குட்டிச்சுவர் சிந்தனைகள்



பள்ளிக்கூடத்தில் சம்மர் லீவு கிடைத்தாலும் பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்கு லீவு என்னைக்குமே கிடைக்காது போல. சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஸ்விம்மிங் கிளாஸில் விடுகிறார்கள்; சிலர் டான்ஸ் கிளாஸில் விடுகிறார்கள்; சிலர் அபாகஸ் கிளாஸுக்கு விடுகிறார்கள்.

சிலர் பாட்டு கிளாஸில் விடுகிறார்கள்; சிலர் கராத்தே கிளாஸில் விடுகிறார்கள். ஹிந்தி கிளாஸ், டிராயிங் கிளாஸ், செஸ் கோச்சிங் என பல வகையான கிளாஸ்களில் விடுகிறார்கள். இன்னும் சில பெற்றோர்கள் இருக்கிறார்கள், அவர்கள் தங்கள் குழந்தைகளை மேலே சொன்ன எல்லா கிளாஸ்களிலும் விடுகிறார்கள். ஆனால், நான் கவனித்த வரையில் எந்த பெற்றோரும் லீவு நாட்களில் கூட தங்கள் குழந்தைகளை நிம்மதியா விடுவதில்லை, சுதந்திரமாகவும் விடுவதில்லை.


ஒரு பொண்ணைக் கூட பார்க்க முடியாதபடி கண்ணு ரெண்டும் எரியுது, ரெண்டு நிமிஷத்துல கரைய வேண்டிய வெண்ணெய் கூட ரெண்டு நொடில கரையுது, என்னா வெயில்டா சாமி! இந்த வருஷம் வெயில், இந்த ஒட்டுமொத்த பூமியை வாணலியாக்கி, மாமிசத் துண்டுகளாய் மனிதர்களை போட்டு வறுத்து எடுக்குது. எல்லா வருஷமும் ஓவர் டேங்க்ல இருக்கிற வாட்டர் மட்டும்தான் ஹீட்டர் போட்ட மாதிரி சூடாகி இருக்கும். இப்பலாம் ப்ரிட்ஜ்ல இருக்கிற தண்ணி பாட்டில் கூட சூடாகித்தான் கெடக்கு. இதுவரை வந்த ஐ.பி.எல் சீசன்களில் எல்லாம் பெங்களூரு டீமின் கெயிலைப் பத்தி மட்டுமே பேசுன மக்கள் கூட இந்த வருஷம் வெயிலைப் பத்தி பேச ஆரம்பிச்சுட்டாங்க.

பகல் எல்லாம் மக்கள் நீருலயும், இரவு முழுக்க பீருலயும் இருக்கணும்னு திட்டம் தீட்டி கட்டம் கட்டி வெயில் அடிக்கிற மாதிரி தோணுது. மடிப்பாக்கம், மயிலாப்பூரில் இருக்கும் மாமிகளிலிருந்து, மத்த இடங்களில் வசிக்கும் சின்னசாமிகள், பெரியசாமிகள், மயில்சாமிகள் வரை எல்லோரும் தலையை போர்த்திக்கிட்டு நடமாடுறதப் பார்த்தா, வெயில் ஒரு வழியா நாட்டுல மத நல்லிணக்கத்தை கொண்டு வந்துட்ட மாதிரியும் தோணுது. இத்தனை வெயில்லயும், பெண்களின் லெக்கின்ஸை விட டைட்டா பேன்ட் போட்டுக்கிட்டு, இந்தியா முழுக்க ஓடி ஓடி ஓட்டு கேட்கும் மோடிய பார்த்தா, பேசாம இந்த ஒரு பாவப்பட்ட காரணத்துக்காகவே பிரதமரா ஆக்கிடலாம்னும் மனசுக்குத் தோணுது.

