நடக்க முடியாதபடி முடமாக்கும் டைட் ஜீன்ஸ்!பெண்கள், மனசுக்குப்பிடிக்கும் உடையை அணிந்தது அந்தக் காலம். உடம்பைப் பிடிக்கும் உடையைத்தான் அணிகிறார்கள் இன்று. அதன் உச்சபட்ச அலங்கோலம், டைட் ஜீன்ஸ்! ‘இதை எப்படி அணிவார்கள்; எப்படி இவர்களால் இதோடு இயங்க முடிகிறது’ என திகைக்க வைக்கும் அளவுக்கு இறுக்கம். சமீபத்தில் ஆஸ்திரேலியப் பெண்மணி ஒருவர் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்ததால் மரணத்தின் விளிம்பு வரை போய் வந்திருக்கிறார். அந்த 35 வயதுப் பெண்மணி டைட் ஜீன்ஸோடு அரை நாள் குனிந்து நிமிர்ந்து வீட்டு வேலை செய்திருக்கிறார்.

பாதங்கள் மரத்துப் போய், நடக்க முடியாமல் அப்படியே தரையில் விழுந்திருக்கிறார். அவரால் தானாக எழக்கூட முடியவில்லை. உறவினர்கள் வந்து பார்த்து மருத்துவமனையில் சேர்த்தனர். கால்கள் வீங்கிவிட்டதால் ஜீன்ஸை கத்தரித்தே அகற்றினர் டாக்டர்கள். கால்களில் உணர்வே இல்லாமல் முடங்கிப் போயிருந்த அவரால் நான்கு நாட்கள் கழித்தே எழுந்து நடக்க முடிந்தது. இத்தனை சீரியஸான விஷயமா உடை? நம்மூர் நிபுணர்கள் சிலரிடம் பேசினோம்.

‘‘உண்மைதான்... உடை விஷயத்தில் நாம் இறுக்கம் தளர்த்த வேண்டிய நேரம் இது!’’ எனத் துவங்கினார் சென்னை சிம்ஸ் மருத்துவமனையின் நரம்பியல் மருத்துவர்  தரன்.‘‘டைட்டான ஜீன்ஸ்தான் என்றில்லை. கால்களுக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்கும் எந்தப் பொருளும் ஆபத்துதான். இப்படிப்பட்ட இறுக்கமான உடைகள் கால்களுக்கு வரும் ரத்த ஓட்டத்தில் சீர்குலைவை ஏற்படுத்தும்.

இது, கால் தசைகளையும் நரம்பு முடிச்சுகளையும் பாதிக்கும். தொடர்ச்சியாக இப்படி நடக்கும்போது கால் வீக்கம் ஏற்படலாம். சில பகுதிகள் செயல்படாமல் மரத்துப் போகலாம். கால் வீக்கம் வந்தால் கால் வெடிப்பு, கால் குத்தல் போன்றவை ஏற்படலாம். தொடர்ச்சியாக இந்தப் பிரச்னை ஏற்படும்போது பாராலிசிஸ் போன்ற முடக்குவாதம் கூட ஏற்படலாம்.

அதற்காக எல்லா பெண்களுக்குமே டைட் ஜீன்ஸ் பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று சொல்ல முடியாது. டைட் ஜீன்ஸை எவ்வளவு காலத்துக்கு, எது போன்ற சூழ்நிலைகளில், எந்த விதமான உடல் உபாதைகளை வைத்துக்கொண்டு அணிகிறார்கள் என்பதையெல்லாம் பொறுத்தது இது. உடல் பருமன் உள்ளவர்களோ, சர்க்கரை நோயாளிகளோ இது போன்ற டைட் உடைகளை அணியும்போது அது உடலுக்கு - அதுவும் கால் பாகங்களுக்கு - பெரிய பிரச்னைகளைக் கொண்டுவரும்.

பெரிய பாதிப்புகளை விடுங்கள்... இறுக்கமான உடைகள் ஏற்படுத்துகிற சின்னச் சின்ன பாதிப்புகளை நம்மூரில் பலரும் சட்டை செய்வதே இல்லை. உதாரணத்துக்கு, நீண்ட நேரம் ஓரிடத்தில் நிற்கவோ அல்லது தரையில் உட்காரவோ முடியாத நிலைமை, நீண்ட நேரம் குனிந்து வேலை செய்ய முடியாத நிலை, சம்மணமிட்டு உட்காரவே முடியாத நிலை போன்றவை இருந்தால் நிச்சயம் நமது கால்களில் பாதிப்பு உள்ளது எனத் தெரிந்துகொள்ளலாம். இம்மாதிரி பாதிப்பு உள்ளவர்கள் டைட் ஜீன்ஸ் மட்டுமல்ல... எந்த உடையையும் இறுக்கமான ஃபிட்டிங்கில் அணிவதைத் தவிர்க்க வேண்டும்’’ என்றார் அவர்.

