கிச்சன் to கிளினிக்



மூளையின் இயல்பை மாற்றும் பூச்சிக்கொல்லிகள்

நவீன உணவுகள் ரசாயனக் கலப்படத்தால் நஞ்சாக மாறுகின்றன. அதே போல, இயற்கையான காய்கறிகள், பழங்கள் உட்பட ஆரோக்கியமான உணவுப்பொருட்கள் பலவும் விளைவிக்கப்படும்போதே ரசாயனப் பயன்பாட்டால் நஞ்சாக மாற்றப்படுகின்றன. மண்ணில் டன் டன்னாகக் கொட்டப்படும் உரங்கள், பூச்சிக்கொல்லிகள் ஆகியவை உணவுப்பொருட்களின் வழியாக மனித உடலிற்குள் புகுந்து பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

 நேரடியாக உடல் செல்களை அழிக்கக் கூடிய ரசாயனங்கள் முதல், படிப்படியாக பாதிப்பை ஏற்படுத்தும் வேதியியல் பொருட்கள் வரை விதம் விதமான நஞ்சுகளை நவீன வேளாண்மை நமக்கு வழங்கி வருகிறது.ஜப்பானில் அணுகுண்டு வீசி அழிக்கப்பட்ட ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அதன் கொடூர பாதிப்புகள் எப்படி இப்போது வரை தொடர்கிறதோ, அதே போல புதிதாகப் பிறக்கும் குழந்தைகள் வரை உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தும் இடமாக எண்டோசல்ஃபான் பயன்படுத்தப்பட்ட கேரளாவின் காசர்கோடு பகுதியும் காணப்படுகிறது.

அதற்குமுன்புவரை உலகிலேயே எண்டோசல்ஃபானை அதிகம் தயாரிக்கும், ஏற்றுமதி செய்யும் மற்றும் பயன்படுத்தும் தேசமாக இந்தியா இருந்தது. கேரள தோட்டப்பயிர்க் கழகத்துக்கு காசர்கோடு பகுதியில் 4600 ஹெக்டேர் முந்திரித்தோப்பு இருக்கிறது. இந்த முந்திரி மரங்களுக்கு ஆண்டுக்கு மூன்று முறை எண்டோசல்ஃபான் தெளிப்பார்கள். இப்படி தொடர்ச்சியாக 26 ஆண்டுகள் எண்டோசல்ஃபான் பயன்படுத்தினர்.

இதன் விளைவாக அருகில் இருக்கும் 12 கிராம மக்களுக்கு கடுமையான உடல்நல மற்றும் மனநல பாதிப்புகள் ஏற்பட்டன. இதய நோய், தோல் நோய்கள், நரம்புக் கோளாறுகள், குழந்தைகள் பிறவிக் குறைபாட்டோடு பிறப்பது என அதிர்ச்சி தரும் விளைவுகள் ஏற்பட்டதும் மக்கள் விழித்துக்கொண்டனர்.

‘உலகின் மிக மோசமான பூச்சிக்கொல்லி மருந்து துயரம்’ என காசர்கோடு வர்ணிக்கப்படுகிறது. இந்தக் கொடூர விளைவுகளைப் பார்த்து அதிர்ந்து கேரள அரசு 2001ம் ஆண்டு எண்டோசல்ஃபானை தடை செய்துவிட்டது. ஆனால் மத்திய அரசு அமைதியாக இருந்தது.

இந்தத் துயரம் நிகழ்ந்து பத்து ஆண்டுகள் கழித்து ஸ்டாக்ஹோம் மாநாட்டில் ‘உலகெங்கும் எண்டோசல்ஃபானை தடை செய்ய வேண்டும்’ என தீர்மானம் நிறைவேற்ற முயன்றபோது இந்தியா அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எண்டோசல்ஃபான் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிப்பாளர்கள் பக்கம் நின்றது. அதைத் தொடர்ந்து இங்கு நிகழ்ந்த போராட்டங்களும் நீதிமன்றத் தலையீடுமே எண்டோசல்ஃபானை தடை செய்ய வைத்தது.     

ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் உடல்நலத்தை சீர்கெடுப்பதை உலகம் முழுவதும் உள்ள அரசுகள் ஒப்புக் கொண்டுள்ளன. அதனால்தான் ஒவ்வொரு ரசாயனப் பொருளையும் எந்த அளவு பயன்படுத்த வேண்டும் என்ற கட்டுப்பாட்டையும் விதித்துள்ளன. இந்தக் கட்டுப்பாடுகள் எப்போதும் போல காற்றில் பறக்க விடப்படுகின்றன. நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் பெரும்பாலான விவசாயிகள் ரசாயனங்களைப் பயன்படுத்துவதில்லை. அதிகமாகவே பயன்படுத்துகின்றனர். ‘பக்கத்து வயலைவிட அதிகமாக பூச்சிக்கொல்லி அடித்தால்தான் அங்கிருந்து பூச்சிகள் நம் வயலுக்கு வராது’ என நினைக்கும் விவசாயிகள் இங்கு ஏராளம்.

முன்புபோல இங்கு விவசாயிக்கும் விளைச்சலுக்குமான உறவு இப்போது இல்லை. தாங்கள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருளை பெரும்பாலான விவசாயிகள் சாப்பிடுவதில்லை. சந்தைக்கான உற்பத்தியை மட்டும்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். உணவுப் பொருட்களில் பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலை பாதிப்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்.

