எமோஜி



இனி இதுவே உலகப் பொதுமொழி!

‘‘அந்த நடனம் எனக்கு பிடித்திருக்கிறது’’ என்பதை இன்று நீங்கள் குறுந்தகவலாகப் பகிரவோ சமூக வலைத்தளங்களில் கருத்தாகப் பதியவோ ஐந்தாறு வார்த்தைகளை விரயம் செய்ய வேண்டியதில்லை. பக்கத்திலிருக்கும் படங்களைப் பயன்படுத்திவிடலாம். இவைதாம் எமோஜி (Emoji). வாட்ஸ்அப் வழியாக திடீர் பிரபலம் அடைந்திருக்கும் இது,

 எஸ்.எம்.எஸ்., சாட் உரையாடல்கள், சோஷியல் நெட்வொர்க் பதிவுகள் என எல்லாவற்றிலும் பரவலாய் புழக்கத்தில் உள்ளது. இது ஒரு காட்சிபூர்வ மொழி. ‘எமோஜி’ என்ற ஜப்பானிய மூலச்சொல்லுக்கே படத்தின் மூலம் ஒரு விஷயத்தை எழுதிக் காட்டுவது என்பதுதான் பொருள். E - படம்; Moji - எழுத்து.

இதை எமோட்டிகான் (Emoticon) உடன் குழப்பிக் கொள்ளலாகா. அது எழுத்துக்களைக் கொண்டு படத்தோற்றத்தை உண்டாக்குவது. இது படங்களையே எழுத்து போல் பயன்படுத்துவது. உதாரணமாய், சிரிக்க எமோட்டிகானில் :-). எமோஜியில். எமோஜி முதன்முறையாக 1998 வாக்கில் ஜப்பானில் அறிமுகமானது.

‘என்டிடி டொகோமோ’ என்ற நிறுவனம் தன் மொபைல்களில் இதைக் கொண்டு வந்தது.எமோஜி என்பது ஸ்மைலிகளின், குறியீடுகளின், இன்னபிற படங்களின் மகா தொகுப்பு. ஒவ்வொரு ஆபரேட்டிங் சிஸ்டமும் (உதா: ஆப்பிள், ஆண்ட்ராய்ட், விண்டோஸ்) யூனிக்கோடை நீட்டித்து பிரத்யேக எமோஜிக்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இவை போக வாட்ஸ் அப், ட்விட்டர் உள்ளிட்ட app-களுக்கென தனி எமோஜி செட்.

கிட்டத்தட்ட ஒட்டுமொத்த உரையாடலையும் வார்த்தைகள் ஏதுமின்றி இந்த எமோஜிக்களால் நிகழ்த்தி விடலாம் என்பதுதான் இதன் சிறப்பு. அல்லது ஒரு கட்டுரையையே எமோஜியில் எழுதி விடலாம். ‘இன்று உலகெங்கிலும் அதிவேகமாக வளர்ந்துவரும் மொழி எமோஜி’ என ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்திருக்கிறார்கள். 2013ல் இச்சொல் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் சேர்க்கப்பட்டது என்பதே இதன் பரவலை உணர்த்தப் போதுமானது.

இதன் பரவலாக்கத்திற்கான முக்கியக் காரணம்... எழுத்துக்களை விட படங்களைக் கொண்டு உரையாடும்போது தொடர்புகொள்ள எளிதாக இருக்கிறது எனவும், தமது எண்ணத்தை, உணர்ச்சியை இன்னும் துல்லியமாக வெளிப்படுத்த முடிகிறது எனவும் மக்கள் நினைக்கிறார்கள். எழுத்துக்களை விட காட்சிகள் வீரியம் மிக்கவை
தானே!

