நான் பெண்ணாப் பிறந்ததுக்கு இப்பவும் வருத்தப்படுறீங்களாம்மா...“குடும்பத்தில ரெண்டாவது குழந்தையும் பெண்ணா பிறக்குறது சந்தோஷமான விஷயமில்லை. நான் ரெண்டாவதா பிறந்த பெண். வெளியே காட்டிக்கலைன்னாலும் எங்க அம்மா மனசுக்குள்ள அந்த வருத்தம் அலைபாஞ்சுக்கிட்டு இருக்குங்கிறது எனக்குத் தெரியும். ஏதாவது செஞ்சு அம்மாவை சந்தோஷப்படுத்தணும், பெருமைப்பட வைக்கணும்னு ஒரு ஆசை சின்ன வயசுல இருந்தே எனக்கு உண்டு.

சிவில் சர்வீஸ் ரிசல்ட் வந்தவுடனே அம்மாகிட்ட கேட்டேன்... ‘நான் பெண்ணா பிறந்ததுக்கு இப்பவும் வருத்தப்படுறீங்களாம்மா...’னு. அவங்க கண்கள் கலங்கிடுச்சு!” - நெகிழ்ந்து பேசுகிறார் வான்மதி. சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வான்மதிக்கு இந்த சிவில் சர்வீஸ் தேர்வில் கிடைத்திருப்பது 152வது இடம். பள்ளிப்படிப்பைத் தாண்டாத விளிம்புக் குடும்பம் இவருடையது.

“நான் சத்தியமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி. அப்பா சென்னியப்பன் கார் டிரைவர். அம்மா சுப்புலெட்சுமி விவசாயத் தொழிலாளர். எட்டாவது படிச்சுக்கிட்டிருந்தப்போ, கலெக்டரா இருந்த உதயசந்திரன் சார் எங்க பள்ளிக்கு வந்திருந்தார். அவருக்குக் கிடைச்ச முக்கியத்துவம், மரியாதையைப் பார்த்தப்போதான் ஐ.ஏ.எஸ் ஆசை மனசுக்குள்ள துளிர் விட்டுச்சு. ஆனாலும், அதை லட்சியமா வச்சிக்கிற சூழல் குடும்பத்தில இல்லை. ஆண்பிள்ளையா இருந்தாத்தான், ‘நல்லா படிக்க வச்சிடணும்’னு பெத்தவங்க நினைப்பாங்க. பெண் பிள்ளைன்னா ‘படிப்புக்குச் செய்யிற செலவுல கல்யாணத்தை முடிச்சிடலாமே!’ங்கிறதுதான் இங்கே இலக்கு.

என் அக்காவுக்கு 21 வயசுல கல்யாணம் முடிஞ்சிடுச்சு. ஆனா, நான் நிறைய படிக்கணும்னு ஆசைப்பட்டேன். அப்பா கடும் உழைப்பாளி. காலையில கிளம்புனா நாங்கல்லாம் உறங்கின பிறகுதான் வீட்டுக்கு வருவார். அம்மாவும் அப்படித்தான். வீட்டுல கொஞ்சம் மாடுகள் இருந்துச்சு. பால் விற்பனை செஞ்சு  அப்பாவோட சுமையை கொஞ்சம் பகிர்ந்துக்குவாங்க. இப்படியொரு நிலையில, உயர்கல்வி பத்தியெல்லாம் யோசிக்கவே முடியலே. +2 ரிசல்ட் வந்தவுடனே அடுத்து என்னங்கிற கேள்வியோட நின்னேன். ‘நீ என்ன ஆசைப்படுறியோ அதைச் செய்... செலவைப் பத்தி கவலைப்பட்டு மனசைக் குழப்பிக்காதே’னு அப்பா சொன்னார். பண்ணாரியம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில பி.எஸ்சி., கம்ப்யூட்டர் டெக்னாலஜி சேந்தேன். கல்விக்கடன் பெரிய உதவியா இருந்துச்சு.

