அழியாத கோலங்கள்



1978ம் ஆண்டு கமல் நடித்த தெலுங்குப் படம் ஒன்று, கர்நாடகாவின் சில நகரங்களில் 100 நாட்களுக்கும் மேல் ஓடியது. அதன் நூறாவது நாள் விழாவை பெங்களூருவில் நடத்த நினைத்தார்கள் படத்தின் தயாரிப்பாளர்கள்.

கன்னட நடிகர் ராஜ்குமார் தலைமையில் இதை நடத்தத் தீர்மானித்தார்கள். ராஜ்குமார் போன்ற ஒரு மூத்த நடிகரை விழாவுக்குத் தலைமையேற்க அழைப்பது என்றால், தானும் அவரை நேரில் சந்தித்து அழைப்பதுதான் மரியாதை என்று கருதினார் கமல். எனவே ராஜ்குமாரை சந்திப்பதற்கு ஒரு தேதி வாங்கச் சொன்னார்.

சினிமா துறையில் சாதாரண லெவலில் இருக்கும் ஹீரோக்களின் உதவியாளர்கள் செய்யும் பந்தாவே தாங்க முடியாது. ‘‘அண்ணன் குளிக்கிறார்... அண்ணனைப் பார்க்க ரெண்டு டைரக்டர்கள் வெயிட் பண்ணிக்கிட்டிருக்காங்க... ஒருத்தர் கதை சொல்லிக்கிட்டு இருக்கார்’ என்கிற ரீதியில் கதை விடுவார்கள்.

ராஜ்குமாரின் உதவியாளர் விக்ரம் நிவாஸிடம் கன்னடத் திரையுலகமே நடுங்கும். அவரிடம் பேசியபோது டைரியைப் பார்த்துவிட்டு, ‘‘நீங்கள் அந்த நூறாவது நாள் விழா நடத்தும் தேதியில் ராஜ்குமார் சாருக்கு ஷூட்டிங் இருக்கிறது. பெங்களூரு என்றாலும் பரவாயில்லை, ஆனால் அரபிக்கடலில் கிறிஸ்துமஸ் தீவில் படப்பிடிப்பு நடப்பதால் பெங்களூரு வர இயலாது’’ என்று சொன்னார். நானும் இதைக் கமலிடம் சொல்லிவிட்டேன்.

அதன்பிறகு ஒருநாள் திடீரென ஒரு தொலைபேசி அழைப்பு வந்து எங்களை ஆச்சரியப்படுத்தியது. அது, நடிகர் ராஜ்குமார் வீட்டிலிருந்து வந்த போன்! அவரே பேசினார். கமலை மறுநாள் காலை தங்கள் வீட்டுக்கு உணவருந்த அழைத்தார். அடுத்த நாள் கமல் அவர் வீட்டுக்குச் சென்றதும், தன் பிள்ளைகளை எல்லாம் அறிமுகம் செய்து வைத்தார். விழாவுக்கு தான் வரமுடியாதது உண்மைதான் என்றும், ஆனால் கமலை தன் வீட்டுக்கு அழைக்கும் வாய்ப்பை இழந்துவிடக்கூடாது என்று நினைத்ததாகவும் சொன்னாராம்.

பின்பொரு நாள் நான் ராஜ்குமாரை சென்னை இசைப்பதிவுக்கூடம் ஒன்றில் பார்த்தேன். ‘‘என் பெயர் சாருஹாசன். நடிகர் கமல்ஹாசனின் அண்ணன்’’ என்றேன் கொஞ்சம் கூச்சமாக.‘‘அப்படியா? என்னால் கமல்ஹாசனின் அண்ணன் என்று சொல்லிக்கொள்ள முடியவில்லையே! நான் அவருடைய ரசிகன் மட்டும்தான்...’’ என்றார். எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், இப்படி தன் சொற்களால் அடுத்தவருக்குப் பெருமை சேர்க்கும் திறமை எத்தனை பேருக்கு இருக்கக்கூடும்!ஒருநாள் இவரை சந்தனக்கட்டை வீரப்பன் சிறையெடுத்துக் கொண்டு போய் காட்டில் வைத்திருந்தபோது, பலர் ராஜ்குமாரை விமர்சனம் செய்தார்கள். ஏதோ அவர் தன் சொந்த கிராமத்துக்குப் போனதுதான் தவறு என்பது போல கோடம்பாக்கத்தில் பேசினார்கள்.

இது ஒரு சம்பவத்தை எனக்கு நினைவுபடுத்தியது. என் குமாஸ்தா விஸ்வத்தை இன்னொரு வக்கீல் குமாஸ்தா, நடுத்தெருவில் செருப்பால் அடித்துவிட்டான். அடி வாங்கிக்கொண்டு போன விஸ்வத்திடம் அவனுடைய அம்மா, ‘‘ஏண்டா விஸ்வம்! அந்த சுப்பாணி வடிகட்டின கஞ்சனாச்சே... எப்பவும் வெறுங்
காலோடதானே நடப்பான். எப்ப காசு போட்டு செருப்பு வாங்கினானோ, உன்னை அடிக்கிறதுக்குத்தான் வாங்கியிருக்கான்னு புரிஞ்சு ஓடிட வேண்
டாமோ?’’ என்று சொன்னாராம்.

