நம்பர் மாறாது... ரோமிங் வாராது!



வந்தாச்சு நம்பர் போர்ட்டபிலிட்டி!

இதோ அதோ எனப் போக்குக் காட்டிய மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வசதி, ஜூலை ஆரம்பம் முதல் அமலுக்கு வந்துவிட்டது. ‘இது வந்துவிட்டால் இந்தியா முழுக்க ஒரே நம்பர்... ஒரே கட்டணம்... ஜஸ்ட் லைக் தட் ஆபரேட்டரை மாற்றலாம், ஆனால் நம்பர் மாற்ற வேண்டியதில்லை...’ என எக்கச்சக்க பில்டப். அதெல்லாம் உண்மையா? இந்தியத் தொலைத்தொடர்பு வரலாற்றில் இது முக்கியமான மைல் கல்லா? சென்னையைச் சேர்ந்த சைபர் சட்ட ஆலோசகரான ராஜேந்திரன் தெளிவுபடுத்துகிறார்.

 நம்பர் போர்ட்டபிலிட்டி என்றால் என்ன? ‘மொபைல் ஆபரேட்டரை மாற்ற வேண்டுமென்றால் நமது செல்போன் நம்பரையும் மாற்ற வேண்டும் என்ற கட்டாயம் சில வருடங்களுக்கு முன்பு வரை இருந்தது. அதை மாற்றி சர்வீஸ் மாறினாலும் நம்பர் மாறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி என்ற வசதி கொண்டு வரப்பட்டது.

 இது இப்போதும் நடைமுறையில் இருந்தாலும் ஒருசில மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள் இதற்கு முழுமையாக ஒத்துழைப்பதில்லை. இந்நிலையை மாற்றி கெடுபிடி கொடுக்கும் முழுமையான நம்பர் போர்ட்டபிலிட்டிதான் இப்போது வந்திருப்பது.

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ட்ராய் அமைப்பு, இதற்காக மொபைல் சர்வீஸ் நிறுவனங்களுக்கு மே 3ம் தேதியைக் கெடுவாக விதித்திருந்தது. சாஃப்ட்வேர் அப்டேஷன் போன்ற பிரச்னைகளைக் காரணம் காட்டி 2 மாத அவகாசம் கேட்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத்தான் இப்போது வந்து சேர்ந்திருக்கிறது MNP எனச் செல்லமாக அழைக்கப்படும் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி!’’
ரோமிங் இல்லை...

‘‘இதுநாள் வரையில் இருந்த நிலைமைப்படி, சென்னையில் செல்போன் இணைப்பு வாங்கி வைத்திருக்கும் ஒரு நபர், திடீரென பெங்களூருவில் போய் செட்டில் ஆகிறார் என்றால், அவர் தன் மொபைல் நம்பரை மாற்றியாக வேண்டும். இல்லாவிட்டால் வருகிற ஒவ்வொரு காலுக்கும் ரோமிங் கட்டணம் தீட்டுவார்கள். காரணம், சென்னை என்றால் நம்பர் இப்படி ஆரம்பிக்கும்...

பெங்களூருவில் இப்படி ஆரம்பிக்கும் என மொபைல் நம்பர் வரிசையையே ஏரியாவுக்கு ஏரியா பிரித்து வைத்திருந்தார்கள் மொபைல் ஆபரேட்டர்கள். மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி வந்தால், இந்தக் கதையே கிடையாது. இந்தியா முழுக்க எங்கு சென்றாலும் அதே மொபைல் நம்பரை நீங்கள் ரோமிங் இல்லாமல் பயன்படுத்தலாம். இதனால் ரோமிங் கட்டணம் என்ற வார்த்தையே காலாவதியாகிப் போகும்!’’
எவ்வளவு எளிது?

‘‘டவர் எடுக்கவில்லை, சர்வீஸ் சரியில்லை, பில் கட்டணம் அநியாயம் என ஏதோ ஒரு காரணத்துக்காக உங்களுக்கு உங்கள் மொபைல் ஆபரேட்டரை பிடிக்கவில்லை என்றால் பேச்சே தேவையில்லை. உங்கள் போனில் இருந்து PORT என எஸ்.எம்.எஸ் டைப் செய்து 1900 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். உடனடியாக Unique Porting Code (UPC) எனப்படும் எட்டு இலக்க எண் ஒன்று உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அடுத்து உங்களுக்குப் பிடித்த மொபைல் ஆபரேட்டரின் நேரடி ஷோரூமுக்கு சென்று 19 ரூபாய் கொடுத்து ஒரு ஃபார்ம் வாங்கி அதில் இந்த UPC எண்ணையும் உங்கள் தனிப்பட்ட விபரங்களையும் ஃபில் அப் செய்து கொடுத்தால் புதிய சிம் கார்டு கொடுப்பார்கள். அந்த சிம் கார்டு மூலம் நீங்கள் பழைய எண்ணிலேயே புதிய நெட்வொர்க்கை அனுபவிக்கலாம்!’’
இதனால் என்ன நன்மை?

‘‘செல்போன் இணைப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு, ‘நம்ம கஸ்டமர்... நம்மை விட்டு எங்கே போகப் போகிறார்’ என்ற மெத்தனம் குறையும். கொஞ்சம் பிசகினாலும் வாடிக்கையாளர் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிவிடுவார் என்பதால் சர்வீஸ் தரம் உயரும். போட்டி காரணமாக கால் சார்ஜ்கள் குறையவும் வாய்ப்புள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் 22 டெலிகாம் சர்க்கிள்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இனி, நாடு முழுவதும் ஒரே சர்க்கிள் என்பதால் ரோமிங் கட்டணம் இல்லை.” இப்போதைய நிலை...

‘‘இந்தியா முழுவதும் ஒரே சர்க்கிள் என்ற வசதியைத் தருவதற்காக மொபைல் நிறுவனங்கள் வாடிக்கையாளரிடம் ஒருமுறைக் கட்டணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்கலாம் என நினைத்திருக்கின்றன. ஒவ்வொரு நிறுவனமும் இந்த ஒன் டைம் சார்ஜை எவ்வளவு விதிக்கும் என்பது தெரியவில்லை.

மேற்படி மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டிக்காக ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. அவை அத்தனையும் வெற்றிகரமாக நெட்வொர்க் மாற்றப்பட்டு தரப்பட்டால்தான் முழுமையான மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டி நடைமுறைக்கு வந்ததாகச் சொல்ல முடியும். நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் இது ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மாற்றம்தான்!’’

இதனால் சர்வீஸ் தரம் உயரும். போட்டி காரணமாக கால் சார்ஜ்கள் குறையவும் வாய்ப்புள்ளது

- டி.ரஞ்சித்
படங்கள்: புதூர் சரவணன், ஆர்.சி.எஸ்
மாடல்: தேவிகா