவை தள்ளுபடி செய்யறீங்க... நீலகிரில தாமரைக் கட்சி வேட்பாளர் மற்றும் மாற்று வேட்பாளர்களின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்யறீங்க... திண்டுக்கல்ல ஆரம்பிச்சு திருச்சி வரை, மதுரைல ஆரம்பிச்சு மத்திய சென்னை வரை டுபாக்கூர் சுயேச்சை வேட்பாளர்களை எல்லாம் தள்ளுபடி செய்யறீங்க... அய்யா, தேர்தல் அதிகாரி அய்யா! தயவுசெய்து எங்க 40 பேரு வேட்பு மனுவையும் தள்ளுபடி செஞ்சீங்கன்னா, டெபாசிட் வாங்க முடியாம தோத்துப் போனோம்ங்கிற வருத்தமான வரலாறு, வரப்போற காலங்களில் பதியப்படாமல் போகும்!’’

இப்படிக்கு,
உங்கள் உண்மையுள்ள போங்கிரஸ் வேட்பாளர்கள்,
தமிழகம் மற்றும் புதுவை.

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்(ஸ்)...

முட்டு சந்து செவுருல போஸ்டர்
ஒட்டுற மாதிரி, அண்ணன் அரவிந்த் கெஜ்ரிவால் கன்னத்துல அறைஞ்சிட்டுப் போற எல்லா பயலுகளும்தான்!

எந்த அரசியல்வாதி சொத்து கணக்க காமிச்சாலும், அவரு சொல்ற தொகையில இருந்து 500, 1000 கோடிய மனசு அதுவா சேர்த்து நினைச்சுக்குது. எந்தப் பொண்ணு வயசச் சொன்னாலும் அதுல இருந்து 5, 6 வயச நம்ம மனசு அதுவா சேர்த்துக்குது. நம்ம சட்டை பாக்கெட்ல இருந்து மனைவி செலவுக்கு எவ்வளவு எடுத்துக்கிட்டேன்னு சொன்னாலும், அதுல ஒண்ணு ரெண்டு நூற நம்ம மனசு சேர்த்து நினைக்குது.

யாராவது போன்ல பத்து நிமிஷத்துல வந்துடுறேன்னு சொன்னா, நம்ம மனசு எப்படியும் ஒரு அரை மணி நேரம், ஒரு மணி நேரம் அதிகமாகும்னு கணக்கு போட்டுக்குது. மண்டையில ஒரு நரை முடி இருக்குன்னு யாராவது சொன்னா போதும், முழு தலையும் நரைச்ச மாதிரி மனசு நினைக்குது. ஆனா, யாராவது ‘உழைச்சுத்தான் முன்னேறினேன்’னு சொன்னா மட்டும், ‘போடா... இவன் கவர்மென்ட்ட ஏமாத்தி இருப்பான்’னு அவங்க உழைப்பை குறைச்சுதான் நம்ம மனசு மதிப்பிடுது.

சீக்கிரம் படத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா! கால் வலிக்குது!


முகமது கஜினி 17 முறை இந்தியா வந்து சோமநாதர் கோயில் நகையை அள்ளிட்டுப் போனதை விட, ஒவ்வொரு வருஷமும் சராசரியா ஒவ்வொரு தமிழனும் பஞ்சரான தன் டூவீலரை தள்ளிட்டுப் போனதை விட, ‘சிறுத்தை’ படத்துல தமன்னா இடுப்ப கார்த்தி கிள்ளிட்டுப் போனதை விட, வீட்டுல மனைவியோட சண்டை போட்ட அன்னைக்கு வீட்டுல புருஷன்காரன் எங்க போறேன்னு சொல்லிட்டுப் போனதை விட,

 இந்தா வரும்... இன்று வரும்... இப்போ வரும்... அடுத்த வாரம் ரிலீஸ்... அடுத்த மாசம் ரிலீஸ்... தீபாவளி ரிலீஸ்... பொங்கல் ரிலீஸ்... புதுக்கணக்கு ரிலீஸ்னு ‘கோச்சடையான்’ படத்த தள்ளிப் போட்டதுதான் அதிகம். பேசாம ஒண்ணு பண்ணுங்க, என்னைக்கு மலேஷிய விமானத்தை கண்டுபிடிக்கிறாங்களோ, அன்னைக்குதான் படம் ரிலீஸ்னு ஒரே முடிவா சொல்லிடுங்க. நாங்களும் தலைவர் இப்ப வருவாரு, அப்போ வருவாருன்னு நம்பி ஏமாறாம இருப்போம்.

* பத்து, பதினைந்து வருஷத்துக்கு முன்னால எப்படியாவது வெள்ளையாகிடணும்னு ஆசைப்பட்ட தலைமுறை, இப்போ எப்படியாவது ஒல்லியாகிட ஆசைப்படுது.

* பத்து, பதினைந்து வருஷத்துக்கு முன்னால எப்படியாவது சேமிக்க கொஞ்சம் பணம் சம்பாதிக்கணும்னு ஆசைப்பட்ட தலைமுறை, இப்ப எப்படியாவது சம்பாதிக்கிற பணத்தை கொஞ்சம் சேமிச்சு வைக்கணும்னு ஆசைப்படுது.

* பத்து, பதினைந்து வருஷத்துக்கு முன்னால போற இடத்துல எல்லாம் போனை தேடிக்கிட்டு இருந்த தலைமுறை, இப்போ உள்ளங்கையில செல்போன வச்சு உலகத்தையே கிட்ட வச்சிருக்கு.

இப்படி தலைமுறைகளே மாறிப்போய் கிடக்கு கிராமராஜ் அண்ணே... இப்ப போயி, ‘அம்மா மெஸ்ல சாம்பார் நல்லா இருக்கு, ஓட்டு போடுங்க... இட்லி மட்டமா இருந்தாலும் வட்டமா இருக்கு ஓட்டு போடுங்க’ன்னு காமெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்க?