காட்சிபூர்வ மொழி மனித இனத்துக்குப் புதிதல்ல. நாம் தொடங்கியதே அங்கிருந்துதான். மொழி - குறிப்பாய் அதன் எழுத்து வடிவம் - உருவாகியிராத ஆரம்ப நாட்களில் ஒவ்வொரு கலாசாரத்திலும் இத்தகைய குறியீட்டு மொழி புழக்கத்தில் இருந்தது. வேல்ஸ் நாட்டிலிருக்கும் பேங்கார் பல்கலைக்கழகப் பேராசிரியரான விவ் ஏவான்ஸ் ‘‘இத்தகைய குறியீட்டு மொழிகளில் புகழ்பெற்ற எகிப்திய ஹெய்ரோக்ளிபிக்ஸ்சை விட அதி வேகமாகப் பரவி வருகிறது எமோஜி’’ என ஒப்பீடு செய்கிறார். எமோஜியை மக்கள் சுவீகரித்துக் கொள்ளும் வேகமும், அது பரிணாமம் பெற்று வரும் வேகமும், அதன் சீர்படும் தன்மையும் மனித சரித்திரத்தில் முன்னுதாரணமே இல்லாதது.

இன்று எல்லா பிரபல ஸ்மார்ட் போன்களின் கீபோர்ட்களிலும் எமோஜியைச் சேர்த்து விட்டார்கள். இங்கிலாந்தில் பத்தில் எட்டு பேர் எமோஜி பயன்படுத்துவதாக டாக்டாக் மொபைல் நிறுவனம் செய்த சர்வே ஒன்றின் மூலம் தெரிய வருகிறது. 18 முதல் 25 வயதுடையோரில் 72% பேர் சொற்களை விட எமோஜிக்கள் தம் உணர்வுகளை வெளிப்படுத்த பொருத்தமாக இருப்பதாய்ச் சொல்லி இருக்கின்றனர்.

29% பேர் தங்கள் மெசேஜ்களில் பாதியையாவது எமோஜியில் அனுப்புகின்றனர்.ஏற்கனவே வாட்ஸ் அப் குரூப்களில் எமோஜிக்கள் கொண்டு பாடலை அல்லது படத்தைக் கண்டுபிடிக்கும் விடுகதைகள் பிரபலமாக உலா வருகின்றன.

சமீபத்தில் ஆப்பிள் ஐஃபோன்களில் பயிலும் ஐஓஎஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் 8.3 ரிலீஸில் விதவிதமான தோல் நிறங்களைக் கொண்ட ‘டைவர்ஸி எமோஜி’க்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது வெள்ளைக்காரர்கள், கறுப்பினத்தவர்கள், இந்தியர்கள் என ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இனரீதியாய்ப் பாகுபடுத்தப்பட்ட எமோஜிக்கள். இது உரையாடல்களில் தம்மை இன்னும் நெருக்கமாய் முன்வைக்க உதவும்.

15 ஆண்டுகளாக உலகெங்கிலும் அச்சு ஊடகங்களிலும், மின் ஊடகங்களிலும் அதிகம் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களைப் பட்டியலிட்டு அறிவித்து வரும் குளோபல் லாங்குவேஜ் மானிட்டர் அமைப்பு, 2014ல் அதிகம் பயன்படுத்தப்பட்ட சொல்லாக ஹார்ட் எமோஜியை அறிவித்திருக்கிறது. இப்படி நடப்பது இதுவே முதல் முறை.
எமோஜிபீடியா என்ற தளம் ஒவ்வொரு எமோஜிக்கும் வெவ்வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டம்களிலும் ட்விட்டர்,

வாட்ஸ் அப் போன்ற app-களிலும் தற்போதைய வடிவம் என்ன, முந்தைய வடிவம் என்ன என ஒப்பீடு செய்து பட்டியல் தருகிறது.எமோஜி ட்ராக்கர் என்ற தளம் ட்விட்டரில் எந்தெந்த எமோஜி அதிகம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை லைவாகக் கணக்கிட்டுச் சொல்கிறது. அதன்படி இதுவரை அங்கு அதிகம் பயன்படுத்தப்பட்டது ஆனந்தக் கண்ணீர் எமோஜி! இதுவரை சுமார் 80 கோடி முறை அது ட்விட்டரில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

நாம் பயன்படுத்தும் எமோஜிக்களைக் கொண்டு நம் மனதைப் படிக்க முயல்கிறார்கள் ‘எமோஜி அனலைசிஸ்’ என்ற வலைத்தளத்தில். நீங்கள் சமீபமாகப் பயன்படுத்திய எமோஜிக்களை உள்ளிட்டால், உங்கள் மனதில் உள்ள பிரச்னை என்ன என்பதையும் அதற்கான தீர்வு ஒன்றையும் சிபாரிசு செய்கிறது அந்தத் தளம்.

