நடைவெளிப் பயணம்



அசோகமித்திரன்

நல்லதன்றிப் பிறிதொன்றும்...

‘நல்லதன்றிப் பிறிதொன்றும் கூறேல் நீத்தார் பற்றி’. இதென்ன பழமொழி போல இருக்கிறதே என்று தோன்றலாம். சுமார் ஐந்நூறு ஆண்டுகள் பழையதாக இருக்கலாம். மூலம் ஆங்கிலப் பழமொழி. ‘Of the dead, nothing but good’. சுருக்கமாகவும், நினைவில் வைத்துக் கொள்ளக் கூடியதாகவும் உள்ளது!

ஆனால் இதுவே இன்னொரு மொழியிலிருந்து சுவீகரிக்கப்பட்டது! அது லத்தீன் மொழி. ‘De mortuis nil nisi bonum’. இதற்கு ஆங்கிலத்தில் உள்ள சொற்சுருக்கம் இல்லை. ஆனால் லத்தீன் மொழியில் ஒரு வரலாறே மூன்று சொற்களில் அடங்கி விடுகிறது. ‘Veni vidi vici’. வந்தேன், கண்டேன், வென்றேன். ஜூலியஸ் சீஸரின் இங்கிலாந்துப் படையெடுப்பின்போது இது கூறப்பட்டதாகச் சிலர் சொல்வார்கள். ‘இல்லை,  கிளியோபாட்ராவைப் பார்த்த பின் சொன்னது’ என்று சிலர் பக்கத்திலிருந்து கேட்டது போலச் சொல்வார்கள். ஆனால் வரலாற்றில் அவர் ஒரு துருக்கிய நகரை மிக எளிதாகக் கைப்பற்றியபோது கூறினார் என்றிருக்கிறது.

ஒருவர் மாலை நான்கு மணிக்கு இறந்திருப்பார். அடுத்த நாள் காலைப் பத்திரிகையில் அவருடைய மறைவுச் செய்தியும், வாழ்க்கை வரலாறும், ஓர் இரங்கல் கட்டுரையும், இறந்தவரின் வாழ்க்கையில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகளும் படங்களாக ஒரு பக்கம் முழுவதும் இருக்கும். நான் நினைத்துக்கொள்வேன், இந்தப் பத்திரிகைக்காரர்கள்தான் எவ்வளவு சுறு
சுறுப்பு! பின்னர் தெரிந்தது... மரணச் செய்தியும், இரங்கல் கட்டுரையும் தவிர மற்றவை முன்கூட்டியே தயார் செய்யப்பட்டவை. வயதான ஒரு பிரமுகர் இரு முறை இருமினால், பத்திரிகைகள் எல்லோரையும் முந்திக்கொள்ளத் தயாராக இருப்பார்கள்.

‘இது இரக்கமற்ற போக்கு அல்லவா’ என்று தோன்றலாம். கடந்த ஏப்ரல் பதினேழாம் தேதி மறைந்த லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் அவர்களுக்கு அடுத்த நாளே ஓர் ஆங்கிலப் பத்திரிகையில் முழுப்பக்க அஞ்சலி! அவருடைய கோட்டோவியம் மிகச் சிறந்த முறையில் முக்கால் பக்கம் வந்திருந்தது. ஆனால் அவர் பத்து ஆண்டு களாகவே நோய் வாய்ப்பட்டு இருந்திருக்கிறார். அமெரிக்க அதிபராக இருந்த கிளின்டன், அவருடைய பரம எதிரி காஸ்ட்ரோ இருவருக்கும் மார்க்கேஸ் ஒரே காலத்தில் நண்பராக இருந்திருக்கிறார்!

 எழுத்தாளர் கு.அழகிரிசாமி சென்னையிலும் ஒரு பத்திரிகையில் சில நாட்கள் வேலை பார்த்தார். அவர் கூறுவார். ‘‘ ‘எட்டு காலம் தலைப்புச் செய்தி ஒன்றும் இல்லையே?’ என்று பத்திரிகைக்காரர்கள் பகலெல்லாம் சோர்ந்து இருப்பார்கள். எங்கோ சரக்கு ரயில் தடம் புரண்டது என்று செய்தி வந்தவுடன் அனைவருக்கும் அசாத்திய உற்சாகம்!’’ எட்டு ‘காலம்’ என்பது பக்கத்தின் இடது கோடியிலிருந்து வலது வரை. கொட்டை எழுத்தில் ரயில் தடம் புரண்டதை, ஒரு புதிய கிரகத்தைக் கண்டுபிடித்தது போலச் செய்து விடுவார்கள்!

