+2 வுக்குப் பிறகு... கலை,அறிவியலில் எது பெஸ்ட்?



கலை, அறிவியல் படிப்புகள் மீதிருந்த அவநம்பிக்கை கடந்த சில வருடங்களாக மறைந்து வருகிறது. தமிழகம் முழுதுமுள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு கணிசமான அளவுக்கு விண்ணப்பங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.

குறிப்பாக மாணவிகள் கலை, அறிவியல் படிப்புகளின் திசையில் திரும்பியிருக்கிறார்கள். கலை, அறிவியலில் 20க்கும் மேற்பட்ட பிரதான படிப்புகள் உண்டு. அவை தவிர, பொறியியல் படிப்புகளுக்கு இணையாக ஐம்பதுக்கும் மேற்பட்ட துறை சார்ந்த சிறப்புப் படிப்புகளும் வந்துவிட்டன. இவற்றில் எந்தப் படிப்பை மாணவர்கள் தேர்வு செய்வது..? கலை, அறிவியல் படிப்புகளுக்கு எதிர்காலம் உண்டா?

‘‘பொறியியலைப் போலவே கலை, அறிவியல் படிப்புகளிலும் சாதக பாதகங்கள் உண்டு. பொறியியலைப் போலவே கலை, அறிவியல் படிப்புகளும் மூளை மட்டுமே சார்ந்த படிப்பல்ல; மனமும் சார்ந்த படிப்பு. தனிமனித வளர்ச்சியை மட்டும் நோக்கமாகக் கருதாமல், சமூக வளர்ச்சியையும் கருதும் மாணவர்கள் கலை, அறிவியல் பக்கம் வரலாம். குறிப்பிட்ட துறை மீது ஆர்வம் இல்லாத மாணவர்கள், எளிதான ஒரு பட்டப்படிப்பை முடித்துவிட்டால் சிவில் சர்வீஸ், அரசுத் தேர்வாணையத் தேர்வுகளில் பங்கேற்று நல்ல பணிக்குச் சென்று விட முடியும். குறிப்பிட்ட துறையில் சாதிக்க விரும்புபவர்கள் அத்துறையில் இளங்கலை முடித்து விட்டு மேற்கொண்டு பி.ஜி.,

பிஹெச்.டி என முன்னேறினால், உயரிய பணிகளைப் பெற முடியும். படிப்பை முடித்ததுமே வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மாணவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த கலை, அறிவியல் படிப்புகளைத் தேர்வு செய்யலாம்’’ என்கிறார் கல்வி ஆலோசகர் தா.நெடுஞ்செழியன். ‘‘கலை, அறிவியல் பட்டங்களைப் படிக்க விரும்பும் மாணவர்கள் நல்ல கல்லூரியைத் தேர்வு செய்ய வேண்டும். பிரமாண்டமான கட்டுமானங்கள் மட்டுமே நல்ல கல்லூரிக்கான அடையாளம் அல்ல. நெடுங்கால அனுபவமுள்ள கல்லூரியாக இருக்க வேண்டும். தகுதிவாய்ந்த சோதனைக்கூடங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு துறையிலும் பிஹெச்.டி முடித்த பேராசிரியர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும்.

கலைப்படிப்புகளைப் பொறுத்தவரை எகனாமிக்ஸ் மிகச்சிறந்த சாய்ஸ். எஜுகேஷன் எகனாமிக்ஸ், ஹெல்த் எகனாமிக்ஸ், அக்ரிகல்ச்சர் எகனாமிக்ஸ் என எல்லாத் துறைகளிலும் எகனாமிக்ஸின் தேவை இருக்கிறது. பி.ஏ. எகனாமிக்ஸ் முடித்துவிட்டு முதுகலையில் ஒரு சிறப்புப் பிரிவைத் தேர்வு செய்து படிக்கலாம். திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு இன்டக்ரேடட் எம்.எஸ்சி. எகனாமிக்ஸ் படிப்பு வழங்கப்படுகிறது. அதில் நிறைய சிறப்புப் பிரிவுகளும் உண்டு. 3 ஆண்டுகள் திருவாரூரிலும், 2 ஆண்டுகள் மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் நிறுவனத்திலும் படிக்க வேண்டும். இதை முடித்தவர்கள் சிவில் சர்வீஸுக்கு இணையான இந்தியன் எகனாமிக்ஸ் சர்வீஸ் தேர்வெழுதி பெரிய பணிகளுக்குச் செல்ல முடியும்.