வங்கி ஏடிஎம், மொபைல் லாக் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படும் நான்கு எண்களால் ஆன PINகளுக்குப் பதிலாக எமோஜிக்களைப் பயன்படுத்தவும் இப்போது ஆராய்ந்து வருகிறார்கள். 10 எண்களை மாற்றிப் போட்டால் சில ஆயிரம் PINகள்தாம் சாத்தியம். ஆனால், எமோஜிக்களைக் கொண்டு கோடிக்கணக்கான கோர்வைகள் சாத்தியம் என்பது ஒரு காரணம். மனிதர்களுக்கு தகவல்களை விட காட்சிகளை நினைவிற்கொள்வது எளிது.

அதனால் தனது எமோஜி பாஸ்கோடை ஒருவர் மறப்பதற்கான சாத்தியம் குறைவானது என்பது இன்னொரு காரணம். இந்த இரண்டையும் தாண்டி எமோஜிக்களுக்கு மக்களிடம் இருக்கும் செல்வாக்கினால், இதைச் செய்தால் தம் பிராண்டிற்கு கூடுதல் வசீகரம் கிடைத்து வியாபார லாபம் கிட்டும் என்ற நம்பிக்கை.

மனிதர்கள் குறியீட்டு மொழியில்தான் உரையாடலைத் தொடங்கினார்கள். இப்போது  மீண்டும் அதற்கே திரும்புகிறோம். நிர்வாணத்தில் தொடங்கிய நம் கலாசாரம்  இப்போது மீண்டும் அதை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் போன்றதே இதுவும். இதை  வளர்ச்சியாக, காலச்சுழற்சியின் விளைவாகப் பார்க்காமல் பின்னோக்கி நகர்வதாக  எமோஜி மறுப்பாளர்கள் சொல்கிறார்கள்.

எமோஜிக்களின் பெருக்கத்தால் மொழிகளின் எழுத்து வடிவம் அழியும் என மொழியியலாளர்களும் அஞ்சுகிறார்கள். எல்லாவற்றையும் படத்தைக் கொண்டே எளிமையாகவும் துல்லியமாகவும் சொல்லி விடமுடியும் என்கிறபோது, அங்கே எழுத்து என்பது அநாவசிய இடைச்செருகல் ஆகிவிடக்கூடும். இதனால் போகப் போக எழுதுவது குறையும்.

ஒருநாள் நின்றே போகும். எழுத்து வடிவம் இல்லாத மொழிகள் அழிந்து போகும் சாத்தியம் அதிகம்.ஆங்கிலத்தை உலகப் பொது மொழி என்பார்கள். ஆனால் எமோஜி என்ற இந்தப் புது மொழி ஆங்கிலத்தை, மாண்டரினைத் தாண்டி நிஜமான உலகப் பொதுமொழியாக உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. ஒன்று இருக்குமா மரிக்குமா என்ற கேள்விக்கு பதில் ‘தக்கன பிழைக்கும்’ என்பதுதான்.

மொழிகளின் இலக்கியத் தேவை இருக்கும் வரை எழுத்து மொழி நிச்சயம் வாழும். அஃதில்லாமல், தொடர்புக்கு மட்டுமே மொழி போதும் என்றாகும்போது எழுத்து காணாமல் போகக்கூடும் என்று தோன்றுகிறது.இன்னொன்றையும் கவனிக்க வேண்டும். இன்று குறைவான எண்ணிக்கையிலான எமோஜிக்கள் இருப்பதால், மக்கள் சுலபமாகப் பழகிக்கொள்ள ஏதுவாய் இருக்கிறது.

ஆனால் நாளை மொழிக்கு மாற்றாய் எமோஜி வர முயலும்போது, ஆயிரக்கணக்கான படங்களை அது இணைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அப்போது மக்கள் அதைக் கற்பதில் சிக்கல் நேரும். ஆக, இன்றைப் போலவே ஒரு மொழியுடன் இணைந்து துணை மொழியாய் நீடிப்பதே எமோஜியின் சரியான இடம். இன்னும் சரியாய்ச் சொன்னால் எமோஜி இன்னும் பரவும், அதிகம் பேர் அறிந்த துணை மொழியாய் அது திகழும், ஆனால் எழுத்து மொழிக்கு ஒரு காலத்திலும் அது மாற்றாகிவிடாது.

