கவனிப்பு



பி.மாணிக்கவாசகம்

சென்னையில் ஒரு ஹை க்ளாஸ் அபார்ட்மென்டில் குடியிருக்கும் மகன் வீட்டுக்கு கிராமத்திலிருந்து வந்திருந்தார் மாணிக்கம். ஐந்து வயது பேரன்... அவனைப் பார்த்துக்கொள்ள வீட்டில் ஆள் இல்லாததால்தான் அவர் அழைக்கப்பட்டிருந்தார். இத்தனை காலம் ஒதுங்கியிருந்தவர்கள் ஒட்டிக்கொள்ளும் ரகசியம் அவருக்கும் தெரியாமல் இல்லை.

ரத்த பாசம். ‘தாத்தா... தாத்தா...’ என ஒரேயடியாய் அவரிடம் பாசம் கொட்டினான் பேரன். மாணிக்கமும் பேரனை நன்றாக கவனித்துக்கொண்டார். இதிலெல்லாம்கூட யாருக்கும் ஆச்சரியமில்லை. மருமகள் மாணிக்கத்தை அக்கறையாய் கவனித்துக்கொண்டதில்தான் அக்கம்பக்கத்தில் எல்லோருக்கும் இன்ப வியப்பு. சும்மா ஒரு தும்மல், ஒரு இருமல் போட்டுவிட்டால் போதும்... பதறியபடியே ‘‘இந்தாங்க மாமா மாத்திரை!’’ என்பாள்.

அதற்கும் அடங்காதபோது, ‘‘கிளம்புங்க... முதல்ல டாக்டரைப் பார்த்துட்டு வந்துடலாம்!’’ என வம்படியாக இழுத்துப் போவாள். ‘‘அடடா, தங்கமான மருமகள். இவளைப் போய் நாம் தவறாக நினைத்தோமே!’’ என மாணிக்கமே அசந்து போனார்.

வீட்டு வேலைக்காரி ஒரு நாள் வாய்விட்டே சொன்னாள்... ‘‘நானும் ஊர்ல எவ்வளவோ மருமகள்களைப் பார்த்திருக்கேன். மாமனாரை இப்படி கவனிக்கறது நீங்கதாம்மா!’’‘‘என்ன பண்றது? நம்மளைவிட அவருதானே பேரன் கூட அதிகமா பழகுறார். அவருக்கு சளி, காய்ச்சல்னு ஏதாச்சும் வந்தா, அது அவனுக்கும் தொத்திக்குமே! அதான் எச்சரிக்கையா இருக்கேன்’’ என்றாள் அந்த அன்பு மருமகள்.