போகணும்!



‘‘நீங்க எப்படிச் சொல்லுவீங்களோ... அவங்க போயிதான் ஆகணும்!’’ மகன் விக்னேஷிடம் இப்படிச் சொல்லிக்கொண்டிருந்தாள் மருமகள் ஐஸ்வர்யா.

எதேச்சையாய் இதைக் கேட்ட ஜெயந்திக்கும் நரசிம்மனுக்கும் கலக்கம்.‘முதியோர் இல்லத்துக்கு அனுப்பி விடுவார்களோ... தனி வீடு பார்த்திருப்பார்களோ...’ இரவெல்லாம் நிம்மதியில்லை.அடுத்த நாள் காலை... விக்னேஷே பேச வந்தான்.

‘‘அப்பா, அம்மா... நானும் ஐஸ்வர்யாவும் நிறைய பேசி, விசாரிச்சிதான் இதுக்கு ஏற்பாடு பண்ணினோம். உங்களுக்குப் பிடிக்கும். நீங்க போய்த்தான் ஆகணும்’’ என்று அந்தப் பேப்பரை நீட்டினான்.கை நடுங்க அதை வாங்கிப் பார்த்தார்கள். மூன்று நாள் குலதெய்வ ட்ரிப், நான்கு நாள் மூணாறு சுற்றுலா, மற்றும் சில இடங்கள், பன்னிரெண்டாவது நாள் ஊர் திரும்புதல்.

‘‘என்னப்பா இது?’’ - ஒன்றும் புரியவில்லை இருவருக்கும்.‘‘புதுசா கல்யாணமாகி போன மாசம் நாங்க போயிட்டு வந்த இடங்கள்தான். இந்த வயசுல உங்களுக்குத்தான் இதெல்லாம் தேவை. மனசும் ரிலாக்ஸ் ஆகும், உடம்பும் ஆரோக்கியமாகும். அதனால ஐஸ்வர்யாதான் டிராவல்ஸை தேடிப் பிடிச்சு இதை ஃபிக்ஸ் பண்ணினா!’’ஆனந்தக் கண்ணீரோடு மகனையும் மருமகளையும் இறுக அணைத்துக்கொண்டார்கள் அவர்கள்.                              

உஷா மாத்ரு