நான் அழகிரிசாமி அவ்வளவு சீக்கிரம் போய் விடுவார் என்று நினைக்கவில்லை. அவரை மருத்துவமனையில் பார்த்தபோது கூட, ‘நான்கு நாட்களில் வீடு வந்து விடுவார்’ என்றுதான் நினைத்தேன். நான் அப்போது பங்கு பெற்ற பத்திரிகை ஐந்நூறு வாசகர்களைக் கூட எட்டாது. ஆனால் நிர்கதியாக நின்ற அவர் குடும்பத்துக்கு உதவ சிலர் முன்வந்தார்கள். அதில் சென்னை ‘இலக்கியச் சிந்தனை’ ப.லெட்சுமணன் மிக முக்கியமானவர். பணம் சிறிது சேர்ந்தது. அதை எப்படி என்று யாரிடம் ஒப்படைப்பது? தொ.மு.சி.ரகுநாதன் முயற்சியில்தான் அழகிரிசாமிக்கு சோவியத் அலுவலகத்தில் வேலை கிடைத்தது. அவர் எங்களைவிட அந்தக் குடும்பத்துடன் அதிகப் பரிச்சயம் கொண்டிருந்தார். அவரிடம் பணத்தைச் சேர்ப்பித்தோம்.

இரங்கல் கட்டுரை எழுதுவது மிகுந்த மன வருத்தம் தருவது. ஆனால் தருணத்தே அதைச் செய்தேயாக வேண்டும். என்னதான் வருத்தம் இருந்தாலும், தெரிந்த தகவல்கள் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்து அமைக்க வேண்டும். இருபதாம் நூற்றாண்டு இலக்கியம் வரை, அமெரிக்கர்களுடையது. எவ்வளவு விதவிதமான, மிகவும் சிறப்பான  வெளிப்பாடுகள்! பலர் ஒன்றிரண்டு படைப்புகளுக்கு மேல் எழுதவில்லை. சிலர் அற்பாயுளில் இறந்து விட்டார்கள். இரங்கல்கள் எழுதாது போனாலும், துக்கத்தில் இருக்கும் பெண் வாசகர்களுக்கு ஆறுதல் கூறுபவராக ஓர் உதவி ஆசிரியர் பொறுப்பேற்கிறார். நாவலின் பெயரே ‘மிஸ் லோன்லி ஹார்ட்ஸ்’.

ஒரு கட்டத்திற்கு மேல் வாசகர்கள் தெரிவிக்கும் மனவேதனை அவரைத் தற்கொலை செய்து கொள்ள வைத்துவிடுகிறது. சில நிமிடங்கள் பார்த்துத் தூரப் போட்டு விடுவதானாலும், அப்பத்திரிகையைப் படிப்பவர்கள் எங்கோ, யாருக் கோ, நேர்ந்த விபத்தால் பாதிக்கப்படுகிறார்கள். ராஜீவ் காந்தி சிதறி விழுந்து கிடக்கும் புகைப்படத்தை வெளியிடுவது பற்றி உலகப் பத்திரிகை ஆசிரியர்களிடையே உயர்மட்ட விவாதம் நடந்தது. ஒரு சில மணி நேரத்திற்குள் அமெரிக்க, ஐரோப்பியப் பத்திரிகைகள் ஒரு முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் ராஜீவ் காந்தியின் சிதறுண்டு கிடந்த உடலின் புகைப்படத்தை வெளியிடவில்லை. மாறாக இந்தியப் பத்திரிகைகள் வெளியிட்டன. உலக அனுதாபத்தைப் பெறக்
கூடிய வகையில் 2001 செப்டம்பர் 11 உலக வர்த்தக மையத் தாக்குதலை, ஆயிரக்கணக்கான உடல்கள் சிதறிக் கிடப்பதாக வெளியிட்டிருக்கலாம். மாறாக, அந்த இரு மாபெரும் கட்டிடங்கள் விழுவதைத்தான் நாம் படங்களில் பார்க்க முடிந்தது. அதே போல ஒசாமா பின் லேடன் உடலைப் புகைப்படமாகக் காட்டவில்லை. ஒசாமா கடைசியாக இருந்த இடத்தின் வெளிப்புறத்தை மட்டும் காட்டினார்கள்.

