நடைவெளிப் பயணம் அசோகமித்திரன்



தி.க.சியின் தங்கத்தாமரை நாட்கள் ‘‘தி.க.சி போய்விட்டாரே... நீங்கள் ஒன்றும் இரங்கல் எழுதவில்லையா’’ என்று இரு மூத்த நண்பர்கள் விசாரித்தார்கள். தமிழ் இடதுசாரி இலக்கிய விமர்சகர் - திருநெல்வேலி சுடலைமாடன் தெரு தி.க.சிவசங்கரனுக்கு நான் இரங்கல் எழுதாமல் யார் எழுத முடியும் என்று அவர்கள் நினைத்தார்கள். நானும்தான் இந்த ஐம்பது ஆண்டுகளில் எத்தனை இரங்கல்கள் எழுதிவிட்டேன்! அதே போல, முன்னுரைகள்.

ஒரு பெண் எழுத்தாளர் அவருடைய நாவல், சிறுகதை, கட்டுரை, வரலாறு என்று இவ்வளவு நூல்களுக்கு என்னை முன்னுரை எழுத வைத்து, ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் மதிப்புரையும் எழுத வைத்தார்! ‘ஏன் எழுதினீர்கள்’ என்று கேட்கலாம். நிர்ப்பந்தம். நான் ‘இல்லை, முடியாது’ என்று சொல்லக் கற்றுக்கொள்ளவில்லை.

நான் ஒருமுறை ஒரு சித்தர் பற்றிச் சொன்னபோது நான்கு பேர் மத்தியில் தி.க.சி கேலியாக உரத்துச் சிரித்தார். பின்னர் அவருடைய நிர்ப்பந்தம் அறிந்து கொண்டேன். ஒரு காலகட்டத்தில் நான் அவரை தினமும் ஒருமுறையாவது சந்தித்து விடுவேன். தி.நகர் உஸ்மான் சாலையில் டி.செல்வராஜுடன் ஓர் அறையைப் பகிர்ந்து கொண்டு, சோவியத் செய்தி நிறுவனத்தில் சோவியத் அரசுப் பணியாளராக இருந்து வந்தார். அங்கு தமிழ்ப் பிரிவில் மட்டும் வடிகட்டிய தோழர்கள். கன்னடப் பிரிவில் இருந்தவர், அங்கிருந்து நேரே அமெரிக்கச் செய்தி நிறுவனத்தில் சேர்ந்து விட்டார்! தமிழ்ப் பிரிவில் முக்கியத்துவம் வரிசையில் விஜயபாஸ்கரன், தொ.மு.சி.ரகுநாதன், கவிஞர் கே.எம்.அருணாசலம், திகசி.

காலை எட்டிலிருந்து மாலை ஐந்து மணி வரை மூச்சு விடாமல் ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்ப்பு, செய்திகள், கருத்துகள் என வாரம் மூன்று நாட்களுக்கு. வாரம் இருமுறை சிறப்புக் கட்டுரைகள். புத்தக வடிவில் சோவியத் பலகணி வாரம் ஒரு முறை வரும். என் பக்கத்து வீட்டுக்காரர், ‘‘உங்களுக்குத் தினம் இவ்வளவு தபால்கள் வருகின்றனவே, என்னிடமும் ஒரு பத்திரிகையைத் தாருங்களேன்’’ என்று கேட்டார். நான் அவரிடம் ‘சோவியத் பலகணி’ சில இதழ்கள் கொடுத்தேன்.

