ரசிகர்களுக்கு ரஜினி தந்த அர்ப்பணம்!



‘கோச்சடையான்’ இறுதிக்கட்ட பணியில் உண்ண உறங்க நேரமின்றி பரபரத்துக்கொண்டிருக்கிறார் சௌந்தர்யா ரஜினி. கணவரின் நடிப்பில் மகள் இயக்கிய படம் என்ற எதிர்பார்ப்பில் ரிலீஸ் தேதியை ஆவலோடு எதிர்நோக்கியிருக்கிறார் லதா ரஜினிகாந்த். ‘கோச்சடையான்’ படத்தில் பாடகியாகவும் பங்களித்திருக்கும் அவரைச் சந்தித்தோம். ரஜினி, குடும்பம், சினிமா, ஆன்மிகம் என அனைத்தையும் தொட்டுப் பிரவாகமெடுத்தது அந்த உரையாடல்...‘‘ரொம்ப நாள் கழித்து, ‘கோச்சடையானில்’ பாடிய அனுபவம்..?’’

‘‘சுவாரசியமா இருந்தது. ‘அன்புள்ள ரஜினிகாந்த்’, ‘வள்ளி’ படங்களில் பாடினேன் அதன் பிறகு சினிமாவில் பாடவில்லை என்றாலும் ‘மாயாஜால்’, ‘சாரல்’ என நானே இசையமைத்துப் பாடி ஆல்பங்கள் செய்திருக்கிறேன். ‘கோச்சடையானில்’ ரஹ்மானும் சௌந்தர்யாவும் என்னைப் பாட வைத்தார்கள். கணவனுக்கு மனைவி சத்தியம் செய்து தருவது போன்ற அந்தப் பாடலை நான் பாடியது ரொம்பவே பொருத்தமாக இருந்தது. படத்தில் நான் பாடினதை ரஜினி சாருக்கு தெரியாமல் சஸ்பென்ஸாக வைத்திருந்தார்கள். அப்புறம் ரஹ்மான் சார் அந்தப் பாடலை போட்டுக் காட்டி, நான் பாடிய விஷயத்தைச் சொன்னார். பாட்டை கேட்டுவிட்டு எழுந்து வந்த ரஜினி சார், என்னை கட்டிப் பிடித்து கைகுலுக்கி சந்தோஷப்பட்டார்.’’

‘‘அந்தப் பாடலில், ‘உனது உலகை எனது கண்ணில் பார்த்திடச் செய்வேன்’ என்று வருகிறதே... உங்கள் பார்வையில் ரஜினி..?’’‘‘நடிகர், கணவர் என்பதைத் தாண்டி அபூர்வ மனிதராக நான் அவரைப் பார்க்கிறேன். நான் பார்த்த உலகத்தில், என்னுடைய அனுபவத்தில், நல்ல குணங்களை தனக்குள் வைத்துக்கொண்டு இவ்வளவு பெரிய ஸ்தானத்தை அவர் தக்கவைத்துக் கொள்வதை நினைத் தால் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. அவர் மாதிரி ஒருவர் அபூர்வமாகத்தான் பிறக்க முடியும். கூடவே இருந்து பார்த்தவரை, அவர் பூ மாதிரி மனம் கொண்டவர். அவருக்குள் சிறப்பான ஒரு ஆன்மிக வைப்ரேஷன் இருக்கிறது; அவரைச் சுற்றி பவர்ஃபுல் எனர்ஜியும் இருக்கிறது. அதுதான் அவரை இயக்கி வருகிறது.’’

‘‘படம் பார்த்துட்டு சௌந்தர்யா பற்றி உங்களிடம் ரஜினி என்ன சொன்னார்?’’‘‘படத்தின் ஆரம்பக் கட்டத்திலிருந்தே சௌந்தர்யா வேலை வாங்கும் விதம் பற்றி பாராட்டி சொல்லிக்கொண்டிருப்பார். டைரக்டராக மட்டுமின்றி, அப்பாவை வைத்து இயக்குவது, புதிய டெக்னாலஜி என எல்லாமே அவளுக்கு முதல் முறை. நிறைய பொறுப்புகளைச் சுமந்துகொண்டு இந்தப் படத்தை முடித்திருக்கிறாள். சின்ன வயதிலிருந்தே அவளோட கிரியேட்டிவ் எனர்ஜியை நாங்கள் பார்த்திருக்கிறோம்.

வெளிநாடுகளில் எட்டு வருஷம், பத்து வருஷம் செய்யும் வேலையை இரண்டே வருடங்களில் முடித்தது சவாலான விஷயம். தெற்காசியாவிலேயே மோஷன் கேப்சரிங் டெக்னாலஜியில் உருவான முதல் படத்தை சௌந்தர்யா டைரக்ஷன் பண்ணியதை சாதனையாகத்தான் நினைக்கிறேன். தெலுங்கு பாடல் வெளியீட்டு விழாவுக்குப் போயிருந்தபோது, ‘இரண்டு வருஷத்தில் படத்தை முடிச்சிட்டீங்களா?’ என்று ராஜமௌலி சார் சௌந்தர்யாகிட்ட ஆச்சரியப்பட்டு கேட்டார். ரசிகர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருக்கும்!’’

‘‘தீபிகா படுகோனேவுக்கு உங்க வீட்டு ரசம் பிடிக்கும். உங்க கையால் ரஜினி விரும்பிச் சாப்பிடுவது?’’
‘‘காபி. அப்புறம் நான் ஸ்பெஷலா சமைக்கும் எல்லாமும் அவருக்குப் பிடிக்கும். தீபிகாவுக்கு தென்னிந்திய உணவு வகைகள் பிடிக்கும். அவர் சென்னை வரும்போதெல்லாம் எங்கள் வீட்டிலிருந்துதான் சாப்பாடு போகும்.’’

‘‘இமயமலைக்குப் போகும்போது வீட்டுக்குக்கூட தொடர்புகொள்ள மாட்டாராமே?’’‘‘அப்படியெல்லாம் இல்லை. மலைப் பிரதேசத்தில் சிக்னல் கிடைக்கலைன்னா என்ன செய்ய முடியும்? இப்போதாவது செல்போன் இருக்கு. கல்யாணம் ஆன புதிதில் இரவெல்லாம் அவர் போன் வராதா எனக் காத்துக்கொண்டிருப்பேன். ‘எங்கே ஷூட்டிங் இருக்கோ... என்ன பண்றாரோ’ என்று கவலையாக இருக்கும். ‘ஹலோ’ என்று போனில் அவர் குரல் கேட்ட பிறகுதான் நிம்மதி வரும். எங்கே போனாலும் தொடர்புகொள்ளாமல் இருக்கமாட்டார்.

அவர் ரொம்ப நல்ல குடும்பத் தலைவன்! தம்பதி என்பதைத் தாண்டி நாங்கள் எப்போதுமே நண்பர்களாகவே இருந்திருக்கிறோம். கணவன் - மனைவியிடம் நல்ல நட்புறவு இருக்க வேண்டும். அதுக்குள் வருகிற மரியாதை, மரியாதையுடன் சேர்ந்த அன்புதான் இல்லறத்தை இனிக்க வைக்கும்.’’ ‘‘ ‘ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்’ என்று ரொம்ப நாளா சொல்லிட்டு இருக்காரே?’’‘‘ ‘கோச்சடையான்’ மூலம் அவர் சொன்னதைச் செய்திருக்கிறார். இந்தப் படத்தை ரசிகர்களுக்கும் இந்திய சினிமாவுக்கும் செய்த அர்ப்பணமாக நினைக்கிறார்.’’

நெகிழும் லதா

- அமலன்