கமலுக்கு சிவகுமார் கொடுத்த கல்யாண பார்ட்டி!



‘‘1975ம் ஆண்டு, ஜனவரி 25, சனிக்கிழமை காலை... மைசூர் பிரீமியர் ஸ்டூடியோவில், ‘தங்கத்திலே வைரம்’ படப்பிடிப்பில் எடுத்த படம் இது’’ - தன்னுடன் கலைஞானி கமல்ஹாசன் இருக்கும் இந்தப் புகைப்படம் பற்றி எந்தக் குறிப்புகளையும் புரட்டிப் பார்க்காமல் விவரிக்கிறார் சிவகுமார்.

‘‘சொர்ணம் இயக்கிய இந்தப் படத்தில் நானும் கமலும் அண்ணன் தம்பியாக நடித்தோம். எனக்கு ஜெயசித்ராவும், கமலுக்கு ஸ்ரீப்ரியாவும் ஜோடி. கதைப்படி எனக்கும் கமலுக்கும் மேடை நிகழ்ச்சி நடத்தும் கேரக்டர். என் பாடலுக்கு கமல் நடனமாடுவது போன்ற காட்சியை எடுப்பதாகத்தான் முதலில் திட்டம். ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த டான்ஸ் மாஸ்டர் மதுரை ராமு, ‘இரண்டு பேருமே நடனமாடுவது போல் இருந்தால் நன்றாக இருக்கும்’ என்றார். ‘என் காதலி யார் சொல்லவா...

 இசை என்னும் பெண் அல்லவா’ என்ற அந்தப் பாடல் காட்சிக்கு நடன ஒத்திகை பார்க்கப்பட்டது. இதற்கு முன் ‘அரங்கேற்றம்’, ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படங்களில் நானும் கமலும் இணைந்து நடித்திருக்கிறோம். நான் அப்போது கதாநாயகன். கமல் வளர்ந்து வரும் நாயகன். இருந்தாலும் நடனத்தைப் பொறுத்தவரை நான் மாணவன் என்றால், அவர் பேராசிரியர். 7 வயதிலிருந்து பரதம் கற்று, அரங்கேற்றம் கண்டு, மாஸ்டராகவும் பணிபுரிந்தவர். புகழ்பெற்ற டான்ஸ் மாஸ்டர் ஏ.கே.சோப்ராவிடம் ஒரு வருடம் சினிமாவுக்காக நான் கதக் கற்றுக்கொண்டிருக்கிறேன். மற்றபடி, கமல் அளவுக்கு என்னால் ஆட முடியாது. எனவே கமல், ‘அண்ணனுக்கு எந்த மூவ்மென்ட்ஸ் வருமோ அதையே நானும் பண்றேன்’ என்று எனக்காக அவர் திறமையைக் குறைத்துக் காட்ட முன்வந்தார்.

ஒரே நாளில் அந்தப் பாடலை ராமு மாஸ்டர் எடுத்து முடித்தார். அப்போது எனக்குத் திருமணமாகி 6 மாதம்தான் முடிந்திருந்தது. மனைவியையும் ஷூட்டிங்குக்கு அழைத்துச் சென்றிருந்தேன். ஷூட்டிங் முடிந்து தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பியதும், கமல் கல்யாண பார்ட்டி கேட்டார். ‘உனக்குப் பிடித்ததை வாங்கிக் கொள்!’ என்று பணத்தைக் கொடுத்தேன். உடனே கமல், எல்லோருக்கும் சுடச்சுட சப்பாத்தியும் சுவையான பாலக் பன்னீரும் வாங்கி வந்தார். மொட்டை மாடியில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்ட அந்த இரவு விருந்து அனுபவம், என் மன வானில் இன்றும் முழு நிலவாய் பிரகாசிக்கிறது!’’

- அமலன்
படம் உதவி: ஞானம்