அவர் என்னோடு பேசுவதையே விட்டுவிட்டார். ஒரு நாள் அருணாசலத்திடம் உற்சாகமாக, ‘‘உங்கள் கருத்துகள், செய்திகள் மிகவும் நன்றாக இருக்கின்றன’’ என்று சொன்னேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து, ‘‘இதெல்லாம் உக்காந்துண்டு நீங்க படிக்கிறீங்களா?’’ என்று கேட்டார். ஆனால் தாஸ்தாயெவஸ்கி பற்றி சிறப்புக் கட்டுரை ஒன்று வந்தபோது அதை ‘கசடதபற’ பத்திரிகைக்குக் கொடுத்தேன். பயன்படுத்திக் கொண்டார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ‘தாமரை’ பத்திரிகையை ஒரு நல்ல புனைகதைப் பத்திரிகையாக தி.க.சி மாற்றினார். ப.ஜீவா னந்தம் ஆசிரியராக இருந்தபோதே என் கதை ஒன்று அதில் பிரசுரமாயிற்று. தி.க.சி ஆசிரியப் பொறுப்பேற்றதும் எல்லா சிறப்பிதழ்களிலும் என் கதைகள் இடம் பெற்றன. அப்போது தொடர்கதையாக வெளிவந்து கொண்டிருந்த ‘கரைந்த நிழல்கள்’ நாவலை மிகுந்த ஆர்வத்துடன் அவர் படித்தார். ஒரு கட்டம் வரை நாவலில், ‘அதன் காலம் எது’ என்று அறிய முடியாதபடியே எழுதியிருந்தேன். ஆனால் கடைசி அத்தியாயத்துக்கு முந்தையதில் ஒரு சிறு தகவல், காலத்தைக் காட்டிவிடும். அதைக் கவனித்தவர் எனக்குத் தெரிந்து தி.க.சி.தான். ‘அது நாவலின் தரத்தைக் குறைத்து விடுகிறது’ என்றார்! எனக்கு ஆச்சரியம். எவ்வளவு நுண்ணிய பார்வை!

அவர் ஒரு காலத்தில் புதுமைப்பித்தனுக்கு வீர வணக்கம் வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார். நான் ஒரு முறை புதுமைப்பித்தன் கதைகளில் உள்ள முரண்பாடுகள் பற்றிக் குறிப்பட்டபோது என் தகப்பனாருக்கும் திட்டு விழுந்தது. ஒரு கூட்டம் விடாது நாங்கள் சென்று விடுவோம். நாங்கள் இருவரும் முதலில் சேர்ந்து மேடையேறியது சென்னை ஒய்.எம்.சி.ஏ-வில். அது சுந்தர ராமசாமி சிறுகதைகள் பற்றிய விமர்சனக் கூட்டம். ராமசாமிக்கு அப்போது இரு தொகுப்புகள்தான் வந்திருந்தன. (‘அக்கரைச் சீமையிலே’, ‘பிரசாதம்’.)

எனக்கு அப்போதைய தமிழ் இலக்கிய அரசியல் அவ்வளவாகத் தெரியாது. நான் ‘பிரசாதம்’ தொகுப்பைப் பாராட்டிப் பேசினேன். தி.க.சி.க்குத் தாங்க முடியவில்லை. ‘‘கொள்கைப் பிடிப்பைக் கைவிட்டுவிட்டு ‘பிரசாதம்’ போன்ற படைப்புகளைப் படைப்பவர்கள் சமூகத்தால் ஒதுக்கப்படுவார்கள், நசுக்கப்படுவார்கள், அழிக்கப்பட்டு விடுவார்கள்’’ என்று ஆவேசமாகப் பேசினார். எனக்குப் புரியவில்லை. தி.க.சி.யின் ஆவேசத்தைப் பார்த்து நான் அவருடன் பேசவே பயந்தேன். சுந்தர ராமசாமியை முதன்முறையாகப் பார்த்தபோது இது பற்றிக் கேட்டேன். அவர், ‘‘தி.க.சி.யா?’’ என்று கேட்டுவிட்டுச் சிரித்தார். அப்புறம், ‘‘தி.க.சி. பாவம், அவருக்கு ஒண்ணும் தெரியாது’’ என்று சொன்னார்.

கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்தான் தி.க.சி. கட்டுரைகளை முதலில் தொகுத்து வெளியிட்டது என்று நினைக்கிறேன். ராமசாமி சொன்னது புரிந்தது. அவருடைய எதிரிகள் என்று அவர் நினைப்போரைக் காரிய, காரணம் இல்லாமல் தாக்குவார். ஜெயகாந்தன் ஒரு முறை ‘‘தி.க.சி. தன் மூக்கைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்’’ என்று சொன்னதும், அவர் படைப்புகள் அவர் கண்ணில் படவில்லை. கைலாசபதியும் அப்படித்தான். அவர்கள் தாக்குபவர்கள் பொதுவாக ‘ஸாஃப்ட் டார்கெட்ஸ்’. அதாவது அதிகார பலமற்றவர்கள். திருப்பித் தாக்க முடியாதவர்கள். எனக்கு மிகவும் ஏமாற்றமாகிவிட்டது. அதன் பிறகு அதிகத் தொடர்பில்லை. அவரும் ஓய்வு பெற்று திருநெல்வேலி சென்று விட்டார். சோவியத்தும் போயிற்று, தி.க.சி. பணிபுரிந்த பிரிவும் போயிற்று.

