விரைவில் கோச்சடையான் 2



ரஜினியின் அடுத்த அவதாரம்

வறுத்தெடுக்கிற சென்னை வெயிலுக்குச் ‘சில்’லென இருக்கிறது ‘கோச்சடையான்’ அலுவலகம். சௌந்தர்யா அப்படியே அவர் அப்பா மாதிரி. யோசிக்காமல்... ஆனால், நம்மை யோசிக்க வைப்பது போலப் பேசுகிறார். அப்படியே ரஜினியின் சுறுசுறு... துறுதுறு... ‘‘கடந்த நாலைஞ்சு மாசமா நிறைய வேலை. ‘கோச்சடையா’னை நிறைவு செய்கிற பணிகள். அதில் என்னை உள்ளே கொண்டு போய் நிறுத்தின இறுக்கம் முடிஞ்சு ரிலாக்ஸ் ஆகிட்டேன். இப்போ பேசலாம் வாங்க!’’ - நிறைய நிறைய உற்சாகமாகத் துவங்குகிறார் சௌந்தர்யா.

‘‘இந்தியாவில் இதுதான் முதல்முறை. சலனப் பதிவாக்க தொழில்நுட்பம் அரங்கேறியிருக்கிறது. ஹாலிவுட்டில் இதை பலமுறை பரீட்சை பண்ணி பார்த்துட்டாங்க. இதுல உலக அளவில் பேசப்பட்ட படம் ‘அவதார்’. அப்படிப் படம் பண்ண ஆறேழு வருஷம் தேவைப்படும். அப்படி செலவும் இல்லாமல் அதே சிரத்தையோடு இரண்டு வருஷத்தில், ‘கோச்சடையான்’ சாத்தியமாகியிருக்கு. ரஜினி, தீபிகா படுகோனே, ஜாக்கி ஷெராப், நாசர், ஷோபனா என அவர்களின் ஆக்ஷனை மட்டும் படம் பிடித்து, அதை கம்யூட்டரில் உருவாக்கப்பட்ட இமேஜில் பதிவாக்கினோம்.

எல்லாமே க்ரியேட்டிவ். அப்பாவின் காஸ்ட்யூம், செயின், கையில் வைத்திருக்கிற கத்தி, மினுக்கும் கண்கள் என எல்லாம்... எல்லாம் க்ரியேட்டிவ். நானே என் படத்தைப் பத்தி சொல்றேன்னு நினைக்கக் கூடாது. படம் வந்திருக்கிற நிறைவுதான் இப்படி என்னைப் பெருமிதமாக பேச வைக்கிறது!’’‘‘ரஜினிக்கு இருக்கிற எதிர்பார்பையும், கவனத்தையும் எப்படி எதிர்கொண்டீர்கள்?’’

‘‘ ‘கோச்சடையான்’ சிவபக்தன். சிவபெருமானே ருத்ரதாண்டவம் செய்கிறவர்தான். தலைவரின் வெறியான ரசிகையான எனக்கு, அப்பா ருத்ரதாண்டவம் செய்து பார்க்க வேண்டும் என ஆசை. அதை இதில்தான் செய்ய முடிந்தது. ‘கோச்சடையானால்’ மன்னருக்கு சில ஈகோ வரும். மக்கள் மன்னனை விடவும், கோச்சடையான் மீது அபிமானம் வைப்பார்கள். கோச்சடையானின் பிள்ளைகள் ராணா, சேனா என அழகிய பின்கதையும் இருக்கிறது. அப்படியே அருமையான கமர்ஷியல் கதை. கே.எஸ்.ரவிகுமார் அங்கிள், அப்பாவின் அடிச்சுவடு அறிந்தவர். அவரோடு நிறைய படங் களில் வேலை செய்து அவர் ஸ்டைலின் உள்ளும் புறமும் அறிந்தவர். அவர்தான் இதற்கு திரைக்கதை, வசனம் எல்லாம். ரஜினி, தீபிகா, ஷோபனா, நாசர், சரத், ரவிக்குமார் என இவ்வளவு பெரிய ஆளுமைகளுக்கு மத்தியில் புதியவளான எனக்கு வேலை செய்ய வாய்ப்புக் கிடைத்தது கடவுளின் கிருபை இன்றி வேறில்லை!’’

‘‘எப்படி ‘கோச்சடையானை’ப் பார்க்க வரணும் ரசிகர்கள்?’’‘‘அப்பாவை ஒரு புதுமையான அவதாரமாகக் காட்டியிருப்பது இந்த சினிமா. ஒரு ரஜினி படத்திற்கு என்ன எதிர்பார்ப்பு இருக்குமோ, அதற்கு சற்றும் குறையாத அனைத்தும் இருக்கு. நிறைய திருப்பங்கள், காமெடி, மனதை இழுக்கிற காதல், பிரமாண்டமான சண்டைக் காட்சிகள் என எல்லாமே இருக்கு. சலனப் பதிவாக்கம், போஸ்ட் புரொடக்ஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், டைரக்ஷன்னு ஒவ்வொரு ஸ்டெப்பும் நல்லபடியாகப் போனபோது, அப்பா என் இன்வால்வ்மென்ட்டை புரிந்துகொண்டார். ஒரே நேரத்தில் நாலஞ்சு வேலை பண்ண முடியும்ங்கிற நம்பிக்கை எனக்கு இருந்தது.

