ஒரு கன்னியும் மூணு களவானிகளும்



நான்கு நண்பர்கள் கூடிச் செய்த கடத்தல் செயலில், ஒரு நிமிடம் கூடிக் குறைத்தால் என்ன நடக்குமோ... அதுதான் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’. ஒவ்வொரு நிமிடமும் எவ்வளவு மதிப்பு வாய்ந்தது, வேறுபட்டது என காலத்தின் விளையாட்டை, அருமையை... கருத்தோடு சொல்லியிருக்கிறார் சிம்புதேவன்.

வேலையில்லாமல் திரியும் ‘அருள்நிதி அண்டு கோ’, தங்கள் எல்லா பிரச்னைகளிலிருந்தும் விடுபடவும், தாதாவிடம் 30 லட்ச ரூபாய் தட்டிச் செல்லவும் நினைத்து ஒரு பெண்ணைக் கடத்துகிற கதைதான். தனித்தனியாக ஒரு நிமிட வித்தியாசத்தில்... ஒரே தளத்தில் வேறுபட்ட மூன்று நிகழ்வுகளைக் காட்டியிருக்கிறார்கள். ஜெர்மன் படத்தின் அடிப்படையைக் கொண்டது என்பதை ஏற்றுக்கொண்ட பெருந்தன்மையிலிருந்தே ஆரம்பமாகிறது டைரக்டர் சிம்புதேவனின் அக்கறை.

ஒரே சம்பவங்கள் ஒரே பின்னணியில் திரும்பத் திரும்ப வந்தாலும், அவற்றுக்கு சுவாரஸ்யம் ஊட்டிய விதத்திற்கே டைரக்டருக்கு ஒரு பொக்கே. ஃப்ரேமுக்கு ஃப்ரேம் சிரிப்பு வசனங்களோடு, ஊடாக சிந்திக்க வைக்கும் நேர்த்தியும் அவருக்கு கை வந்திருக்கிறது. அருள்நிதி, பிந்து மாதவி, பகவதி, ஹர்ஷிதா ஷெட்டி என ஒவ்வொரு கேரக்டரையும் அவர்களின் பிரத்யேக இயல்பை வைத்தே ஈர்க்கச் செய்திருப்பது கூடுதல் அட்ராக்ஷன். ‘இவர்தான் ஹீரோ... எனத் தனியாக கனம் கொடுக்காமல், எல்லோரோடும் சேர்த்தே கதையில் கனம் சேர்த்திருப்பது புதுவிதம். ஒவ்வொரு தடவையும் கதையில் நேரம் ட்விஸ்ட் எடுக்கும் அதிசயங்களை வியப்பதே நமக்கு வெரைட்டி தந்து விடுகிறது.

நான்கு பேரில் அதிகம் கலக்குகிறார் அருள்நிதி. ஏற்ற கதையைத் தேர்ந்து நடித்திருக்கிறார். அப்பாவி தோற்றத்திலும், காதல் பார்வையிலும், பதறி ஓடும் பதற்றத்திலும் வேறுபாடு காட்டும் தெளிவை ரசிக்கலாம். நிறைய டயலாக் டெலிவரிகளில் அழகான காமெடி அதுவாகவே அமைந்து விடுகிறது. ஓட்டமும் நடையுமாக கதையின் பெரும்பகுதி அமைந்தாலும், உட்கார்ந்து பார்க்க வைக்கும் விறுவிறுப்பு வகை.

இது மாதிரி யதார்த்த வகையில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தால் எந்த ஹீரோயினும் சமாளிப்பார்கள் போலிருக்கிறது. பிந்து மாதவியும் இயல்பாக நடிப்பது ஆச்சரியம். ஹர்ஷிதா ஷெட்டிக்கு சொல்லிக்கொள்கிற பெரிய கேரக்டர் இல்லை... ஆனாலும் என்ன? பார்க்க குளுமையாக, செழுமையாக இருக்கிறார்.

போதாதா? ஜெயபிரகாஷ், அருள்தாஸ், டெல்லி கணேஷ், கவிஞர் விக்ரமாதித்தன் என எதிர்ப்படுகிற எல்லா கேரக்டர்களிலும் சுவாரஸ்யம் தூவப்பட்டிருப்பது அழகு. அதையும் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில், வேறு வேறு விதத்தில் அவர்கள் வெளிப்படுத்துவது இன்னும் அழகு. இவ்வளவு வித்தியாசமான திரைக்கதையில் கொஞ்சமும் குழப்பம் இல்லாதது ஆச்சரியம்.

இசையமைப்பாளர் நடராஜன் சங்கரன் அருமை. பின்னணியில் பெட்டர் ஸ்கோர். மூன்றே பாடல்கள் என்றாலும் வைரமுத்து நச். பின்னணியில் பாடல்கள் முழுவதையும் பார்த்து நாளாச்சு. ஒரே கதையில் வேறு வேறு கோணங்களை அழகாக நமக்குக் கடத்துகிறது எஸ்.ஆர்.கதிரின் கேமரா. படத்தின் இறுதி வரை எந்த இலக்கணத்துக்குள்ளும் சிக்காத படமாக புதுப்பாதைக்கு திரும்புகிறது.

வித்தியாசப் புதுவரவு!
-குங்குமம் விமர்சனக்குழு