பேசும் சித்திரங்கள்



புறக்கணிக்கப்படும் முதுமை

நம் அளவிற்கு முதுமையைப் புறக்கணிக்கும் சமூகம் உலகத்தில் வேறெங்கும் கிடையாது என்பதுதான் நிதர்சனம். முதியவர்களின் தேவைகளைக்கூட புரிந்துகொள்ளாத அடுத்த தலைமுறைக்கு, அவர்களின் ஆசைகளை அறிந்துகொள்ள எங்கே நேரம் வாய்க்கிறது! குழந்தைகள் வளர்ந்ததும் பரணுக்குப் போய்விடும் பொம்மைகள் போல, தங்கள் வாழ்விலிருந்து முதியவர்கள் ஒதுங்கிப் போய்விட வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். ‘முதுமைக்காலத் தேவைகளுக்காக இப்போதே சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்’ என இளைஞர்களைக் கூவிக்கூவி அழைக்கும் விளம்பரங்கள், ‘உங்களை உங்கள் பிள்ளைகள் புறக்கணிப்பார்கள்’ என்ற உண்மையை மறைமுகமாக இன்றைய தலைமுறைக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன. அதைப் புரிந்துகொள்ளும் பக்குவம்தான் அவர்களுக்கு இல்லை. 

ஜப்பானில் முதுமை போற்றப்படும் விதமும், மேற்கத்திய நாடுகளில் முதுமை கொண்டாடப்படும் விதமும் நமக்கு வியப்பை அளிக்கலாம்; அல்லது வினோதமாகத் தெரியலாம். கடந்த ஆண்டு கொரியாவில் உருவாக்கப்பட்ட ‘வேர் ஈஸ் மை சன்’ ஆவணப்படமும், போலந்தில் எடுக்கப்பட்ட ‘ஃபாதர் அண்ட் சன்’ ஆவணப்படமும், முதுமையின் அழகையும், வயதானவர்கள் எதிர்பார்க்கும் அரவணைப்பையும் காட்சிகளால் உணர்த்திய கவிதைகள்.

தமிழ்நாட்டில் குறிப்பாக தொண்ணூறுகளின் பிற்பகுதிகளில் உலகமயமாக்கலின் விளைவாக நிகழ்ந்த அதீத வளர்ச்சியின் தொடக்கம், வீட்டில் இளைஞர்களுக்கும் பெரியவர்களுக்குமான உறவை துண்டிக்க வேண்டிய நிர்பந்தத்தையும், பணத்தின் பின்னே ஓட வேண்டியதன் அவசியத்தையும் ஏற்படுத்தியது. இப்போதைய வீடுகளில் மட்டுமின்றி, மனங்களிலும் முதியவர்களுக்கு இடம் இல்லாமல் போய்விடுவதுதான் வேதனை.

தமிழில் இப்படியான அரசியலை தங்கள் படைப்பிற்குள் மிக ஆழமாகப் பொதிந்து வைத்து வெளிப்படுத்தக் கூடியவர்களில் ஒருவர், எழுத்தாளர் தமயந்தி. அவரது ‘அனல்மின் மனங்கள்’ சிறுகதையின் காட்சி வடிவமே ‘கழுவேற்றம்’ என்கிற குறும்படம். தூத்துக்குடியில் இருக்கும் அனல்மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு கடலில் கலக்கும் கழிவுகளால், வாழ்வாதாரத்தை இழந்த ஒரு மீனவனின் இயலாமையை தமயந்தி தன்னுடைய சிறுகதையில் பதிவு செய்திருந்தார். குறும்பட இயக்குனர் ராஜா, கதையின் சாரத்தை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுத்துள்ளார்.