இலக்கியம், மொழியியலில் ஆர்வமுள்ளவர்கள் ஆங்கில இலக்கியம் படிக்கலாம். ஃபாரின் லாங்குவேஜ் படிப்புகளிலும் சேரலாம். ஐதராபாத்தில் உள்ள இங்கிலீஷ் அண்ட் ஃபாரீன் லாங்குவேஜ் யுனிவர்சிட்டி, உலக அளவில் மிகச்சிறந்த மொழியியல் கல்வி நிறுவனமாகக் கருதப்படுகிறது. இதுபோன்ற நிறுவனங்களைத் தேர்வு செய்து படித்தால் நல்ல எதிர்காலம் உண்டு.

அண்மைக்காலமாக சோஷியல் சயின்ஸ் படித்தவர்களுக்கு உலகளாவிய வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன. மும்பை மற்றும் ஐதராபாத்தில் செயல்படும் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்ஸ் நிறுவனத்தில் 5 ஆண்டு இன்டக்ரேடட் கோர்ஸ் வழங்கப்படுகிறது. இப்படிப்புக்கு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். லேபர் மேனேஜ்மென்ட், ஹெச்.ஆர்.மேனேஜ்மென்ட், டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் என பல படிப்புகள் வழங்கப்படுகின்றன.

அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர்பவர்களுக்கு ஆசிரியர் வேலையைத் தவிர வேறெதுவும் கிடைக்காது என்ற மூடநம்பிக்கை ஒரு காலத்தில் இருந்தது. இப்போது உலகின் உச்சத்தையே தொட முடியும். ஏதாவது ஒரு அறிவியல் பிரிவில் இளநிலைப் பட்டம் முடித்தவர்கள் நேரடியாக இன்டக்ரேடட் பிஹெச்.டி படிக்க முடியும். அதுவும் மாதம் 12 ஆயிரம் உதவித்தொகையோடு. பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ், இந்தியா முழுதுமுள்ள ஐ.ஐ.டிக்கள்,

புனே மற்றும் திருவனந்தபுரம் நகரங்களில் செயல்படும் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் எஜுகேஷன் அண்டு ரிசர்ச் ஆகிய கல்வி நிறுவனங்களில் இந்தப் படிப்பு வழங்கப்படுகிறது. பி.எஸ்சி பிசிக்ஸ் முடித்தவர்கள், மும்பை மற்றும் பெங்களூருவில் செயல்படும் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபண்டமென்டல் ரிசர்ச் நிறுவனத்தில் இன்டக்ரேடட் பிஹெச்.டி படிக்கலாம். மெடிக்கல் பிசிக்ஸ், லேசர் பிசிக்ஸ், நியூக்ளியர் பிசிக்ஸ், ஆஸ்ட்ரோ பிசிக்ஸ் என பல துறைகள் உண்டு.

பி.எஸ்சி தாவரவியல், விலங்கியல், உயிரியல், மைக்ரோ பயாலஜி முடித்தவர்கள் பெங்களூருவில் உள்ள நேஷனல் சென்டர் ஃபார் பயாலஜிக்கல் சயின்ஸ் நிறுவனத்தில் வழங்கப்படும்   மி.ஙிவீஷீ படிப்பில் சேரமுடியும். இப்படிப்பை முடித்தவர்களை அள்ளிச்செல்ல உலகெங்குமுள்ள நிறுவனங்கள் காத்திருக்கின்றன’’ என்கிற நெடுஞ்செழியன், ‘‘பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழகத்தைத் தாண்டியிருக்கும் கல்வி நிறுவனங்கள் பற்றித் தெரிவதில்லை. பொறியியல் படிப்புக்கு மட்டுமின்றி கலை, அறிவியல் படிப்புகளுக்கும் ஏராளமான நுழைவுத்தேர்வுகள் நடக்கின்றன. அதுபற்றியும் புரிதல் இல்லை’’ என்று வருந்துகிறார்.