ஆனால், எதையும் டைட் ஃபிட்டாக அணிவதைத்தானே இப்போது ஃபேஷன் என்கிறார்கள். உடலுக்கு பாதிப்பு இல்லாமல் பெண்கள் ஃபேஷன் உடையணிவது எப்படி? சென்னையைச் சேர்ந்த ஃபேஷன் டிசைனர் தபஸ்சும்மிடம் இதைக் கேட்டோம்.

‘‘ஃபேஷன்களில் தவறு இல்லை. அதைக் கண்மூடித்தனமாகப் பின்பற்றும்போதுதான் பிரச்னை உண்டாகும். ஒருவருடைய தகுதி, தேவை, உடல், மனம்... இவற்றைப் பொறுத்து அவர் தனக்கான ஃபேஷனை அமைத்துக்கொள்வதில்தான் அழகு இருக்கிறது. இது இங்கே பெரும்பாலான பெண்களுக்குத் தெரிவதில்லை.

தங்களுக்கு அழகும் தராத ஆரோக்கியமும் தராத உடைகளை ஃபேஷனுக்காகத் தேர்ந்தெடுக்கிறார்கள். பெண்களின் உடல் அடிப்படையிலேயே சற்று மிருதுவானது என்பதால், உடை விஷயத்தில் செய்யும் சின்னத் தவறு கூட அதிக பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும். டைட் ஜீன்ஸ்தான் என்றில்லை... மிக மிக இறுக்கமான மேலாடைகளையும் உள்ளாடைகளையும் அணியும் பெண்களுக்கு கூட இது எச்சரிக்கை மணிதான்!’’ என்றவர், ஜீன்ஸ் உடையை எப்படித் தேர்வு செய்ய வேண்டும் என்பதை விளக்கினார்...

‘‘எல்லா ஜீன்ஸும் பெண்களுக்கு தீங்கு எனச் சொல்ல முடியாது. ஜீன்ஸ் துணியில் பல வகை உண்டு. அது தைக்கப்பட்ட ஸ்டைலிலும் பல வகை உண்டு. ஜீன்ஸ் துணி வகைகளில் எலாஸ்டிக் போல் இழுபடக்கூடிய ஸ்ட்ரெட்ச் வகை துணியைத் தேர்ந்தெடுக்கலாம். இதில் டைட் ஃபிட் அணிந்தாலும் அது உடலை பாதிக்காது.

வடிவத்தைப் பொறுத்தவரை ஏராளமான ஜீன்ஸ் வகைகள் சந்தையில் கிடைக்கின்றன. காலுடன் ஒட்டிக்கொள்ளக்கூடிய ‘நேரோ ஃபிட்டிங்’ எனும் ஜீன்ஸ்கள், கால் பகுதியில் சற்று அகன்றிருக்கும் பூட் கட் என நமக்குத் தேவையானது எதுவோ அதைத் தேர்ந்தெடுத்து அணியலாம். ஜீன்ஸ் என்பது வெகுநாட்கள் உழைக்கும் துணி. அழுக்கான சூழலுக்கும் கடுமையான உடலுழைப்புக்கும் ஏற்ற உடை.

அதனால்தான் வேலைக்குச் செல்லும் பெண்கள் மத்தியில் இன்று ஜீன்ஸ் பிரபலமாக இருக்கிறது. இப்படிப் பயன்பாடு சார்ந்து யோசிக்காமல், ‘நான் ஒல்லியாக இருக்கிறேன்... பர்ஃபெக்ட் ஷேப்புடன் இருக்கிறேன்’ எனக் காட்டிக் கொள்வதற்காக டைட் ஜீன்ஸ் அணிந்தால், நிச்சயம் அது தீங்கானதுதான்!’’ என எச்சரிக்கையோடு முடித்தார் அவர்.எங்கே..? உடை என்பது அழகுக்காகவா, இல்லை வேலை செய்யும் வசதிக்காகவா என்பதில் இன்னும் நம் பெண்கள் ஒரு முடிவுக்கு வரவே இல்லையே!

பெண்களின்
உடல் அடிப்படை
யிலேயே சற்று
மிருதுவானது
என்பதால்,
உடை விஷயத்தில்
செய்யும் சின்னத் தவறு கூட
அதிக பாதிப்பை
ஏற்படுத்தத்தான்
செய்யும்.

- டி.ரஞ்சித்