சிக்கனம்



ரம்யாவிற்கு எரிச்சல். புருஷன் பெண்டாட்டி சம்பாதிக்கிறோம். இரண்டு பிள்ளைகள் வைத்திருக்கிறோம். பிள்ளைகள் எதிர்காலத்துக்காக இப்போதே வாயைக் கட்டி வயித்தைக் கட்டி சேர்க்கலாம் என்றால் மாமனார் விடுவதில்லை.‘‘இதென்ன... கூட்டு, பொரியல் எதுவும் இல்லாமல் ரசம், சாம்பார்?’’ என குதிப்பார்.

அவருக்கு வாரம் இரண்டு நாளாவது கறி, மீன் வேண்டும். தினமும் முட்டை வேண்டும். ‘‘வயசான காலத்துல என் பொண்டாட்டியும் நானும் வயிறார சாப்பிட்டு நிம்மதியா போய்ச் சேரணும் இல்ல?’’ என்பார்.

‘மாசமானா அவரோட பென்ஷன் காசையும் கொடுக்கறார் இல்ல... அதான் இப்படி கேக்க வைக்குது. இது சரி வராது. தனிக்குடித்தனம் போயிட வேண்டியதுதான்’ என முடிவெடுத்து மாமியார் - மாமனார் இருக்கும் அறையை நெருங்கினாள். அவர்கள் பேசிக்கொள்வது காதில் விழுந்தது.

‘‘இருந்தாலும் நீங்க செய்யிறது சரியில்லைங்க. வீட்டுல சிக்கனமா செலவு பண்ணவே விட மாட்டேங்கறீங்க!’’ - இது மாமியார்.‘‘அடிப் போடி... நான் எனக்காகக் கேக்கல. புருஷன் - பொஞ்சாதி, சின்னப் பிள்ளைங்க இந்த வயசு நல்லா சாப்பிட்டாதானே நம்ம வயசுலேயும் நல்லா இருப்பாங்க. சிக்கனமா இருக்க வேண்டியதுதான்... அதுக்காக சாப்பாட்டுல கஞ்சத்தனம் காட்டக் கூடாது!’’ரம்யாவிற்கு தன் தவறு தெரிய, மனம் தெளிந்தாள்.                                 

காரை ஆடலரசன்