இரங்கல் செய்திகளில் புகைப்படங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். சில உலகப் பிரமுகர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து விடுகிறார்கள். அதற்காக அவர்களின் வயோதிகத்தைப் புகைப்படமாகக் காட்ட வேண்டியதில்லை. இரண்டாம் உலகப்போர் காலத்தில் சர்ச்சில் இங்கிலாந்துக்குத் தலைமை தாங்கி யுத்தத்தை வென்றார். யுத்தம் முடிந்து பல ஆண்டுகள் கடந்த பிறகுதான் அவருடைய மரணம் நேர்ந்தது. ஆனால் இன்றும் சர்ச்சிலின் புகைப்படத்தைப் பயன்படுத்த வேண்டியிருந்தால் 1945ல் ஜோஸப் கார்ஷ் எடுத்த படத்தைத்தான் பயன்
படுத்துகிறார்கள். நொந்து நொடிந்து போன தொண்ணூறு வயது முதியவரையல்ல!

புகைப்படங்களைப் பயன் படுத்துவதில் நாம் நன்கு யோசித்துத் தேர்வு செய்யவேண்டும் என்று நான் நீண்ட நாட்களாகவே எனக்கு வாய்ப்புக் கிடைத்த நேரங்களில் எல்லாம் கூறி வருகிறேன். நல்லதன்றிப் பிறிதொன்றும் கூறாது இருத்தலில் புகைப்படமும் பங்கு வகிக்கிறது.

ஒசாமா பின் லேடன் இறந்ததும், அந்த உடலைப் புகைப்படமாகக் காட்டவில்லை. ஒசாமா கடைசியாக இருந்த இடத்தின் வெளிப்புறத்தை மட்டும் காட்டினார்கள்.

படிக்க...

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் என்றால் திரும்பத் திரும்ப அனைவரும் அவருடைய ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவலையே கூறி அவரை ‘ஒரே நூல் அதிசய’மாக மாற்றி விடுகிறார்கள். அவர் வேறு பல நூல்களும் எழுதியிருக்கிறார். ‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ இப்போது தமிழிலும் கிடைக்கிறது. ஆனால் நாவல் கட்டுக்கோப்புக்கு அவருடைய ‘முன்பே கூறப்பட்ட சாவின் வரலாறு’ என்ற சிறு நாவல் சிறந்த எடுத்துக்காட்டு.

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் தென் அமெரிக்கக் கண்டத்திலுள்ள கொலம்பியா நாட்டைச் சேர்ந்தவர். தென் அமெரிக்காவின் ஒரு சிறப்பு... அதிலுள்ள பல நாடுகளில் இலக்கியத்துக்கு நோபல் பரிசு பெற்றவர்கள் இருக்கிறார்கள், அல்லது உலகப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். மொத்தமாக லத்தீன் அமெரிக்கா என்று கூறினாலும், அங்கு இரு வேறு மொழிகள்... ஸ்பானிஷ் மற்றும் போர்ச்சுகீஸ். உலகம் அவர்களை அறிவதெல்லாம் ஆங்கில மொழிபெயர்ப்பில்தான்.

இந்த எழுத்தாளர்கள் அனைவருக்கும் குரு, அர்ஜென்டினாவைத் தாயகமாகக் கொண்ட ஜார்ஜ் லூயி போர்ஹே. (லத்தீன் அமெரிக்காவில் வசிக்கும் என் உறவினன் ‘போர்கெஸ்... போர்கெஸ்...’ என்று கத்துகிறான்.) ஜார்ஜ் எழுதியதெல்லாம் இரண்டாயிரம் பக்கங்களுக்குள் அடங்கி விடும். ஆனால் இவர்தான் தென் அமெரிக்காவின் அசல் மாந்திரீக இலக்கியவாதி.

(பாதை நீளும்...)