சூர்யாவுக்குள் ஒரு கமல்! லிஙகுசாமி




‘‘ ‘அஞ்சான்’ ஷூட்டிங் முடிஞ்சிருச்சு. ஒரு சாங் மட்டும்தான் பேலன்ஸ். கடைசி கட்ட படப்பிடிப்பை 47 நாட்கள் தொடர்ச்சியா நடத்தி ஏக் தம்மில் முடிச்சிருக்கோம். மொத்த படத்துக்குமே நாலே மாசம்தான் எடுத்துக்கிட்டோம்.

 சூர்யா, சந்தோஷ் சிவன் மற்ற டெக்னீஷியன்களின் ஒத்துழைப்பால்தான் அது சாத்தியமாச்சு. இது எனக்கு புது அனுபவம். ஷூட்டிங்ல இருந்த ஸ்பீடு, ‘அஞ்சான்’ படத்துலயும் இருக்கும்’’ - புது எனர்ஜியும் நம்பிக்கையும் பொங்கப் பேசுகிறார் லிங்குசாமி.
‘‘முதல் முறை சூர்யாவுடன் இணைந்த அனுபவம்..?’’

‘‘சூப்பர்... ஷூட்டிங் தொடங்கின முதல் நாளிலிருந்து என் கூடவே இருந்தார். ஒரு நாள் லீவு, ஒரு மணி நேரம் பர்மிஷன்னு, கொடுத்த தேதியிலிருந்து கொஞ்சமும் பிரிச்சு எடுத்துக்கலை. கடைசி வரை அவர் காட்டின டெடிகேஷன் என்னை திணறடிச்சுடுச்சு. ஒவ்வொரு ஷாட் முடிஞ்சதும், ‘ஆஹா... இவருக்கு இன்னும் ஹெவியா தந்திருக்கணும்’னு யோசிக்க வைக்கிறார். சினிமா தவிர தேவையில்லாமல் எதையும் யோசிக்கிறதில்லை. ஒரு படத்தில் கமிட் ஆகிட்டா, அந்தப் படம் முடியும் வரை அதைப் பத்தி மட்டுமே திங்க் பண்ணிட்டு இருக்குற கேரக்டர். அவருடைய அர்ப்பணிப்பு என்னை அதிகம் அலர்ட் பண்ணுது. நம்மள இவ்வளவு நம்புறாரே, இதுக்காகவே இன்னும் மெனக்கெடணும்னு தோணுது. செட்டுக்கு அவர் வந்தாலே பாஸிட்டிவ் எனர்ஜி பாஸான மாதிரி ஃபீல் வந்துடும்.’’

‘‘ ‘அஞ்சான்’ ஒன் லைன் என்ன? ‘‘எதற்கும் துணிந்தவன், துடிப்பானவன் என்பதை டைட்டிலே காட்டிக் கொடுக்கும்போது, கதையைப் பற்றிச் சொல்லணுமா? இப்பவே அது பற்றிச் சொன்னால் ஆளாளுக்கு திரைக்கதை எழுதி புதுப்புது கதையா திரிச்சிடுவாங்க. அதனால இப்போதைக்கு சஸ்பென்ஸ் ப்ளீஸ்! மும்பைதான் கதைக்களம். முழுக்க முழுக்க அங்கேதான் படப்பிடிப்பு நடந்திருக்கு. நான் இயக்கிய ‘ரன்’, ‘சண்டைக்கோழி’, ‘பையா’ படங்களில் ஸ்பெஷலா ஒரு விஷயம் இருக்கும்ல... அந்த ஸ்பெஷல் இதிலும் இருக்கும். நேரடியா மெசேஜ் சொல்றதோ, அரசியலை உரசிப் பார்க்குறதோ இருக்காது.

முதல்முதலா நான் பண்ணின ‘ஆனந்தம்’ படத்திலேயே சூர்யாதான் நடிக்க வேண்டியது. அப்போ அவர் ‘நந்தா’வில் பிஸி. ‘சண்டைக்கோழி’யிலும் நடிச்சிருக்க வேண்டியவர்... ‘கஜினி’ கமிட்மென்ட்டால முடியல. ‘பையா’ ஆடியோ ரிலீசில் ‘லிங்குசாமியோட ஒரு படம் பண்ணணும்னு ஆசை இருக்கு’ன்னு சூர்யாவே பேசினார். இந்த தடவை சூர்யாவோடதான் இணையணும் என்ற முடிவோட அவருக்காகவே செஞ்ச கதைதான் ‘அஞ்சான்’ ’’