ஒரு ‘தோழர்’ என்றாலும், தி.க.சி. ஒரு பரிபூரண சம்பிரதாயவாதியாக நிறை வாழ்வு வாழ்ந்து மறைந்தார். அவருடைய இதய சிகிச்சைக்குப் பிறகு ஒரு முறை பார்த்தேன். அவருடைய பஞ்சசீலம் பற்றிப் பேசினார். வண்ணதாசன் போன்ற மகன்கள் இருந்தபோது கடவுள் எதற்கு? அவருடைய ஆயுதம், தபால் அட்டை. அவரும் சரி, வல்லிக்கண்ணனும் சரி... கையெழுத்துச் சுத்தம் உடையவர்கள். ‘மிக்க அன்புடன்’ என்று கடிதத்தை முடிக்க நான் தி.க.சி.யிடமிருந்துதான் கற்றேன்.

 நான் முதலில் இரங்கல் குறிப்பு எழுதியது கு.அழகிரிசாமிக்காக. அவர் வீட்டிற்கும் தி.ஜானகிராமன் வீட்டிற்கும் எவ்வளவு முறை அலைந்திருக்கிறேன்! கடைசி வரை ஜானகிராமன் கதை தரவில்லை. அழகிரிசாமி தந்தார். இல்லாமையும் போதாமையும் வாட்டி வதைத்த அழகிரிசாமிக்கு வேலை கிடைத்த இரண்டே வாரங்களில் கடும் நோய் கண்டுவிட்டது. கடைசி நோய்.
அன்றிலிருந்து யார் இறந்தாலும் நான் இரங்கல் எழுதுவது வழக்கமாயிற்று. இரங்கலோடு சாதனைகளையும்தான் பதிவு செய்யவேண்டும்.
அப்போது செய்யாவிட்டால் பின் எப்போது?

(பாதை நீளும்...)

தி.க.சியின் ஆயுதம், தபால் அட்டை. அவரும் சரி, வல்லிக்கண்ணனும் சரி... கையெழுத்துச் சுத்தம் உடையவர்கள். ‘மிக்க அன்புடன்’ என்று கடிதத்தை முடிக்க நான் தி.க.சி.யிடமிருந்துதான் கற்றேன்.   

படிக்க... பெரிய நூலகங்களில் வெளிச்சம் நிறைந்த இடத்தில் உயரமான மேஜை போட்டு அதன் மீது அகராதியை வைத்திருப்பார்கள். மேஜை நல்ல உயரமாக இருக்கும். அகராதியை எளிதில் தூக்க முடியாது. ஆனால் எளிதாகப் பார்க்கும்படியாக இருக்க வேண்டும். இன்று அந்த மாதிரியான பளுவான, தடிமனான புனைகதை நூல்கள் தமிழில் வெளிவருகின்றன.

‘நூறு சிறந்த சிறுகதைகள்’ என்ற தலைப்பில் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்து, சென்னை, மேற்கு கே.கே.நகர், டிஸ்கவரி புக் பேலஸ் தமிழின் சிறந்த கதைகளை ஒரே நூலாக வெளியிட்டிருக்கிறது. நல்ல தொகுப்புதான். நூறு என்றால்கூட சிலருக்கு விடுபட்டவை என சில தோன்றும். ஆங்கில மொழிபெயர்ப்பில் க.நா.சு. எனக்குத் தெரிந்து மூன்று நூல்கள் கொண்டு வந்திருக்கிறார். அம்பை சென்னையை மையமாக வைத்து ஒரு தொகுப்பு நூல் கொண்டு வந்தார். திலீப்குமார் ஒரு தொகுப்பு வெளிக்கொண்டு வந்துவிட்டார். இப்பொது இன்னும் விசாலமாக நூறு கதைகள் கொண்ட தொகுப்பைக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறார்.