 ஒரு முறை நான் அன்றைய புது இளம் கவிஞர் வைரமுத்துவின் வீட்டுக்குப் போய்விட்டு, பக்கத்து ரோடு வழியாக கோடம்பாக்கம் ஆற்காடு ரோடுக்குத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். அப்போது கறிகாய் பையுடன் நடந்து சென்ற ஒருவர் அசப்பில் ராஜ்குமார் போல் தோன்றினார். நான் ஏதோ ஒரு ஈர்ப்பில் காரைப் பின்னோக்கி ஓட்டினேன். என்னைப் பார்த்ததும் அவர் நெருங்கி வந்தார். ‘‘நான் ராஜ்குமார்தான்... நீங்க கீழே இறங்காதீங்க.

என்னை இங்கே யாருக்கும் அடையாளம் தெரியாது. உங்களை எல்லாருக்கும் தெரியும்’’ என்று சாதாரணமாகப் பேசினார். சென்னையில் தங்கியிருக்கும்போது இப்படி காய்கறி வாங்குவதையும் காலை வாக்கிங்கையும் ஒன்றாய்ச் செய்வதாகச் சொன்னார். 50 ஆண்டுகளுக்கு முன் தமிழ், தெலுங்கு, மலையாள, கன்னடப் படங்கள் எல்லாமே சென்னையில்தான் எடுக்கப்பட்டன. எல்லா நடிகர்கள், இயக்குநர்களும் சென்னையில்தான் இருந்தனர். பின்னால் அவரவர் மாநிலங்களுக்குச் சென்றுவிட, ராஜ்குமார் மட்டும் வெகுநாள் சென்னையிலேயே தங்கியிருந்தார்.

 நான் கன்னடத்தில் நடித்து தேசிய விருது பெற்ற படத்தின் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த காலத்தில் சென்னையில் ஒரு சங்கீதக் கச்சேரிக்கு தெலுங்கு நடிகர் கொல்லப்புடி மாருதி ராவுடன் சென்றேன். நாங்கள் உட்கார்ந்த வரிசையில் ராஜ்குமாரும், அவருடைய இயக்குநர் ஒருவரும் வந்து உட்கார்ந்தார்கள். அருகில் போய் அவரிடம் பேசிவிட்டு, ‘‘இவர் தெலுங்கு நடிகர் கொல்லப்புடி மாருதி ராவ்’’ என்று நண்பரை அறிமுகம் செய்தேன். ராஜ்குமார் பதிலுக்கு, கூட வந்த இயக்குநர் பெயரைச் சொல்லி எங்களுக்கு அறிமுகம் செய்தார்.

 அந்த இயக்குனர் என்னிடம் கேட்டார்- ‘‘கன்னடப் படம் ஒன்றில் நடிப்பதாக உங்கள் பெயரை ஒரு பத்திரிகையில் படித்தேனே?’’இதற்கு நான்தான் பதில் சொல்லியிருக்க வேண்டும். அதற்கு முன்னே ராஜ்குமார் ஆரம்பித்துவிட்டார். ‘‘அந்தப் படத்தின் பெயர் ‘தபரானா கதே’. ஒரு வெற்றிகரமான நாடகம். இயக்குநர் கிரீஷ் காசரவல்லி! அவர் ஏற்கெனவே ‘கட்டஷ்ரத்தா’ என்ற படத்துக்கு தேசிய விருது பெற்றவர். பல வருடங்களுக்குப் பிறகு இப்போது படம் செய்கிறார்!” எனத் தகவல்களைக் கொட்டினார்.

இங்கே மக்கள் திலகம்தான் எல்லோரையும் பற்றி இப்படித் தெரிந்து வைத்திருப்பார். அவரை விட்டால் ராஜ்குமார்தான். அது பள்ளி அல்லது கல்லூரி அறிவல்ல... தானாகவே வளர்த்துக் கொண்ட சுய அறிவு. கர்நாடகாவில் அவருக்கு இருந்த ரசிகர்களுக்கும், அவரை ஆராதித்த மக்களின் அன்புக்கும் ராஜ்குமார் முயன்றிருந்தால் அரசியலில் கூட வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால், தவிர்த்து விட்டார்.

அவரைப் பார்த்து நான் கற்றுக்கொண்டது... கூடியவரை  உண்மை மட்டும் பேசுவது என்பதுதான்!அவருக்கு இருந்த ரசிகர்களுக்கும், அவரை ஆராதித்த மக்களின் அன்புக்கும் ராஜ்குமார் முயன்றிருந்தால் அரசியலில் கூட வெற்றி பெற்றிருக்கலாம்.

(நீளும்...)

சாருஹாசன்
ஓவியங்கள்:: மனோகர்