தாடி வைத்த லேடி!



விநோத ரஸ மஞ்சரி!

‘‘நான் ஆம்பிளை மாதிரி!’’ எனப் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள் பெண்கள் சிலர். ஆனால், நிஜமாகவே ஆண் போல தாடியும் மீசையும் பெண்ணுக்கு முளைத்தால் அது எத்தனை பெரிய துயரம்?

அப்படியொரு துயரத்தை வென்றிருப்பவர்தான் ஹர்நாம் கவுர். லண்டனில் வசிக்கும் சீக்கியப் பெண்ணான கவுருக்கு 24 வயதுதான் ஆகிறது. உடலமைப்பை வைத்துத்தான் இவர் பெண் எனக் கண்டுபிடிக்க முடியும். தாடியும் மீசையுமாக ஹர்பஜன் டைப் ஆண் முகம் இவருக்கு!‘‘பதினோரு வயதில் எனக்கு லேசாக தாடி முளைக்க ஆரம்பித்தது.

 `Poly Cystic Ovary Syndrome’ எனும் ஹார்மோன் பிரச்னை என்று தெரியவந்தது. முகம் மட்டுமல்ல, ஆண்கள் போல மார்பு, கை, கால்கள் எங்கும் ரோமங்கள் கட்டுக்கடங்காமல் முளைத்தன. மோசமான மன நெருக்கடி அது. வாரம் இரண்டு முறை ஷேவ் செய்வேன். முடி உதிர வைக்கும் க்ரீம்களைப் பயன்படுத்துவேன்.

ஃபேஷியல் செய்வேன். எதுவும் பலன் தரவில்லை. சுற்றியிருப்பவர்களின் கிண்டலால் தற்கொலை எண்ணம் கூட வந்தது!’’ என்கிற கவுர், அந்தத் தவறான முடிவை எடுக்கவில்லை. மாறாக, ‘தாடி மீசைதானே... வளரட்டுமே. சிரிப்பவர்கள் சிரிக்கட்டுமே!’ எனும் டேக் இட் ஈஸி மனநிலைக்கு வந்துவிட்டார்.

தனது சீக்கிய மத விதிகளின்படி, ரோமங்கள் எதையும் வெட்டவோ மழிக்கவோ கூடாது என முடிவெடுத்துவிட்டார் கவுர். தற்போது சீக்கியப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாகப் பணிபுரிகிற கவுர், ‘நான் இப்படித்தான்’ எனப் பெருமையாக தாடி, மீசையோடு போஸ் கொடுக்கிறார். இது போன்ற பிரச்னையுள்ள பெண்களுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் கொடுக்கிறது கவுரின் இந்தத் தோற்றம். யூ-டியூப்பில் தன்னுடைய கதையை இவர் வீடியோவாகப் பதிவு செய்ய, அதற்கு லைக்ஸ் குவிந்திருக்கிறது.

‘‘இப்போதெல்லாம் மக்கள் என்னைப் பார்த்து குழம்புவதும் மிரளுவதும் எனக்குக் காமெடியாகிவிட்டன. ஆரம்பத்தில் பட்ட வேதனைகள் எல்லாம் இன்று மறைந்துவிட்டன. ஐ’யாம் ஹேப்பி!’’ என்கிறார் கவுர் உற்சாகமாக!

- ரெமோ