எதுவும் எனக்கு சுமையாகிடக் கூடாதுங்கிற கவலை அப்பாகிட்ட இருந்தது. ‘முடியுமா கண்ணா... பிராக்டிகலா இருந்தா துணிஞ்சு பண்ணு. இல்லேன்னா யோசிச்சுப் பண்ணு’ன்னு சொன்னார். அவருக்கு என் மேல் நம்பிக்கை வந்ததுக்கு எனது அர்ப்பணிப்பும் ஒரு காரணம். அப்பா எப்போதும், ‘மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்று சொல்வார். ‘மாறுவது எல்லாம் உயிரோடு, மாறாதது எல்லாம் மண்ணோடு’ என அதைப் பாடல் வரிகளாகவே வைரமுத்து அங்கிள் கொடுத்தார்.

சின்னப் பொண்ணாச்சேன்னு எந்த நினைப்பும் இல்லாமல் இவ்வளவு பெரியவங்க எனக்கு ஒத்துழைப்புத் தந்ததை வாழ்நாள் முழுக்க மறப்பது சுலபமில்லை. நாசர் சார்தான் இதில் மெயின் வில்லன். அவருக்கு இந்த டெக்னாலஜியில் வந்த ஆர்வம் ரொம்பப் பெரியது. எனக்கு சின்ன வயதிலிருந்தே டெக்னிகல் சைடில் ஆர்வம் அதிகம். அனிமேஷன் எனக்கு அதிவிருப்பமான விஷயம். கடவுள் அருளும், அப்பா என் மீது வைத்திருந்த நம்பிக்கையும்தான் இந்த ‘கோச்சடையானை’ மக்கள்கிட்ட கொண்டு போய்ச் சேர்த்திருக்கு!’’
‘‘படம் பார்த்துட்டு அப்பா என்ன சொன்னார்?’’

‘‘அப்பா, அம்மா ரெண்டு பேருமே ரஹ்மான் சார் ஸ்டுடியோவில் பார்த்தாங்க. நான் அப்போ வேலையாய் மும்பையில் இருந்தேன். அவங்க படம் பார்க்கிற ரெண்டு மணி நேரமும், எனக்கு அவ்வளவு நீண்ட நேரமா தோணுச்சு. எப்படா போன் வரும்னு ஒவ்வொரு நிமிஷமும் பாரமாச்சு. கடைசியா அப்பாகிட்டே இருந்து போன். ‘கண்ணா... அருமையா இருந்தது. உன்னால நான் பெருமைப்படுகிறேன்’னு சொன்னார். நான் இதுவரை கேட்டதிலேயே தங்கமான வார்த்தைகள் இதுதான். அப்படியே சிலிர்த்துப் போயிட்டேன். அம்மா, உணர்ச்சி வசப்பட்டாங்க. ‘உன்னோட உழைப்பு, திறமை எல்லாமே ஒவ்வொரு ஃப்ரேம்லயும் தெரியுது’ன்னு சொன்னாங்க. ரொம்ப சந்தோஷம்.’’

‘‘பாடல்கள் அருமையா வந்திருக்கு. ரஹ்மான் உங்களுக்கு நேரம் ஒதுக்கின விதம் எப்படி?’’‘‘ரஹ்மான் சார் என்னோட குடும்பத்தில் ஒருத்தர். சொல்லப் போனா, என் குடும்பத்தை விட அவர்கிட்ட ஒட்டுதல் அதிகம். அவருக்கு டெக்னாலஜி புரியும். இப்ப கூட ஹாலிவுட்டில் ரெண்டு அனிமேஷன் படம் பண்ணிட்டிருக்கார். இந்த மாதிரி முயற்சி வெற்றி பெறும்போது, இதில் இன்னும் எவ்வளவு படம் அடுத்தடுத்து பண்ணலாம்னு யோசிக்கிறார்.

‘பொன்னியின் செல்வனை’ இப்ப எடுக்க நினைச்சால் இந்த சலனப் பதிவாக்க முறை சாத்தியமாக்கும். ரஹ்மானுக்கு இதை அடுத்த லெவலுக்கு எப்படிக் கொண்டு போறதுன்னு நல்லா தெரியுது. டெக்னாலஜி, புது முயற்சி, அதை முன்வைக்கிறது ஒரு பொண்ணுன்னு அவரது அக்கறை எனக்குப் பிடிச்சது. அவர் சமீபத்தில் செய்த படங்களில் பின்னணி, பாடல்கள்னு எடுத்துக்கிட்டா ‘தி பெஸ்ட்’ இதுதான். வைரமுத்து அங்கிளின் வரிகள் வெரி நைஸ். இதில் ஒரு கப்பலிலிருந்து அடுத்த கப்பலில் இருக்கிறவங்களோட கடலில் ‘கோச்சடையான்’ சண்டை போடுற காட்சிகள் இருக்கு. அதில் அவரோட பின்னணி இசை அபாரம்!’’

‘‘அடுத்த முயற்சி..?’’‘‘நிறைய பிளான் இருக்கு. ‘கோச்சடையானை’க் கூட க்ளைமேக்ஸில் ஒரு கமா போட்டுத்தான் முடிச்சிருக்கோம். ‘கோச்சடையான் 2’ கூட வரலாம். அந்த முயற்சி இருக்கும்... இருக்கணும். அப்படி வரும்போது அதைப் பற்றி இன்னும் பேசலாம். இப்போதைக்கு ‘கோச்சடையானு’க்கு மக்கள் அளிக்கிற ஆதரவு ஒண்ணுதான் நினைப்பு. கிருஷ்ணா...’’ என்றபடி மேலே கை காட்டுகிறார் சௌந்தர்யா.அப்படியே ரஜினி!

ஒரு ரஜினி படத்திற்கு
என்ன எதிர்பார்ப்பு
இருக்குமோ, அதற்கு
சற்றும் குறையாத
அனைத்தும் இருக்கு.

நா.கதிர்வேலன்