உஷார்



‘‘ஒரு ஜாதகத்தை பார்த்து காதல் திருமணமா, அரேஞ்சுடு மேரேஜான்னு சொல்ல முடியுமா?’’ - கேள்வி கேட்டுவிட்டு ஆவலோடு காத்திருந்தார் ஆறுமுகம்.

‘‘இந்த ஜோதிட கலா ரத்தினத்தை பார்த்து இப்படி கேக்கலாமா? அது சரி... ஏன் இவ்வளவு பதற்றமா இருக்கீங்க?’’  ‘‘பதறாம என்ன பண்ண? என் பையன் லவ் மேரேஜ் பண்ணிப்பான் போல தெரியுது. அவன் போக்கே சரியில்ல...’’‘‘எத வச்சு அப்படிச் சொல்றீங்க..?’’ - ஜோசியர் பரபரத்தார்.

‘‘பொண்ணுங்கள பார்த்தா சிரிக்கிறான்... ரொம்ப சோஷியலா நெருங்கிப் பழகுறான். கைகுலுக்குறான். உரசி உரசி நடக்குறான்...’’ - ஆறுமுகம் அடுக்கினார்.
‘‘ஐயோ... அப்புறம்..?’’ - ஜோதிடரின் முகம் மாறியது. ‘‘நேத்து ஒரு பொண்ண இழுத்துக் கட்டிப் பிடிச்சு...’’

‘‘சிவ.. சிவா... போதும்! இதுக்கு மேல ஒண்ணும் சொல்லாதீங்க. முதல்ல ஜாதகத்தக் கொடுங்க...’’ ‘‘இந்தாங்க ஜாதகம்... எதையுமே ஆரம்பத்துலேயே தெரிஞ்சுக்கிட்டா உஷாரா இருக்கலாம் பாருங்க. என்னடா யு.கே.ஜி பையன் ஜாதகத்த காட்டுறானேன்னு நினைக்காதீங்க! இது கலி காலம். பயல்கள நம்ப முடியாது!’’

கே.எம்.சம்சுதீன்