தர்மம்



பஸ்ஸில் ஏறிய குமரேசனுக்கு குழப்பமும், எரிச்சலும் பீறிட்டது. எப்போதும் தர்ம சிந்தனையுடன் இருக்கும் குமரேசன் பிச்சைக்காரர்களுக்கு தர்மம் செய்வதற்கென்றே பாக்கெட்டில் எப்போதும் சில்லறைகள் வைத்திருப்பான். பஸ் ஸ்டாண்டில் ஒரு பிச்சைக்காரனுக்கு தொடர்ந்து சில்லறையும் போடுவான். ஆனால், அவன் எப்போது வாங்குவான், எப்போது முகத்தை விருட்டென திருப்பிக்கொண்டு போவான் என்றுதான் தெரியாது. அதற்குக் காரணமும் புரியவில்லை.

ஒருவேளை இவனிடம் அடிக்கடி எப்படி யாசிப்பது என்கிற சங்கோஜமா? குமரேசன் முடிவு செய்தான். நாளை அவனிடம், ‘உனக்கு இடும் சில்லறையால் நான் குடிமுழுகி போய்விட மாட்டேன். தயங்காமல் வாங்கிக் கொள்!’ என்று கட் அண்டு ரைட்டாகச் சொல்லிவிட வேண்டியதுதான். முடிவெடுத்த மாதிரியே மறுநாள் அந்தப் பிச்சைக்காரனிடம் ‘வசனம்’ பேசினான். அவன் ‘பளிச்’சென்று பதில் சொன்னான்.

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்ல சாமி... முதல் போணியா உன்கிட்ட பிச்சை வாங்கினா அன்னிக்கு கலெக்ஷன் ரொம்ப டல்லாயிடுது. அதனால வேற யாராவது முதல்ல தர்மம் போட்டிருந்தா மட்டும் உன்கிட்ட வாங்குவேன். இல்லேன்னா போயிடுவேன்...’’

சுபாகர்