உடம்ப இளைக்க பல பேரு நடக்கிறாங்க, நிறைய பேரு ஓடுறாங்க, சில பேரு ஆடுறாங்க. ஆனா சிம்பிளான ஒரு எக்சர்சைஸை வச்சே உங்க சைஸை குறைக்க நாங்க ஐடியா தர்றோம் வாங்க...
முதல்ல, தலையை ஆட்டுதல். அம்மாவோ, மனைவியோ, ‘‘சாப்பிட வாங்க’’ன்னு கூப்பிடுறப்ப செய்ய வேண்டிய எக்சர்சைஸ் இது. இங்க தலையை இடது, வலதாக மூன்று முறை மெதுவாக ஆட்ட வேண்டும். சப்போஸ், தப்பித் தவறி சாப்பிட்டாலும், மீண்டும் ‘‘மறுசோறு வைக்கட்டுமா’’ என வீட்டுல கேட்கும்போதாவது இந்த எக்சர்சைஸ் செய்தாக வேண்டும்.
இப்போ தலையை மேலும் கீழுமாக ஆட்டும் எக்சர்சைஸ்... இதை ஹோட்டலில் சாப்பிடும்போது, சர்வர் ‘‘பில் கொண்டு வரட்டா’’ என்னும்போதோ, ‘‘போதுமா’’ எனக் கேட்கும்போதே, அதே நொடியில் செய்ய வேண்டும்.

அடுத்து, மூடுற எக்சர்சைஸ். இது ரெண்டு வகைப்படும்... ஒன்று, கண்ணை மூடுதல்; இன்னொன்று, வாயை மூடுதல். ரோட்டுல, பெரிய மால்ல, ஸ்வீட் கடையில என எங்கு அருமையான, அதே சமயம் ஆபத்தான பலகாரங்களைப் பார்த்தாலும் கண்ணை மூட வேண்டும். வீட்டுல உட்கார்ந்து, டி.வில மெகா சீரியல் பார்க்கும்போதோ, கிரிக்கெட் மேட்ச் பார்க்கும்போதோ, நொறுக்குத் தீனி திங்காமல் வாயை மூட வேண்டும். இவ்வளவுதான்பா குட்டிச்சுவர் சொல்லித்தரும் எக்சர்சைஸ்கள்.

*என்னைக்கு அமெரிக்காவிலோ இங்கிலாந்திலோ வேலை செய்யற பொண்ணு இந்தியாவுல சும்மா சுத்திக்கிட்டு இருக்கிற பையனை கல்யாணம் கட்டி வெளிநாடு கூட்டிப் போகுதோ...
*என்னைக்கு 33% இட ஒதுக்கீடு வேணும்னு ஆண்கள் எல்லாம் நாடு தழுவிய போராட்டம் பண்றாங்களோ...
*என்னைக்கு ஒவ்வொரு ஐ.பி.எல் டீம்லயும் நாலு ஃபாரீன் ப்ளேயர்களுடன் ரெண்டு லேடி ப்ளேயர்களையும் வச்சுக்கிட்டு மேட்ச் விளையாடுறாங்களோ...
*என்னைக்கு டாஸ்மாக் பார்ல ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி டேபிள் போடுறாங்களோ...
*என்னைக்கு நம்ம நாட்டுல ட்ரிபிள்ஸ் போற பொண்ணுங்கள போலீஸ் புடிச்சு ஃபைன் போடுறாங்களோ...
*என்னைக்கு எல்லா ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்லயும் பொம்பளை செஃப் வந்து சமைக்கிறாங்களோ...
*என்னைக்கு தமிழ் சினிமாவுல ஐட்டம் டான்ஸுக்கு பொண்ணுக்கு பதிலா ஆம்பளைய கவர்ச்சி உடையில ஆட விடுறாங்களோ...
*என்னைக்கு லேடி கான்ஸ்டபிள்கள் எல்லாம் +2 படிக்கிற பொண்ணுங்க சைஸுல இருந்து ஙீலி சைஸுக்கு மாறுறாங்களோ...
*என்னைக்கு பொண்ணுங்களுக்கு பதிலா ஆம்பளைங்க குழந்தைக்கு சோறு ஊட்டி நொந்து போறாங்களோ...
*என்னைக்கு பொண்டாட்டிங்க புருஷன்களுக்கு ரிமோட் கண்ட்ரோல விட்டுத் தர்றாங்களோ...
*என்னைக்கு மாமியார்களுக்கு பெத்தப் பொண்ணுங்கள விட மருமக மேல மரியாதை பொங்குதோ...
அன்னைக்குத்தான் இந்தியா
வல்லரசாகும்!

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் கேர்ள்ஸ்...

அரசியல்ல நடிக்கிறவங்க பத்தாதுன்னு, நடிக்கிறவங்க நாங்களும் அரசியலுக்கு வர்றோம்னு வரிஞ்சுக் கட்டிக்கிட்டு கிளம்புற ஜெயசுதாக்கள், ஜெயப்ரதாக்கள், ஹேமாமாலினிக்கள், விஜயசாந்திகள்!

ஆல்தோட்ட பூபதி