‘‘மும்பையில் ஷூட்டிங் நடத்த சிரமப்பட்டீங்களா?’’ ‘‘தமிழ்நாட்டை விட அங்கே செலவு அதிகம் என்பதைத் தவிர, எந்த சிக்கலும் இல்லை. நினைச்ச இடத்தில் ஷூட்டிங் பண்ண முடிஞ்சதால எந்தப் பிரச்னையும் இல்ல. கேமராமேன் சந்தோஷ் சிவனோட யூனிட் மும்பையிலும் இருப்பதால் எல்லா வேலையும் ஈஸியா நடந்தது. முதல் ஒரு வாரம் மட்டும் அந்நியமா தெரிஞ்சது. அதுக்கு பிறகு கும்பகோணத்தில் இருக்கிற உணர்வையே மும்பையும் கொடுத்தது. இந்திப் படம் எடுக்கறதுக்கு டிரெய்லர் பார்த்த மாதிரி இருந்தது. இந்திப் படம் பண்ண நேரம் அமைந்தால் அமீர் கான், ரன்பீர் கபூர், சல்மான் கான், ஷாருக் கான் இந்த நாலு பேரும் என் லிஸ்ட்ல இருக்காங்க. பார்ப்போம்!’’

‘‘சூர்யா - சமந்தா கெமிஸ்ட்ரி..?’’ ‘‘ ‘கஜினி’யில் சூர்யா - அசின் கெமிஸ்ட்ரி எனக்கு ரொம்பப் பிடிக்கும். சில படங்களில் ஜோதிகா கெமிஸ்ட்ரி நல்லாயிருக்கும். அதுக்குப் பிறகு சூர்யா - சமந்தா கெமிஸ்ட்ரிதான் சூப்பர்னு சொல்வேன். எந்த டிரஸ் கொடுத்தாலும் மறுக்காமல் போட்டுக்கொண்டு காதலிலும் கிளாமரிலும் மயக்கி எடுக்கிறார் சமந்தா. மனோஜ் பாஜ்பாய்தான் படத்தில் மெயின் வில்லன். இவரைத் தவிர இன்னும் மூணு வில்லன்கள் இருக்காங்க. ஆக்ஷன் ஏரியாவில் பட்டையைக் கிளப்பி இருக்கார் சூர்யா. ‘நான் சாகுறதா இருந்தாலும் நான்தான் முடிவு செய்யணும்... நீ சாகுறதா இருந்தாலும் நான்தான் முடிவு செய்யணும்’ என்று சூர்யா பரபரக்கிற காட்சியில், தியேட்டரே விறுவிறுக்கும். ‘சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி... நான் சில்க் ஸ்மிதா கம்யூனிட்டி’ என்கிற ஒரு பாடலுக்கு பாலிவுட் நடிகை சித்ராங்கதா சிங் போட்டிருக்கும் ஆட்டமும் கிறங்கடிக்கும்’’

‘‘சூர்யா, கார்த்தி இருவரையும் கம்பேர் பண்ண முடியுமா?’’
‘‘கார்த்தி கூல்... நாம் என்ன சொல்றமோ அதை செஞ்சிடுவார். சூர்யா ஹை வோல்ட்டேஜ். அவருக்குள்ள இருக்குற நெருப்பு, பெருந்தீ. சூர்யாவுக்கு தீனி போடுறது கஷ்டம். இன்றைக்கு அவரை வச்சு ‘நாயகன்’ மாதிரி ஒரு படம் பண்ணலாம். அதுக்கான தகுதியோட இருக்கார் சூர்யா. நான்கூட அவர்கிட்ட, ‘சார் ‘நாயகன்’ மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் அமைந்தால் நூறு சதவீதம் கரெக்டா இருப்பீங்க. உங்களை வச்சு அப்படியொரு படம் பண் ணணும்’னு சொல்லிக்கிட்டே இருக்கேன்.

 அவருக்குள் ஒரு கமல் இருக்கார். தன்னோட கேரக்டருக்கு உயிர் கொடுக்க என்னென்ன
செய்யணுமோ அதையெல்லாம் செய்வார். சூர்யாகிட்ட கார்த்தி நிறைய கத்துக்கணும். அந்த
ஆர்வமும் அவருக்கு இருக்கு. கூடிய சீக்கிரம் சூர்யா இடத்துக்கு கார்த்தியும் நெருங்கி வரலாம்!’’

- அமலன்