நாளை யாரேனும் எமோஜியை மட்டும் வைத்து நாவல் எழுதுவார்கள். ‘மிக நீளமான எமோஜி உரையாடல் இத்தனை மணி நேரங்கள் நிகழ்ந்தது’ என கின்னஸ் சாதனை பதிவார்கள். எமோஜி மட்டுமே பரிமாறிக் கொண்டு காதலித்ததாய் ஒரு ஜோடி பேட்டி தரும். இவை கைகளால் நடந்து மலையேறும் ஒருவரை நாம் வியந்து, வாய் பிளந்து பார்ப்பது போன்றதான விதிவிலக்கு நிகழ்வுதானே ஒழிய தினசரி வழக்காகி விடாது.

‘வெண்முரசு’ போன்ற காவிய முயற்சியை, அதன் சிடுக்கான மொழித் தேவையை வெறும் எமோஜியைக் கொண்டு ஒருவர் திருப்தி செய்து விட முடியுமா என்ன? அவ்வளவு ஏன், நீங்கள் தாமதமாக வருவதன் காரணத்தை உங்கள் காதலிக்கு எமோஜியைக் கொண்டு விளக்கம் சொல்லி சமாதானம் செய்துவிட முடியுமா?   

எமோஜி இலக்கியம்!

கடந்த ஏப்ரல் 11 அன்று பிரபல டென்னிஸ் வீரரான ஆண்டி முர்ரே திருமணம் செய்து  கொண்டார். அன்று முழுவதும் காலை எழுந்தது முதல் இரவு உறங்குவது வரை  என்னென்ன செய்தார் என்பதை முழுக்க எமோஜிக்களால் ஆன ஒரு ட்வீட்டாகப்  போட்டார். அது மிக ரசிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் ‘டெலிகிராஃப்’  பத்திரிகையில் பணிபுரியும் ரியன்னான் வில்லியம்ஸ் என்ற பெண், பிரபல  ஃபிரெஞ்ச் வரலாற்று நாவலான Les Miserables-ன் சுருக்கத்தை எமோஜிக்களாலேயே  எழுதிக் காட்டினார். (‘பொன்னியின் செல்வன்’ நாவலை எமோஜியில் எழுத யாரேனும்  முயலலாம்!)

எமோஜி சிக்கல்!

எமோஜியைப் பயன்படுத்துவதில் சில பிரச்னைகளும் இருக்கின்றன. முதல் பிரச்னை,  அதன் சீரின்மை. ஒவ்வொரு ஆபரேட்டிங் சிஸ்டத்திலும், ஒவ்வொரு app-லும் ஒரு  விஷயத்தைச் சுட்ட வெவ்வேறு படங்களைப் பயன்படுத்துகிறார்கள். உதாரணமாய்  ஐபோனிலிருந்து ஒரு பெண்ணுக்கு ‘அழகாக இருக்கிறாய்’ என்பதைச் சுட்ட ‘டான்ஸர்  எமோஜி’ அனுப்பினால், அது ஆண்ட்ராய்ட் போனில் ஒரு வினோத ஜந்து நடனமாடுவது  போல் தெரியும். சொல்ல வந்த விஷயமே மாறிவிடும்.அடுத்து, அதன்  தெளிவின்மை.

இந்த எமோஜிக்களை அனுப்பினால், நடனத்தை  ரசிப்பதாகவும் எடுக்கலாம்; பெண்ணைக் காதலிப்பதாகவும் எடுக்கலாம். நீங்கள் அனுப்பிவைக்கும் நபர் தப்பாகப் புரிந்துகொண்டால் பெருங்குழப்பம் நேரும்.எல்லாவற்றையும் படத்தைக் கொண்டே  எளிமையாகவும் துல்லியமாகவும் சொல்லிவிடமுடியும் என்கிறபோது, அங்கே எழுத்து  என்பது அநாவசிய இடைச்செருகல் ஆகிவிடக்கூடும்.

 சி.சரவண கார்த்திகேயன்