உணவை ஜீரணித்து விதம்விதமான சத்துக்களாக மாற்றுகின்ற வேலை நம் சிறுகுடலில் நடைபெறுகிறது. வைட்டமின்கள், புரதங்கள், மினரல்கள் போன்ற பலவகையான உயிர்ப்பொருட்கள் சிறுகுடலில் உற்பத்தியாகின்றன. உணவுப்பொருட்களில் கலந்திருக்கும் ரசாயனங்கள், உணவிலிருந்து பெறப்படும் மெக்னீசியம், செலினியம் போன்ற நுண்ணிய மினரல்களைப் பிரித்தெடுப்பதைத் தடைசெய்கின்றன.

இந்த மினரல்கள்தான் உணவை சத்துக்களாக மாற்றுவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இப்படியான மைக்ரோ மினரல்கள் கிடைக்காதபோது, நாம் சாப்பிட்ட உணவு சத்தாக மாறுவதற்குப் பதிலாக, கொழுப்பாகவே தங்கி விடுகிறது. உடல் முழுவதும் கழிவுகள் தேங்குவதற்கான அடிப்படைக் காரணங்களில் ஒன்று, இந்த ரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும்.

அதே போல குடலுக்கு இன்னொரு முக்கியமான வேலையும் உண்டு. மூளை இயல்பாக இயங்குவதற்கு நியூரோட்ரான்மீட்டர் என்ற பொருள் அவசியம். இந்த நியூரோட்ரான்மீட்டர்களை உற்பத்தி செய்வதில் நம் சிறுகுடல் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. ரசாயன உணவுகள் சிறுகுடலின் இயக்கத்தை பாதிக்கும்போது, அதன் நியூரோட்ரான்மீட்டர் உற்பத்தியும் பாதிக்கப்படுகிறது. மூளையின் இயல்பே மாறி விடும் ஆபத்தும் ரசாயனப் பயன்பாட்டால் ஏற்படக்கூடும்.

உலக அளவில் தடை செய்யப்பட்ட பலவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகளை நாம் இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எண்டோசல்ஃபானை விட மோசமான விஷங்களை நம் உணவுகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டில் சுமார் பத்து சதவீத நிலங்களில்கூட ரசாயனப் பயன்பாடு இல்லாத இயற்கை வழி வேளாண்மை பின்பற்றப்படுவதில்லை. மீதமுள்ள பல லட்சம் ஏக்கர்களில் ரசாயன உரங்களை மண்ணில் கொட்டித்தான் உணவுகளையும், நோய்களையும் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம்.

உடல்நலம் மட்டுமல்ல; மன நலமும் ரசாயன உரங்களால் பாதிக்கப்படுகிறது. ரசாயன உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்ற பொருட்களை விவசாயத்தில் பயன்படுத்துவதற்கு எதிராக, நம் பாரம்பரிய முறை வேளாண்மைக்கு திரும்ப வேண்டும் என்ற குரல் இப்போது உலகம் முழுவதும் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. இயற்கை வழி வேளாண்மை ஜப்பானில் மசானபு ஃபுகாகோவால் பரவியது. ஜப்பானிலிருந்து துவங்கிய மாற்றம் உலகம் முழுவதும் பல நபர்களை இயற்கை வேளாண்மைக்குள் இறக்கி விட்டது.

தென் மாநிலங்களில் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், பாமயன் போன்ற பலரும் இயற்கை வழி வேளாண்மையின் அவசியத்தை வலியுறுத்தத் துவங்கினார்கள்.சமீபத்தில் கேரளாவில் வெளியான ஒரு திரைப்படம், உணவு ரசாயனங்களைப் பற்றிய நினைவை பலருக்கும் எழுப்பியது. ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ?’ என்ற அந்தப் படம்தான் ‘36 வயதினிலே’ என்று தமிழிலும் வெளியானது. தமிழ்நாட்டில் இது தாக்கத்தை ஏற்படுத்தியதோ இல்லையோ, கேரளாவில் ரசாயனப் பயன்பாடுகள் பற்றிய பெரும் கேள்விகளை எழுப்பிக்கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் இருந்து காய்கறிகளை வாங்குவதற்குப் பதிலாக கேரளாவிலேயே மாடித்தோட்டங்கள் மூலமும், ஊடுபயிர்கள் மூலமும் தாங்களே உற்பத்தி செய்யும் திட்டங்களைத் துவங்கி விட்டார்கள் கேரள மக்கள்.பல ஆண்டுகளாகவே சிக்கிம் மாநிலம் நிலத்தில் ரசாயனப் பயன்பாட்டிற்கு தடை விதித்திருக்கிறது.

வெறும் கரும்பை மட்டும் நம்பியிருந்த உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படுகிற கியூபா, இன்று தனக்குத் தேவையான எல்லாவிதமான காய்கறிகளையும் தானே உற்பத்தி செய்துகொள்கிறது. அதுவும் ரசாயனங்கள் எதுவும் பயன்படுத்தாத இயற்கை வழி வேளாண்மையில். இது எப்படி சாத்தியமாகிறது? வாருங்கள்... கொஞ்சம் கியூபாவின் கதை கேட்போம்.

உலக அளவில் தடை செய்யப்பட்ட பலவிதமான பூச்சிக்கொல்லி மருந்துகளை நாம்  இன்னமும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். எண்டோசல்ஃபானை விட மோசமான  விஷங்களை நம் உணவுகளுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

(தொடர்ந்து பேசுவோம்...)
படங்கள்: புதூர் சரவணன்
மாடல்: வர்ஷா

அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்