 கல்லூரி நூலகத்தில சைலேந்திரபாபு சார் எழுதிய நூல்கள் இருக்கும். அதையெல்லாம் பார்க்கிறப்போ திரும்பவும் மனசுக்குள்ள ஐ.ஏ.எஸ் கனவு ஊடுருவும்.
என் தோழி ஆர்த்தியோட அப்பா பாலசுப்பிரமணியன்தான் அந்தக் கனவை இன்னும் தீவிரமாக்கினவர். ‘இன்னைக்கு பணியில இருக்கிற நிறைய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், நம்மை மாதிரி குடும்பங்கள்ல இருந்து வந்தவங்கதான். உழைக்கிற மனமும், முடியும்ங்கிற எண்ணமும் இருந்தா, யோசிக்காம சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகு’னு அவர்தான் என்னைத் தூண்டினார். பி.எஸ்சி முடிச்சவுடனே, எம்.சி.ஏ, தொலைநிலைக்கல்வியில சேர்ந்தேன். கூடவே சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் தயாரானேன்.

தொடக்கத்துல, ‘இதெல்லாம் நம்ம குடும்பச் சூழ்நிலைக்கு சரியா வருமாம்மா’னு அம்மா பயந்தாங்க. ‘நிச்சயம் என்னால முடியும்’னு தைரியப்படுத்திட்டு பாரதியார் பல்கலைக்கழகத்துல செயல்பட்ட அண்ணா சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்துல சேந்தேன். ரிசர்வ் பேங்க்ல மேனேஜரா இருக்குற கல்பனானு ஒரு மேடம் அங்க பயிற்சியாளரா வந்திருந்தாங்க. ‘சென்னைக்கு வா... இன்னும் தீவிரமா தயாராகலாம். எல்லாத்தையும் நான் பாத்துக்கறேன்’னு அவங்கதான் நம்பிக்கை கொடுத்து கூட்டிட்டுப் போய் ‘சங்கர் ஐஏஎஸ் அகாடமி’ சங்கர் சாரையும் அறிமுகப்படுத்தி வச்சாங்க. அங்கேயே தங்கி பயிற்சி எடுத்துக்கிட்டேன்.

ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் பாக்யதேவி மேடம், விவேகானந்தன் சார், சைலேந்திரபாபு சாரெல்லாம் பல விதங்கள்ல எனக்கு உதவியா இருந்தாங்க. மூணு முறை தேர்வெழுதி இன்டர்வியூ லெவலுக்கு மட்டுமே போக முடிஞ்சுது. நான்காவது முறை, வெற்றி சாத்தியமாச்சு..!’’ - புன்னகை ததும்ப பேசுகிறார் வான்மதி. சிவில் சர்வீஸ் தேர்வு தயாரித்தல்களுக்கு இடையில், ஐ.பி.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று நம்பியூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் அதிகாரியாகப் பணியாற்றியும் வருகிறார் வான்மதி.

‘‘பெண்களுக்கு நம் சமூகத்துல நிறைய சவால்கள் இருக்கு. முன்னுக்கு வர நினைக்கிற பெண் அதையெல்லாம் தாண்டியாகணும். பிள்ளைகளை நம்புற, நம்பிக்கை கொடுக்கிற குடும்பமும், அக்கறையுள்ள நண்பர்களும், மத்தவங்களை வளர்த்துவிட நினைக்கிற நல்ல மனிதர்களும் வாய்க்கிறது வரம். அந்த வரம் எனக்குக் கிடைச்சிருக்கு...” - வான்மதியின் வார்த்தைகளில் அத்தனை நிதர்சனம்!

இந்தாண்டு சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் 1236 பேர். இதில் தமிழகத்தில் இருந்து மட்டும் 118 பேர் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். கோவையைச் சேர்ந்த சாரு அகில இந்திய அளவில் ஆறாம் இடம் பெற்றுள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ. முடித்துள்ள சாருக்கு முதல் முயற்சியில் சுங்கத்துறை பணி கிடைத்தது. பிறகு வனத்துறை தேர்வில் தேர்ச்சி பெற்று அதற்கான பயிற்சியில் இணைந்தவாறே மீண்டும் தேர்வெழுதி தற்போது சாதித்திருக்கிறார். சென்னை, மெர்சி ரம்யா 32வது இடத்தைப் பிடித்துள்ளார். பி.இ.கம்ப்யூட்டர் சயின்ஸ் முடித்துள்ள மெர்சிக்கு மூன்றாவது முயற்சி வெற்றி தேடித் தந்திருக்கிறது. தற்போது ரயில்வே துறையில் பணிபுரிகிறார்.

- வெ.நீலகண்டன்
படங்கள்: கனகராஜ்