மாமியாரை அனுபவத்தின் பெருமையாக நினைக்காமல், தேவையற்ற சுமையாகக் கருதும் மருமகள்... ‘இனியும் உன் அம்மாவுக்கு என்னால் சோறு பொங்கிப் போட முடியாது’ என பிடிவாதமாக அவள் கணவனிடம் சொல்கிறாள். கணவன் - மனைவிக்குள் நடக்கும் விவாதம், அவள் மனதை மாற்றவில்லை. அம்மாவை தன் அண்ணன் வீட்டிற்கு அனுப்பி விட அவன் துடிக்கிறான். ஆனால் அந்த மூத்த மகனுக்கும் அம்மாவைத் தன்னுடன் வைத்துக் கொள்ள விருப்பமில்லை. தாயுடன் பேசுவதற்குக்கூட விருப்பமில்லாமல் அலைபேசி இணைப்பைத் துண்டிக்கிறான் அவன். மனைவியின் தொல்லையால் தன் வீட்டில் அம்மாவை வைத்துக்கொள்ள இயலாமல், அண்ணன் வீட்டிலும் அம்மாவை தங்க வைக்க முடியாமல், அந்த இளைய மகன் என்ன முடிவெடுத்திருப்பான் என்பதை மனம் கனக்க சொல்கிறது ‘கழுவேற்றம்’.

சினிமா என்றாலே காதல், கள்ள உறவுகள், வன்முறை என்றாகிவிட்ட தமிழ்ச்சூழலில், இப்படியான உறவுகளின் ஆழமனக் கசடுகளை அகற்றும் படைப்புகளை உருவாக்கும் இயக்குனர்கள் அரிதாகி விட்டார்கள். அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டு, தங்களிடம் கதைகள் இல்லாத பட்சத்தில் இலக்கியத்திலிருந்து பெற்றுக்கொண்டு, அதை செவ்வனே காட்சிப்
படுத்தும் இயக்குனர்களில் ஒருவ ராக இருக்கிறார் இந்தக் குறும்பட இயக்குனர் ராஜா.

பார்வையாளர்களை எளிதாக படத்திற்குள் அழைத்து செல்ல, என்ன மாதிரியான ஷாட்கள் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கு நிறையவே இலக்கணங்கள் உண்டு. படத்தின் தொடக்கக் காட்சியில் ஜூம் ஷாட், அல்லது நடந்து செல்வது மாதிரி வடிவமைக்கப்படும் ஷாட்கள் எளிதாக பார்வையாளனை படத்திற்குள் பயணிக்க அனுமதிக்கிறது. ஆனால் இப்படியான ஷாட்கள் திணிக்கப்படாமல், கதையின் தேவையோடு இயல்பாக ஒத்திருக்க வேண்டும். மாநகராட்சிப் பூங்காவில் ஜூம் ஷாட்டில் தொடங்கும் கதையில், இறுதியில் பிம்பங்கள் மூலம் கதையைக் கடத்தும் யுக்தி இந்த படத்தின் மிக முக்கியமான அம்சம்.

நான்கு வெவ்வேறு விதமான பிம்பங்களின் வழியே பார்வையாளன் மனதில் ஒரு கதையை விதைத்து, அடுத்து என்ன நடக்கும் என்பதை அவன் சிந்தனைக்கு விட்டுவிடுவது மிகச் சிறப்பான யுக்தி. காலையில் தொடங்கும் இந்தக் குறும்படத்தின் முதல் காட்சியில், தாயும், மகனும் பூங்காவில் அமர்ந்திருக்கிறார்கள். இது ஒரு பிம்பம். பலத்த சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் மகன், அவனது அம்மா ‘‘பசிக்கிறது’’ என்று சொன்னவுடன் எழுந்து நடக்கிறான்.

அம்மா தனியாக உட்கார்ந்திருக்கிறார். இது இரண்டாவது பிம்பம். அடுத்த காட்சியில் மகன் பேருந்தில் செல்கிறான். இது மூன்றாவது பிம்பம். இறுதியில், அடர்ந்த இரவில், தாய் மட்டும் தனியாக எழுந்து நடக்கிறாள். இது நான்காவது பிம்பம். இந்த நான்கு பிம்பங்களையும் இணைக்கும்போது நமக்குக் கிடைக்கும் கதையில், படம் என்ன சொல்ல வருகிறது, அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்வையாளனே யூகித்துக் கொள்ளலாம். பார்வையாளன் சிந்திக்க இப்படியான சின்ன வெளியை விட்டுச் செல்வது அவசியமான ஒன்று. பார்வையாளனை குழந்தையாக பாவித்து அவனுக்கு எல்லாவற்றையும் போதித்துக்கொண்டிருக்காமல், அவனே தன் சிந்தனை வளத்தை வளர்த்துக்கொள்ள இப்படியான படைப்புகள் பெரிதும் உதவுகின்றன.

