எமனாகுமா ஏ.டி.எம்?ஷாக் நிஜங்கள்!

‘உங்க அக்கவுன்ட்டில் சல்லிப் பைசா இல்லை’ என ஏ.டி.எம் சொல்லும்போது நமக்கு ஷாக் அடிக்கலாம். ஆனால், ஏ.டி.எம் மெஷினைத் தொட்டதுமே ஷாக் அடிக்கிறதென்றால் அது கொஞ்சம் சீரியஸ் பிரச்னை.

அலகாபாத்திலுள்ள ஒரு ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுக்கச் சென்ற ஆசிரியர் பிரிஜேஷ் குமார் என்பவர் மின்சாரம் தாக்கி இறந்த செய்தி இப்போது மிடில் கிளாஸ் மத்தியில் பற்றி எரிகிறது. ஏ.டி.எம் மையங்கள் அவ்வளவுக்கு ஆபத்தானவையா? சென்னையில் மின்சாதனப் பொருட்கள் தொடர்பான பயிற்சிகளைக் கொடுக்கும் ஐ.எல்.எஸ் நிறுவனத்தின் பயிற்சியாளர்களில் ஒருவரான வேலாயுதத்திடம் பேசினோம்...

 ‘‘இது போல் கடந்த வருடத்திலேயே டெல்லியில் உள்ள ஒரு ஏ.டி.எம் மையத்துக்குச் சென்ற ஒருவர், அதன் கதவைத் திறந்தபோதே மின்சாரம் பாய்ந்து இறந்திருக்கிறார். இதுபோன்ற செய்திகளைப் படித்தால், ஏதோ ஏ.டி.எம் இயந்திரத்தில் ஹை வோல்டேஜ் மின்சாரம் பாய்வது போன்ற ஒரு நினைப்பு பலருக்கு வரலாம். உண்மையில் நம் வீட்டில் உள்ள டி.வி., கம்ப்யூட்டர் போன்றவற்றில் என்ன அளவு மின்சாரம் வருமோ, அதே அளவுதான் ஒரு ஏ.டி.எம் இயந்திரத்திலும் வரும்.

எல்லா மின்னணு இயந்திரங்களிலும் நேரடியாக வரும் மின்சாரம், ஒரு சிறிய டிரான்ஸ்ஃபார்மரால் 450 வாட் டி.சி மின்சாரமாக மாற்றப்பட்டுவிடும். இந்த மின்சாரம் நேரடியாகப் பாய்ந்தாலும் கூட யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை அந்த டிரான்ஸ்ஃபார்மர் பழுதாகி, முழுமையான ஹை வோல்ட் மின்சாரம் ஏ.டி.எம்மில் வந்தால் கூட அதனால் முதலில் பாதிக்கப்படப் போவது அந்த இயந்திரத்தினுள் இருக்கும் மற்ற பாகங்களே. சர்க்யூட் போர்டில் இருக்கும் கெபாசிட்டரோ, ரெசிஸ்டரோ எரிந்து புகை வந்துவிடும். அதன்பின் அந்த இயந்திரம் இயங்காது. இந்த இயல்புக்கு மாறாக, ஒரு மனிதரே சாகும் அளவுக்கு மின்சாரம் பாய்கிறதென்றால், அதற்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.

இயந்திரத்தின் உள்ளே நேரடியாக ஹை வோல்டேஜ் மின்சாரத்தைக் கொண்டு செல்லும் வயர்களை எலி கடித்து, அது மெஷினின் பாடியைத் தொட்டுக்கொண்டிருந்தால் இப்படி நடக்க வாய்ப்புள்ளது. பொதுவாக நம் ஊரில் ஏ.டி.எம் மெஷின் என்றால் ‘அதில் பணம் இருக்கிறதா... மெஷின் அதைச் சரியாக எண்ணிக் கொடுக்கிறதா’ என்று மட்டும்தான் பார்க்கிறார்கள். ஏ.டி.எம் இயந்திரங்களை நிர்வகிக்கும் நிறுவனங்கள் அந்த மெஷினின் பவர் சப்ளை, அந்த அறையின் பவர் சப்ளை, ஏ.சி உள்ளிட்ட மற்ற உபகரணங்கள் போன்றவற்றையும் பரிசோதிக்க வேண்டும்.

இதை ஏன் சொல்கிறோம் என்றால், கடந்த ஆண்டு டெல்லி ஏ.டி.எம்.மில் நிகழ்ந்த மரணத்துக்குக் காரணம் ஏ.டி.எம் இயந்திரமல்ல. அந்த மையத்தின் ஏ.சி மின்சார இணைப்பு அறுந்து கதவின் மீது சிக்கிக்கொண்டு நின்றதுதான் அவர் உயிர் போகக் காரணம்! இப்போது இந்த அலகாபாத் சம்பவத்தைப் பற்றியும் போலீசார் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். இறந்து போன அந்த நபர் ஏ.டி.எம் மையத்துக்குச் சென்றபோது ஈர உடையுடன் இருந்திருக்கிறார்.

மின்னணுக் கருவிகள் எதையுமே ஈரக் கைகளோடு தொடாதிருப்பது எப்போதுமே நல்லது. இதை எல்லோருமே மனதில் கொள்ள வேண்டும். ஆனால், இந்தச் சம்பவத்தில் இது மட்டுமே பிரச்னை அல்ல. அது ஒரு பழைய கட்டிடம்... எனவே, ஒட்டுமொத்த வயரிங் மீதுமே நாம் சந்தேகப்படலாம். இயந்திரத்திலும் கோளாறுகள் இருந்திருக்கலாம்.

இந்தியாவில் இருக்கும் ஏ.டி.எம் இயந்திரங்கள் எல்லாமே ஒரே தயாரிப்பு இல்லை. பல தனியார் நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அவற்றின் தரத்தை யார் நிர்ணயிக்கிறார்கள், சரி பார்க்கிறார்கள் என்பது தெரியவில்லை. தரமில்லாத ஏ.டி.எம் இயந்திரங்களாலும் இம்மாதிரியான பிரச்னைகள் அதிகம் ஏற்படலாம்.

தரமான ஏ.டி.எம் மெஷின் தயாரிக்கப்படுவதை உறுதி செய்வதோடு, பராமரிப்பு விஷயத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். இதன்மூலமே இதுபோன்ற சோக சம்பவங்களைத் தடுக்கலாம்!’’  என்றார் அவர்.ஏ.டி.எம் மெஷின் என்றால் ‘அதில் பணம் இருக்கிறதா... மெஷின் அதைச் சரியாக எண்ணிக் கொடுக்கிறதா’ என்று மட்டும்தான் பார்க்கிறார்கள்.

 - டி.ரஞ்சித்
படம்: ஏ.டி.தமிழ்வாணன்