பொலிட்டிகல் பீட்



தேர்தல் வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்து முடிக்கத் திட்டமிட்டார் உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ். அரசு வாங்கி வைத்த 15 லட்சம் லேப்டாப்களில் வெறும் 60 ஆயிரம் மட்டுமே இதுவரை மாணவர்களுக்குப் போயிருக்கிறது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததால், மீதியெல்லாம் குடோனில் இருக்கின்றன. மெத்தனம் காட்டியதற்காக பள்ளிக் கல்வித்துறை செயலாளரை சஸ்பெண்ட் செய்திருக்கிறார் அகிலேஷ்.

*மேற்கு வங்காளத்துக்குப் பிரசாரம் செய்யப் போன பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதி, ‘‘எங்களுக்கு வாக்களியுங்கள். நாங்கள் மேற்கு வங்காளத்தை உத்தரப் பிரதேசம் மாதிரி ஆக்குகிறோம்’’ என்றார். மேற்கு வங்கத்தை விட எல்லாவற்றிலும் உ.பி. பின்தங்கிய மாநிலம். மாயாவதியின் பிரசாரத்தை வங்காளிகள் கௌரவப் பிரச்னையாக எடுத்துக் கொண்டால் என்ன செய்வது என கட்சிக்காரர்கள் கிலியில் இருக்கிறார்கள்.

*வாக்குப்பதிவு இயந்திரங்கள் லாரிகளிலும், ஜீப்களிலும், கழுதை முதுகிலும், படகிலும் செல்லும் காட்சியை பலரும் பார்த்திருக்கலாம். வட இந்தியாவின் மலை மற்றும் பாலைவன கிராமங்களுக்கு அவை ஹெலிகாப்டரிலும், யானையிலும் ஒட்டக வண்டியிலும் பயணிக்கும் கலர்ஃபுல் காட்சிகள் இங்கே...

உத்தரப் பிரதேசத்தின் மீரட் தொகுதியில் முஸ்லிம்களும் இந்துக்களும் கிட்டத்தட்ட சம அளவில் இருக்கிறார்கள். இங்கு காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் நடிகை நக்மாவின் அப்பா முஸ்லிம்; அம்மா இந்து. அதனால் இருவரின் பெயரையும் சொல்லி, ‘‘இவர்களின் மகளான நக்மா உங்களிடம் வாக்கு கேட்டு வருகிறார்’’ என பிரசாரம் செய்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள். நக்மா எதுவும் பேசுவதில்லை. அவர் காரிலிருந்து இறங்கியதுமே, கூட்டத்தில் எல்லோரும் செல்போனை நீட்டி அவரை போட்டோ எடுக்கிறார்கள். அவர் போஸ் கொடுத்துவிட்டு திரும்பவும் காருக்குள் போய்விடுகிறார்.

கிருஷ்ணர் பிறந்த மதுரா தொகுதியில் பாரதிய ஜனதா சார்பில் போட்டியிடுகிறார் நடிகை ஹேமமாலினி. ஏற்கனவே ராஜ்ய சபா எம்.பி.யாக இருந்ததால், இந்தியா முழுக்கச் சுற்றிப் பிரசாரம் செய்வார் அவர். இம்முறை தேர்தல் அவரை மதுராவில் முடக்கி விட்டது. ‘‘யமுனை நதியை சுத்தமாக்குவதற்காகத்தான் நான் இங்கு போட்டியிடுகிறேன்’’ என பிரசாரம் செய்கிறார் ஹேமா.

வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து மாதுரி தீட்சித்தை களமிறக்கி கதிகலக்கச் செய்யலாம் என திட்டமிட்டது காங்கிரஸ். இன்னமும் செல்வாக்கோடு நடித்துக் கொண்டிருக்கும் மாதுரி, இதற்கு சம்மதிக்கவில்லை. ‘‘சரி, தேர்தலில் போட்டியிட வேண்டாம். பாதுகாப்பாக ராஜ்யசபா எம்.பி ஆக்குகிறோம். இப்போது வந்து பிரசாரம் செய்யுங்கள்’’ என அடுத்து கேட்டார்கள். ‘‘எனக்கு அரசியலில் இறங்கும் ஐடியாவே இல்லை’’ என்று சொல்லிவிட்டார் மாதுரி.

*மத்திய அரசிலோ, மாநிலத்திலோ... எங்காவது ஓரிடத்தில் அதிகாரத்தில் இருந்தே பழகியது காஷ்மீரின் ஃபரூக் அப்துல்லா குடும்பம். மகன் உமர் இப்போது முதல்வர்; ஃபரூக் அப்துல்லா மத்திய அமைச்சராக இருந்துகொண்டு மீண்டும் ஸ்ரீநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ‘‘மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சராக இருந்துகொண்டு, காஷ்மீரில் ஒரு கிராமத்துக்குக் கூட அவர் மின்சாரத் திட்டம் கொண்டு வரவில்லை’’ என எதிர்க்கட்சிகள் பிரசாரம் செய்ய, சமாளிக்க  முடியாமல் தடுமாறுகிறார் ஃபரூக் அப்துல்லா.