இந்தக் குறும்படத்தில் இளைய மகனின் மனைவி, மூத்த மகன் என இருவரின் உருவத்தையும் காட்டாமல், அவர்களின் குரலின் வழியே மட்டும் கதாபாத்திரங்களாக கட்டமைத்திருக்கிறார் இயக்குனர். அறத்திற்கு எதிராக நடந்துகொள்பவர்களை எப்போது திரையில் மிகக் கோரமாக காட்டிக்கொண்டே இருப்பார்கள். ஆனால் இப்படியான மனித உறவுகளின் மேன்மை புரியாதவர்களை, அறத்திற்கு எதிராக நடப்பவர்களை, பிம்பங்களாக பதிவு செய்வதைக் காட்டிலும், வெறும் குரலாகப் பதிவு செய்வது சிறந்த யுக்தி.

தமயந்தியின் சிறுகதையை அப்படியே குறும்படமாக எடுத்திருந்தால், இன்றைய சூழலில் மிக சிறந்த அரசியல் படமாகவும் ‘கழுவேற்றம்’ இருந்திருக்கும். ஆனால், குறும்பட இயக்குனர்களுக்கே உரித்தான பொருளாதார பிரச்னையாலும், சரியான குழு அமையாத காரணத்தாலும் ராஜா அதன் சாரத்தை மட்டுமே படமாக்கியதாக சொல்கிறார். படமெடுக்க வரும் எல்லாருக்கும் பல காதல் கதைகள் இருக்க, ராஜா தனக்கே உரிய இலக்கிய தேடலோடும், தொடர் வாசிப்போடும் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.  இலக்கற்ற வாழ்க்கைப் பயணத்தின் தேவையற்ற பயணச்சுமைகளாக முதியவர்களைக் கருதும் ஆபத்தான மனங்களை இப்படிப்பட்ட கதைகள் ஊடுருவ வேண்டும்.


சினிமா பற்றி எதுவுமே தெரியாமலே, இந்தக் குறும்படத்தை உருவாகியிருக்கிறார் ராஜா. தன்னுடைய வியாபாரத்தில் கிடைத்த 25 ஆயிரம் ரூபாயை முதலாகக் கொண்டு, அதற்கேற்றவாறு தமயந்தியின் சிறுகதையை சுருக்கிக் கொண்டிருக்கிறார். முதலில் யாருடைய உதவியும் இல்லாமல் இந்தக் குறும்படத்தை எடுத்து, அதில் பெரிய திருப்தி இல்லாமல், ஒரு வருடத்திற்கு மேல் படத்தொகுப்பு செய்யாமல் இருந்திருக்கிறார், பிறகு அவரது நண்பரும், இன்னொரு குறும்பட இயக்குனருமான பொன்.சுதாவின் வழிகாட்டுதலோடு இதை முடித்திருக்கிறார்.‘‘நான் எடுத்தது மோசமான படமில்லை என்கிற ஆறுதலே, இன்று வரை என்னை ஆற்றுப்படுத்துகிறது. தொடர்ந்து இயங்கச் செய்கிறது’’ என்கிறார் ராஜா.

இப்போதைய வீடுகளில் மட்டுமின்றி, மனங்களிலும் முதியவர்களுக்கு இடம் இல்லாமல் போய்விடுவதுதான் வேதனை.

படம்: கழுவேற்றம்    இயக்கம்: ராஜா    நேரம்: 6.44
ஒளிப்பதிவு: ராஜேஷ்    இசை: சந்தோஷ்    படத்தொகுப்பு: விவேக்
பார்க்க: www.youtube.com/watch?v=Ncluu8Ws8jU

(சித்திரங்கள் பேசும்...)


தமிழ் ஸ்டுடியோ  அருண்