‘‘காமர்ஸ் படிப்புகளுக்கு எப்போதுமே தேவை இருக்கிறது. பி.காமில் 15க்கும் மேற்பட்ட பிரிவுகள் வந்துவிட்டன. அதேபோல், டூரிசம் அண்டு ஹாஸ்பிடாலிட்டி மேனேஜ்மென்ட் படிப்பும் எவர்கிரீன். பி.ஏ. கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப் படிப்பு இப்போது அதிக கவனம் பெற்றிருக்கிறது. சைக்காலஜி படித்தவர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் பிஹெச்.டி வரை படிக்க வேண்டும். கவுன்சலிங், ஆலோசனை, நேர்முகத்தேர்வுக்கு வழிகாட்டுதல் என பல தளங்கள் அவர்களுக்கு உண்டு.

இந்த ஆண்டு பல புதிய படிப்புகள் அறிமுகமாகியுள்ளன. பல படிப்புகள் பிராக்டிகல் பயிற்சியோடு இணைந்தவை. மாணவர்கள் தங்கள் திறனறிந்து பாடங்களைத் தேர்வு செய்ய வேண்டும். கல்லூரி என்றாலே ஜாலி, அரட்டை, விளையாட்டு என்று கருதி மெத்தனமாக இருந்தால் எதிர்காலம் வீணாகிவிடும். கல்லூரிக் காலம்தான் வாழ்க்கையின் அடித்தளம்.  ஆர்வத்தோடும், தேடலோடும் படிக்க வேண்டும். பாடப் புத்தகங்களைத் தாண்டியும் தேடல் நீள வேண்டும்...’’ என்கிறார் நெடுஞ்செழியன். இது வாழ்வின் மிக முக்கியத் தருணம். கல்லூரியையும், படிப்பையும் கவனமாகத் தேர்வு செய்யுங்கள். சமரசமற்று உழையுங்கள். வானம் வசப்படும் மாணவர்களே!

இதெல்லாம் புதுசு...

பி.ஏ: பிசினஸ் எகனாமிக்ஸ், லாஜிஸ்டிக்ஸ், கல்லினரி ஆர்ட்ஸ், ஹிஸ்டரி அண்டு டூரிஸம், கிரிமினாலஜி அண்ட் போலீஸ் அட்மினிஸ்ட்ரேஷன், வொகேஷனல் ஸ்டடீஸ்
பி.எஸ்சி: வொகேஷனல் பயோ டெக்னாலஜி, ஃபாரஸ்ட்ரி, ஹேண்ட்லூம் டெக்னாலஜி, பாலிமர் சயின்ஸ், பிளாஸ்டிக் மோல்ட் டிஸைன் அண்ட் பிராசஸ், அப்ளைடு சயின்ஸ் வித் அக்ரோ கெமிக்கல் அண்ட் பெஸ்ட் மேனேஜ்மென்ட், அக்வா கல்சர், இண்டஸ்ட்ரியல் ஃபிஷ் அண்ட் ஃபிஷரீஸ், வெகேஷனல் கெமிஸ்ட்ரி, நியூ அண்ட் இன்ட்ராக்டிவ் மீடியா.

பி.பி.ஏ: ஜுவல்லரி டிசைன் அண்ட் மேனேஜ்மென்ட்
பி.காம்: கார்ப்பரேட் செக்ரட்டரி ஷிப்.

பெஸ்ட் சாய்ஸ்

*பி.சி.ஏ அல்லது பி.எஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ்
* பி.ஏ. டூரிஸம் அண்ட் டிராவல் மேனேஜ்மென்ட்
* பி.ஏ. பொலிட்டிகல் சயின்ஸ்
* பி.எஸ்சி. ஸ்டாடிஸ்டிக்ஸ்
* பி.எஸ்சி. விஷுவல் கம்யூனிகேஷன்
* பி.எஸ்சி. நியூட்ரிஷன் அண்ட் டயட்டிக்ஸ்
* பி.வி.ஏ. பேச்சலர்ஸ் ஆஃப் விஷுவல் ஆர்ட்ஸ்
* பி.ஏ. ஜர்னலிஸம்
* பி.எஸ்.எல். சோஷியல் லீகல் சயின்ஸ்
* பி.எஸ்சி. எலெக்ட்ரானிக்ஸ் சயின்ஸ்
* பி.ஏ. எகனாமிக்ஸ்

- வெ.நீலகண்டன்